Published : 26,Jan 2022 02:27 PM
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் - சலசலப்பு
சென்னை ஆர்.பி.ஐ அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாத காரணத்தால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதன்பிறகு நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.
இதுதொடர்பாக நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சிலர் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் இதில் தலையிட்டு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர். இதன் பிறகு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.