Published : 06,Apr 2022 06:10 PM

வந்துவிட்டது அடுத்த கொரோனா திரிபு... இந்தியாவிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் 'XE' உறுதி

First-case-of-the-Omicron-XE-variant-detected-in-Mumbai--confirms-BMC-commissioner

கொரோனா தொற்றின் அடுத்த திரிபான `ஒமைக்ரான் எக்ஸ்.இ.’ திரிபு, இந்தியாவில் முதன்முதலாக மும்பையை சேர்ந்த ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பி.எம்.சி. (மும்பை) கமிஷ்னர் இக்பால் சிங் சஹால் கூறியுள்ளார். சுமார் 376 பேருக்கு சோதனை செய்யப்பட்டத்தில், ஒருவருக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து இக்பால் சிங் தெரிவித்துள்ள தகவலில், “பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 230 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்தான். இவர்களில் 228 பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என தெரிகின்றது. மற்றவர்களில் கப்பா திரிபு ஒருவருக்கும், எக்ஸ்.இ. திரிபு ஒருவருக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. புது திரிபு உறுதியானவர்களுக்கு தீவிர பாதிப்பு எதுவும் இல்லை” என்றுள்ளார். இந்த எக்ஸ்.இ. திரிபு, முதன்வகை ஒமைக்ரானை விடவும் 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

image

முன்னதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நேற்று தெரிவித்திருக்கும் தகவலின்படி, `புதிய திரிபு கொரோனா திரிபுகள், இந்தியாவில் டெல்டா திரிபு ஏற்படுத்திய அளவுக்கு மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் தற்போது இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சதவிகிதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக நோய் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகமிருப்போர் பலரும் முறையாக தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர்.

தற்போது சில நாடுகளில் கண்டறியப்பட்டுவரும் எக்ஸ்.இ. வகை கொரோனா திரிபு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்துவருகிறோம். இப்போதுவரை எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இந்த திரிபு எவ்வித மோசமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. போலவே தடுப்பூசிக்கு மிகச்சிறப்பாக கட்டுப்படுகிறதும்கூட. எனவே மக்கள் யாரும் இப்போதைக்கு இதுபற்றி பயப்பட வேண்டாம்” என்று தெரிகிறது.

இந்த எக்ஸ்.இ. கொரோனா திரிபு, ஒமைக்ரானின் இரு முக்கிய திரிபுகளான பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திரிபாக சொல்லப்படுகிறது. இந்த இரு திரிபுகளும் தனித்தனியே இந்தியாவில் பெருமளவில் பரவி, பின் அழிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒமைக்ரான் எக்ஸ்.இ. திரிபு, இங்கிலாந்தில் அதிகம் பரவிவருகின்றது.

சமீபத்திய செய்தி:`கொரோனா இன்னும் முடியவில்லை... மாஸ்க் அணியுங்கள்’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்