[X] Close

நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்

குற்றம்

Investigation-committee-confirmed--encounter-is-fake-Hyderabad-doctor-rape-case

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதானவர்கள் போலியாக என்கவுண்ட்டர் செய்யப்பட்டதாக விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் 2019 ஆம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும், பின்பு காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது கலவையான விமர்சனங்களை முன்வைத்தது. ஒரு தரப்பினர் இந்த என்கவுண்ட்டரை கொண்டாடினார்கள். மற்றொரு தரப்பினர் உடனடி நீதிக்காக மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

image


Advertisement

இதனால் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது போலியான என்கவுண்ட்டரா? என்கவுண்ட்டர் செய்யப்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்த விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கென 3 பேர்கொண்ட கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைக்குழு இரண்டுமுறை கால அவகாசம் பெற்று நீண்ட விசாரணையை நடத்தி தற்போது 500க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்டஅறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் அந்த 4 பேரையும் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கில் என்கவுண்ட்டர் செய்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் என்கவுண்ட்டர் செய்த 10 காவலர்கள் மீது கொலைவழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணை குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

கொலை மற்றும் என்கவுண்ட்டர் நடந்தது எப்படி? முழு விவரம்...

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் லாரி ஒட்டுநர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். முன்கூட்டியே திட்டமிட்டு நால்வரும், அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

கொல்லப்பட்ட பெண் மருத்துவர், ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவரான இவர், கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்படும் பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக கொல்லூருக்குச் செல்வது வழக்கம். சம்பவம் நடந்த 27ஆம் தேதி அவசர பணிக்காக மருத்துவமனை செல்ல சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த‌ருக்கிறார்.

image

6 மணியளவில் அங்கு வண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற பிரியங்காவை, முகமது அஷாவின் கும்பல் நோட்டமிட்டிருக்கிறது. ஏற்கெனவே மதுபோதையில் இருந்த அவர்கள், குரூர புத்தியால் சதித்திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார்கள். அதன்படி பிரியங்காவின் இருசக்கர வாகனத்தின் பின்பக்க டயரை பஞ்சராக்கிய கும்பல், அவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது. இரவு ஒன்பது இருபது மணிக்கு சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த பிரியங்கா, இருசக்கர வாகனத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டார். வண்டி பஞ்சர் ஆகியிருப்பதால் அதை தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்டார்.

அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுநர் முகமது அஷாவும், கிளீனர் சிவாவும் உதவுவதாக கூறி பிரியங்காவை ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கு சின்னகேசவலு, நவீன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறுகிறார், காவல் ஆணை‌ர் சஞ்சனர்.

பிரியங்காவின் உடலை தார்பாயில் சுற்றி லாரியில் போட்டு எடுத்துச் கொண்டு கட்டபள்ளி என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள பாலத்தின் அடியில் வைத்து பிரியங்காவின் சடலத்தை தீயிட்டு கொளுத்திய நால்வரும், தப்பிச் சென்றுள்ளனர். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும்தான் குற்றத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்திருந்தது சைபராபாத் காவல்துறை.

image

என்கவுன்ட்டர் நடந்தது எப்படி ?

இந்நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை ஹைதராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையான ‘44 நெடுஞ்சாலை; அருகே 4 பேரையும் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் பெண் மருத்துவரை எப்படி கொலை செய்தனர்? என போலீஸார் செய்து காட்டச்சொல்லியுள்ளனர்.

அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் நான்கு பேரும் தப்பி ஓடியதாக தெரிகிறது. அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீஸாரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்பிற்காக 4 பேரையும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில்தான் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close