Published : 06,Apr 2022 05:45 PM

`கொரோனா இன்னும் முடியவில்லை... மாஸ்க் அணியுங்கள்’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Tamil-Nadu-Health-secretary-J-Radhakrishnan-warns-people-on-Covid-spread

கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும்கூட, கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாராத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு செய்தியறிக்கையொன்று விடுத்துள்ளார். அவர் விடுத்திருக்கும் அந்த அறிக்கையில், “கொரோனா பாதிப்பு நாள், அன்றாடம் 20 என்ற அளவிலேயே உறுதியாகி வந்தது. இந்த எண்ணிக்கை தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதிய தொற்று மெல்ல மெல்ல கூடிவருகிறது. அதே போன்று சேலம், திருப்பூர் மற்றும் ஒரு சில மாவட்டங்களிலும் ஓரிரு புதிய தொற்று கண்டறியப்படுகிறது.

image

பொது இடங்களில் வருவதற்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று தான் பொது சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். மற்றபடி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைக்கான அறிவிப்புகள் திரும்ப பெறவில்லை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தவகையில் கொரோனா இன்னமும் அறிவிக்கப்பட வேண்டிய நோய் தான். எனவே கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். போலவே கூட்டம் கூடுவதை தவிர்த்தல், காற்று இல்லாத இடங்களை தவிர்த்தல் போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும்.

உலகில் இப்போதும் 7 முதல் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று அன்றாடம் தொற்று உறுதி செய்யப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம் என நினைத்து கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டால் அது முட்டாள்தனம். பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக முதியவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

image

அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்வது தொடர வேண்டும். அதே நேரம் மரபணு பரிசோதனைக்கு மாதிரிகள் தொடர்ந்து அனுப்பப்பட வேண்டும். நாம் இதுவரை எடுத்த முயற்சிகளின் பலனை இனிமேல் அனுபவிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வரும் நாட்களில் மிக அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.