Published : 22,Mar 2022 12:00 PM

உலக தண்ணீர் தினம் இன்று: இந்தியாவின் பல்வேறு பகுதிகளை அச்சுறுத்தும் நிலத்தடி நீர் மட்டம்!

world-water-day-today-groundwater-level-threatening-various-parts-of-india-including-capital-city-delhi

“இந்த பூமில எங்கயும் தண்ணி இல்லன்னு எங்களுக்கு தெரியும்… தண்ணி இருக்கற ஒரே இடம் தண்ணி கடைங்க தான்… அவங்களுக்கு எப்படி தண்ணி கிடைக்குதுங்கறது தான் ரகசியம்… இங்க இருக்கற மரத்துல பச்சை இலைய கசக்குனா காய்ஞ்ச இலைய கசக்குன மாதிரி தான் நொறுங்கிப் போகுது… அந்த அளவுக்கு காத்துல ஈரமில்லாம போச்சு… இப்ப நாமெல்லாம் தரைல போட்ட மீனு ஆயிட்டோம்… ஒரு மீன் துள்ளி குதிக்கறத இன்னொரு மீன் அது உயிரோட இருக்கறதா நினைச்சிக்கிடுது… ஆனா இதுதான் கடைசி துள்ளல்னு அதுக்கு தெரியாது… ஒரு காலத்துல ஜனங்க வாந்தி பேதி காலரா வந்து செத்த மாதிரி இப்ப தாகம் எடுத்து கொத்து கொத்தா சாகப் போகுதுங்க… வாந்தி பேதிக்கு கூட மருந்து இருக்குது… ஆனா தாகம் எடுத்து சாகறத தடுக்கறதுக்கு இந்த உலகத்துல என்னம்மா மருந்து இருக்குது… தண்ணி தான் மருந்து… அந்த மருந்து இந்த பூமில இருந்து மறைஞ்சு பல வருசமாச்சு…” இப்படியான வசனங்கள் தமிழ் திரைப்படமான ‘அறம்’ படத்தில் வரும். அந்த படத்தில் வரும் காட்சி போல தான் இன்று பூமியின் பல்வேறு பகுதிகள் தண்ணீர் இல்லா காடுகளாக மாறி நிற்கின்றன. 

image

உலக அளவில் சுமார் 220 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாக சில புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இத்தகைய சூழலில் உலக மக்கள் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் தேதியன்று ‘உலக தண்ணீர் தினம்’ கடந்த 1993-லிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு தண்ணீர் சிக்கனம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்?

ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினம் வெவ்வேறு விதமான கருப்பொருளின் கீழ் அணுகப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘Making Groundwater - Invisible Visible’. மாறிவரும் வாழ்க்கை சூழலால் நிலத்தடி நீர் ஆதாரம் என்பது கானல் நீராகி விட்டது. இருந்தாலும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து உள்ள அந்த அறிய பொக்கிஷத்தை வெளிக்கொணரும் விதமாக இந்த கருப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் காணாமல் போன நிலத்தடி நீர் ஆதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட உள்ளது.  

image

இந்தியாவின் நீர் ஆதாரம் எப்படி?

உலக மக்கள் தொகையில் 16% மக்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவு சுமார் 33 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். அதில் வெறும் 4% மட்டுமே சுத்தமான நன்னீர் ஆதராங்கள் இருப்பதாக தகவல். அதனால் இதனை ஒப்பீட்டளவில் பார்த்தால் தண்ணீர் ஆதாரத்தில் பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்தியா: நிலத்தடி நீர் ஆதாரத்தில் என்ன சிக்கல்?

இந்திய நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரத்தில் 70% சிந்து-கங்கை-பிரம்மபுத்ரா சமவெளியில் மட்டுமே கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அது மொத்த புவியியல் பரப்பளவில் வெறும் 30% மட்டுமே. நாட்டின் வடமேற்கு பிராந்தியங்களில் தான் அதிகளவில் நீர் ஆதாரம் இருப்பதாக தெரிகிறது. அதாவது பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகள் இதில் அடங்கும். இந்த பகுதிகளில் ஆதாரம் இருந்தும் அதனை அளவுக்கு அதிகமாக உறியப்பட்டு வருவதால்  நிலத்தடி நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல். 

image

அதே நேரத்தில் நாட்டின் மேற்கு பிராந்தியங்களான ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரத்தின் நிலை வேறு விதமாக உள்ளது. இந்த பகுதிகளில் மழை பொய்த்து போய் விட்ட காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் ரீசார்ஜ் ஆகாமல் உள்ளது. அதாவது மழை இருந்தால் நீர் நிலைகள் நிரம்பும். அதன் மூலம் நிலத்தில் நீர் மட்டம் உயிர் பெறும், உயரும். அது இந்த பகுதியில் நடக்கவே இல்லை.  

மறுபக்கம் நாட்டின் தெற்கு பிராந்தியமான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் சூழல் காரணமாக நிலத்தடி நீர் போதுமான அளவு இல்லை என சொல்லப்பட்டுள்ளது. 

நிலத்தடி நீர் ஆதாரம்: இந்த மாநிலங்களுக்கு அச்சுறுத்தல்!

இந்தியாவில் 64% நிலத்தடி நீரின் நிலை பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதுவே நிலத்தடி நீரின் பாதுகாப்பு தன்மை குறித்த சராசரியை சில மாநிலங்கள் உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அது அச்சுறுத்தும் வகையிலான சங்கடங்களை தருகிறது. டெல்லி 8.82%, பஞ்சாப் 11.33%, ராஜஸ்தான் 12.54%, ஹரியானா 21.28% மட்டுமே நிலத்தடி நீரின் நிலை பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. 

image

தேசிய சராசரியை விட நிலத்தடி நீர் மட்டம் பின்தங்கியுள்ள உள்ள மாநிலங்கள்!

>தமிழ்நாடு 35%

>தெலுங்கானா 54.50%

>கர்நாடகா 57%

தகவல் உறுதுணை: DNA

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்