Published : 27,May 2022 01:47 PM
பான் இந்தியா அளவில் நடிகைகள் பங்குபெறும் ‘தி லெஜண்ட்’ இசை, ட்ரெய்லர் வெளியிட்டு விழா!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகள் பங்குபெறும் ‘தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியிட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
‘உல்லாசம்’, ‘விசில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள். ‘தி லெஜண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். மறைந்த நடிகர் விவேக் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடந்த மாதம் வெளியான ‘மொசலோ மொசலு’ என்கிற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழ், தெலுங்கின் லெஜெண்ட் இயக்குநர்களாகப் பார்க்கப்படும் மணிரத்னம், ராஜமெளலி, இயக்குநர் சுகுமார் ஆகியோரை வைத்து இந்தப் பாடலை வெளியிட்டு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தார் லெஜண்ட் சரவணன். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ‘வாடி வாசல்’ என்ற இரண்டாவது பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பிரபலமானது.
இந்நிலையில், இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியிட்டு விழா வரும் மே 29-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
The line up of the vibrant stars attending #TheLegendAudioLaunch!@hegdepooja - @tamannaahspeaks - @ihansika - @UrvashiRautela - @iamlakshmirai - @ShraddhaSrinath - #SreeLeela - @iamyashikaanand - @NupurSanon - @DimpleHayathi#TheLegend#TheLegendMoviepic.twitter.com/ErCGDFA2Yn
— The Legend (@_TheLegendMovie) May 27, 2022