Published : 02,Dec 2021 09:25 PM

Eco India: இமயமலை அடிவாரத்தில் நதிகளில் தேங்கும் விதவிதமான குப்பைகள் - களமிறங்கும் பெண்கள்

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மனிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

நாம் தூக்கி எறிகிற குப்பைகள் மறைவதில்லை. பெரும்பாலான குப்பைகள் இந்த மண்ணையும் காற்றையும் கடலையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன. முறையாக மேலாண்மை செய்யாத குப்பைகளெல்லாம் இந்த சமூகத்திற்கு சுமை என்றுதான் சொல்லவேண்டும். இமய மலையடிவாரத்தில் வாழும் சில கிராமத்து பெண்கள் தங்கள் வீட்டு முற்றத்திற்கு வந்த இந்த பிரச்சைனைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.

image

சுதேர் என்பது மலைகள் சூழ்ந்த ஒரு சிறு நகரம். ஆனால், இது தற்போது குப்பைகளால் சூழப்பட்டிருக்கிறது. நெகிழி தொடங்கி, மின்னணு கழிவுகள், சுகாதார மற்றும் மருத்துவக் கழிவுகள் என்று விதவிதமான குப்பைகள் தினமும் குவிகின்றன. இந்த குப்பைகளை ஒழிப்பதுதான் அன்றாடம் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும் இந்த பிரச்னைக்கான மூலக்காரணம் சுதேர் நகரமல்ல. அண்டையில் இருக்கும் தர்மசாலா நகரம்தான். அழகிய ஏரிகளையும் மலைத்தொடர்களையும் கொண்ட சுதேர் மற்றும் தர்மசாலா ஆகிய இரண்டு நகரங்களும் இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கின்றன. இங்குள்ள பழமையான கோயில்களை தரிசிக்க ஆண்டுதோறும் 16 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

image

திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சர் அடைந்த தலாய்லாமா இங்குதான் வாழ்கிறார். இங்குவாழும் சுமார் 5,300 பேர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தூக்கியெறியும் குப்பைகள் இமயத்தின் அடிவாரத்தில் குவிகின்றன. இங்குப் பொழிகின்ற மழையால் குப்பைகள் பள்ளத்தாக்கு வழியாக அடித்துச்செல்லபட்டு சுதேர் நகருக்கு வருகின்றன. இதனைத் தடுத்துநிறுத்த இங்குள்ள 200 பெண்கள் அணி திரண்டனர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாதம் இருமுறை ஒன்றுகூடி மலையடிவாரத்திலும் நதிகளிலும் தேங்கும் குப்பைகளை இவர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

image

சுனிதா தாக்கூர் என்பவர்தான் குப்பைகளை அகற்றும் முயற்சியை முன்னெடுத்தவர் ஆவார். மஹிளா மண்டல் என்ற பாரம்பரிய இந்திய பெண்கள் அமைப்பை ஏற்படுத்தினார். அரசின் நிதி மற்றும் பிற உதவிகள் இன்றி இந்த குழுவினர் உழைக்கின்றனர். இவர்களுக்கு பாதுகாப்புக்கு கையுறைகூட கொடுப்பதற்கு ஆள்கிடையாது. வெறும் கையிலேயே குப்பைகளை அள்ளி, இவர்கள் பகுதியில ஓடும் ஆறு, நதிகளை சுத்தம் செய்துவருகின்றனர். ஒவ்வாமை தொடங்கி சிறுநீரகப் பிரச்னை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்திலும்இருக்கின்றனர். குப்பைகளால் ஏற்படும் மாசுதான் இந்த நோய்களுக்கு காரணம் என்று இந்த வட்டார மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைவிட பெரிய பிரச்னை என்னவென்றால் இறந்த விலங்குகளையும், பறவைகளையும் இங்குள்ள குப்பைமேடுகளில் போடுவதால் அதை சாப்பிட வல்லூறுகள் வருகின்றன. அவை மக்களையும் தாக்குவதோடு மனிதர்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளிலும் நீர் அருந்துகின்றன.

image

ஆனால் தர்மசாலாவில் இயங்கிவரும் ’வேஸ்ட் வாரியர்ஸ்’ என்கிற தன்னார்வ குழு ஒன்று, 2012 ஆம் ஆண்டுமுதல் இந்தக் குழுவினருக்கு மறைமுகமாக உதவி வருகிறது. இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த மக்களுக்கு உதவுவதே முக்கிய இலக்காகவும் கொண்டுள்ளது. இந்த அமைப்பு நகரத்தில் அனைத்துப்பகுதிகளையும் தொடரந்து சுத்தம் செய்கின்றனர். மட்டுமின்றி உள்ளூர் மக்களிடம் இந்த பிரச்னை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர். மேலும் இந்த அமைப்பு குப்பைகளை பல வகையாக பிரிக்கத் தொடங்கியுள்ளது. பயன்படத்தக்கவை மறுசுழற்சிக்கு அனுப்படுகின்றன.

image

ஆனாலும் சுதேர் பகுதியில்வாழும் பெண்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் குப்பைகளை ஒழிப்பதற்கான போராட்டம் இங்கு தொடர்கிறது. சில நேரம் தர்மசாலாவுக்கு சென்று அவர்கள் குப்பைகளைக் கொட்டுவதைக் கண்டித்து போராட்டமும் நடத்துகிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட போராட்டம் நடந்திருக்கிறது. இங்குள்ள சுற்றுப்புறத்தை ஆரோக்கியமாவும் சுத்தமாகவும் வைப்பதற்கான இலக்கை அடைய நிறைய உழைக்க வேண்டியுள்ளது. ஆனால் சுதேர் பகுதிப் பெண்கள் இங்கு ஒரு பலமான சமூக அமைப்பை ஏற்படுத்தி குப்பை பிரச்னையை ஒழிக்க போராடுவதை எண்ணி பெருமைகொள்ள முடிகிறது.

Eco India: குப்பைகளிலிருந்து எரிசக்தி; சாதக பாதகம் என்ன?

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்