Published : 29,Apr 2022 09:37 PM
ஐபிஎல் ஏலத்தில் கவனம் செலுத்தும் ரிலையன்ஸ் - உரிமத்தை கைப்பற்றப்போவது யார்?

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஐபிஎல் உரிமத்தை வாங்குவதற்கு ரிலையன்ஸ் திட்டமிட்டுவருகிறது. 2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை நடக்க இருக்கும் ஐபிஎல்க்கான ஏலம் வரும் ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலத்தை கைப்பற்ற ரிலையன்ஸ் திட்டமிட்டிருக்கிறது.
ஸ்டார் குழுமத்தின் தலைவராக இருந்த உதய் சங்கர் மற்றும் ராபர்ட் முர்டாக் ஆகியோர் இணைந்து லுபா சிஸ்டம்ஸ் என்னும் புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனமும், ரிலையன்ஸ் குழுமமும் இணைந்து ஐபிஎல் ஏல உரிமத்தை கைப்பற்ற முயற்சி எடுத்துவருகிறது.
ரிலையன்ஸ் முதலீடு செய்திருக்கும் வயாகாம் நிறுவனத்தில் ரூ.13500 கோடியை லுபா சிஸ்டம் முதலீடு செய்திருக்கிறது. வயகாம் நிறுவனம் கடந்த வாரம் ஸ்போர்ட்ஸ் 18 என்னும் புதிய சானலை தொடங்கி இருக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் முக்கிய பொறுப்பில் இருந்த பலர் இந்த விளையாட்டு சானலில் இணைந்திருக்கிறார்கள்.
ஐபிஎல் ஏல உரிமை ஆரம்ப கட்டத்தில் சோனி நிறுவனத்திடம் இருந்தது. ஸ்டார் குழுமத்தின் தலைவராக உதய் சங்கர் இருந்தபோதுதான் இந்த உரிமம் ஸ்டார் வசம் வந்தது. தற்போது உதய் சங்கர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழு மற்றும் ரிலையன்ஸ் குழுமம் இணைந்திருப்பதால் ஐபிஎல் ஏலம் பரபரப்பாகி இருக்கிறது.
ஏற்கெனவே ஸ்டார் (+டிஸ்னி) , சோனி (+ஜீ), அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஐபிஎல் ஏலத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமமும் களம் இறங்கி இருக்கிறது.