Published : 12,Mar 2022 03:15 PM

கிரிக்'கெத்து' 25: கெயில் அதிரடி முதல் மலிங்கா வேகம் வரை - ஐபிஎல் ஸ்டார்களும் சாதனைகளும்!

Top-and-Greatest-moments-of-the-IPL-Cricket-history-ahead-of-the-IPL-2022-season-from-Gayle-Dhoni-Malinga-and-all

நொடிக்கு நொடி அதிரடிக்கும் த்ரில்லுக்கும் கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காத இந்தியன் பிரீமியர் லீக்-கின்ன் (ஐபிஎல்) பதினைந்தாவது சீசன் வரும் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் முதல் சுற்றானது குரூப் சுற்றாக நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு குரூப்பிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. 

image

இந்த சூழலில் 15 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் என்றென்றும் சிறந்து விளங்கும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் தருணங்களை கிரிக்'கெத்து'-வின் இந்த அத்தியாயத்தில் ரீவைண்ட் செய்வோம். 

image

>பிராண்டன் மெக்கல்லம்: 73 பந்துகளில் 158 ரன்கள்!

சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட் பார்மெட் கவனம் ஈர்த்து வந்த காலம் அது. அதன் வெளிப்பாடாக 2008-இல் ஐபிஎல் தொடர் ஆரம்பமானது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்தது கொல்கத்தா. தொடக்க வீரர்களாக கங்குலி மற்றும் மெக்கல்லம் களம் இறங்கினர். முதல் 6 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டாட் வைத்திருந்தார் மெக்கல்லம். ஆனால் அதற்கடுத்து அவர் தனது அதிரடி ஆட்டத்தை நிறுத்தவே இல்லை. அந்த இன்னிங்ஸ் முழுவதும் ஆடியிருந்தார் 10 பவுண்டரி, 13 சிக்ஸர் விளாசியிருந்தார். ‘ஒன் மேன் ஆர்மியாக’ அவரது ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. அந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியிருந்தது.  

image

>மகேந்திர சிங் தோனி: 20 பந்துகளில் 51 ரன்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலை மகன் தோனி கடந்த 2008 முதல் இப்போது வரை ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார். அவர் பல மாஸான மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆடியுள்ளார். அதில் ஒன்று தான் இந்த 51 ரன்கள். 2012 சீசனில் மும்பை அணிக்கு எதிரான எலிமினேஷன் போட்டியில் தோனி இந்த ரன்களை எடுத்திருந்தார். அவரது ஆட்டத்தின் மூலம் 187 ரன்களை குவித்தது சென்னை அணி. அதை சேஸ் செய்ய முடியாமல் வீழ்ந்தது மும்பை. அந்த சீசனில் சென்னை அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. 

image

>டிவில்லியர்ஸ்: 17 பந்துகளில் 47 ரன்கள்!

360 டிகிரி பேட்ஸ்மேன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். இதுவும் 2012 சீசனில் நடைபெற்ற போட்டியின் போது பதிவு செய்யப்பட்டது. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து அசத்தியிருப்பார் டிவில்லியர்ஸ். 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்த அபார இன்னிங்ஸை டெலிவர் செய்தார் டிவில்லியர்ஸ். கிறிஸ் கெயிலுக்கு அடுத்ததாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் விளாசியவர்களில் டிவில்லியர்ஸ் உள்ளார். மொத்தம் 251 சிக்ஸர்களை அவர் ஐபிஎல் அரங்கில் விளாசியுள்ளார்.

image

>ஹாட்-ரிக் மன்னன் மிஸ்ரா!

2008, 2011 மற்றும் 2013 என மூன்று சீசன்களில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அமித் மிஸ்ரா. இன்று வரை அவரது சாதனையை எந்தவொரு பவுலரும் முறியடிக்கவில்லை. மொத்தம் 154 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்ரா 166 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பேட்ஸ்மேன்கள் ஆட்சி செய்யும் மாடர்ன்-டே கிரிக்கெட்டில் தனது சுழல் பந்துவீச்சு மூலம் கெத்து காட்டிய மிஸ்ராவின் கெத்தே தனிதான்.

image

>மலிங்கா: 3.4 ஓவர்கள் - 13 ரன்கள் - 5 விக்கெட்டுகள்! 

2008 முதல் 2019 வரை மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளையாடியவர் மலிங்கா. 2011 சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 3.4 ஓவர்கள் வீசி, 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை அள்ளியவர் மலிங்கா. அதே போல ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலரும் மலிங்கா தான். மொத்தம் 170 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் சென்னை வீரர் பிராவோ அதனை முறியடிக்க வாய்ப்புகள் உள்ளது. 

image

>கிறிஸ் கெயில்: 66 பந்துகளில் 175 ரன்கள்!

டி20 கிரிக்கெட் என்றாலே ஆறடி உயரம் கொண்ட கெயிலின் பெயர் எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வரும். ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது பேட்டால் செங்கோல் ஆட்சி நடத்தியவர். 2013 சீசனில் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 66 பந்துகளில் 175 ரன்களை பதிவு செய்திருந்தார் கெயில். இன்று வரை இதுதான் ஐபிஎல் அரங்கில் தனி ஒரு பேட்ஸ்மேன் ஒரே இன்னிங்ஸில் பதிவு செய்த அதிகபட்ச ரன்களாகும். அதே போல ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் பதிவு செய்துள்ளவரும் அவரே. மொத்தம் 357 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார் கெயில். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 17 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். 

>அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்: விராட் கோலி - 6283 ரன்கள் 

>அதிக பவுண்டரி: ஷிகர் தவான் - 654 பவுண்டரிகள் 

>அதிக அரைசதம்: டேவிட் வார்னர் - 50 அரைசதம்

>அதிக சதம்: கிறிஸ் கெயில் - 6 சதம்

image

>அதிவேக அரைசதம்: கே.எல்.ராகுல் - 14 பந்துகள்

>சிறந்த ஸ்ட்ரைக் ரேட்: ரஸ்ஸல் - 178.57 

>சிறந்த ஆவரேஜ்: கே.எல்.ராகுல் - 47.43  

>அதிக மெய்டன் ஓவர்கள்: பிரவீன் குமார் - 14 ஓவர்கள்

>அதிக டாட் பந்துகள்: ஹர்பஜன் சிங் - 1268 

>ஒரே இன்னிங்ஸில் அதிக டாட் பந்துகள்: தீபக் சஹார் - 20 டாட் பந்துகள்

>சிறந்த எகானமி: ரஷீத் கான் - 6.33 

>சிறந்த பவுலிங் இன்னிங்ஸ்: அல்சாரி ஜோசப் - 3.4 ஓவர்கள் - 12 ரன்கள் - 6 விக்கெட்டுகள் 

சென்ற அத்தியாயம்: கிரிக்'கெத்து' 24: நூற்றாண்டின் சிறந்த பந்து - ஷேன் வார்னே நினைவுகள்!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்