[X] Close

”உரையாடலையே விரும்புகிறேன்; வன்முறையை அல்ல” - சர்ச்சைகளுக்கு ஜெய்பீம் இயக்குநர் விளக்கம்!

சினிமா

JaiBhim-director-Gnanavel-answers-questions

சூர்யா நடித்து தயாரித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை சில விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. இந்த விமர்சனங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ஜெய் பீம் திரைப்படத்தின்  இயக்குநர் த.செ.ஞானவெல் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், திரைப்படத்தில் ராஜாக்கண்ணுவின் சமூகம் குறவர் சமூகமாக காட்டப்படாமல் ஏன் இருளர் சமூகமாக காட்டப்படுகிறது; படத்தில் அக்னி கலசம் கொண்ட காலண்டர் ஏன் வைக்கப்பட்டது, குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி மட்டுமே படம் அமைந்துள்ளதா உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார். அவற்றின் விவரம்:

திரைப்படத்தில் ராஜாக்கண்ணுவின் சமூகம் குறவர் சமூகமாக காட்டப்படாமல் ஏன் இருளர் சமூகமாக காட்டப்படுவது குறித்து பேசுகையில், “நான் கள ஆய்வில் இருந்து பார்க்கையில், குறவர் சமூகத்தினர் மட்டுமே பொய் வழக்கு போடப்பட்டு பாதிக்கப்படுவதாக இல்லை. பழங்குடியினர் எல்லாருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களில் யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று நான் இன்னும் தேடிய போது, அதில் குறவர்களும் இருளர்களும் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அதில் இருளர்கள் அடிப்படை வாக்காளர் அட்டை இல்லாமலும், நில உரிமை இல்லாமலும், ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க வழியில்லாதவர்களுமாக எனக்கு தெரிந்தனர். ஆகவே அவர்களை முன்னிறுத்தினேன். எனில், ‘குறவர் சமூகத்தினர் பாதிக்கப்படவில்லையா அதிகம்’ என்று கேட்டால் அப்படியல்ல. நான் கதை தேர்வு செய்கையில், இச்சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். அதனால் அதை நோக்கி கதையை இயற்றினேன்.


Advertisement

image

அப்படி இருக்கையில், படம் வெளியான பிறகு, பலரின் கவனமும் இருளர் சமூகத்தினர் மீது திரும்பியது. அவர்களை முன்னேற்ற நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, பல கைகள் ஒன்றிணைந்தன. அதை பார்த்த ஒருசிலர், ‘இந்த கவனமும் நடவடிக்கையும் குறவர்கள் மீது செலுத்தப்பட்டிருக்க வேண்டியதோ - குறவர்கள் மீது கவனம் செலுத்தப்படாமல் விடுபட்டுவிட்டதோ’ என்ற கேள்வியை எழுப்புகையில்தான் நான் அதை உணர்ந்தேன். அந்த அதிர்வை இப்போதுதான் உணர்கிறேன். அதற்காக படம் எழுதும்போது, நான் இதுகுறித்து யோசிக்கவே இல்லையென சொல்லவரவில்லை. என் பார்வையில், இருளர்கள் குறவர்களைவிடவும் சற்று நலிவடைந்த நிலையில் இருந்தவர்களாக - குடியுரிமையே அற்றவர்களாக - வாக்காளர் அடையாள அட்டையே இல்லாதவர்களாக இருந்தனர். இவர்களின் வலி, எனக்கு கூடுதல் வலியை தந்தது. ஆகவே அந்த மாற்றத்தை செய்தேன். அதிக வலி நிரம்பியவரை காட்சிப்படுத்த நினைத்து, அதை செய்தேன்.

ராஜாக்கண்ணுவின் சமூகம் ஏன் மாற்றம் பெற்று காட்டப்பட்டது என்பதை என்னிடம் கேள்வியாக கேட்கையில், என்னால் அதற்கு அகமகிழ்வுடன் பதில் கூறி என் தரப்பு விளக்கத்தை அளித்திருக்க முடியும். இப்போதும் அப்படியே என்தரப்பு விளக்கத்தை சொல்கிறேன். ஆனால் இதற்கு முன்பு வரை பெரும்பாலும் அவையாவும் அச்சுறுத்தல்களாகவே இருந்தது. அதனாலேயே ‘இவர்களுக்கு பதில்கூற நம்மால் முடியாது’ என அமைதியாகிவிட்டேன். இந்தப் படம், பெரும்பாலோனரிடையே உரையாடலை தொடங்கியிருக்கிறது என்பது எனக்கு மிக மிக மகிழ்ச்சி. உரையாடுவோம்... எல்லாவற்றை பற்றியும். ஒவ்வொரு காட்சிக்கும் என் தரப்பில் அதற்கு என்ன காரணம் இருக்கிறதென நான் விளக்கி சொல்லவே விளைகிறேன். இப்படம், எனக்கு இயக்குநராக இரண்டாவது படம்தான். நானும் இப்போதுதான் கற்றுக்கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், பெர்ஃபெக்‌ஷனை நோக்கி எதிர்ப்பார்த்தால் எப்படி? நானும் கற்றுக்கொண்டு அடுத்தடுத்த நிலைகளில் சரிசெய்வேன். எப்போதுமே ஒரு படைப்பாளி உருவாகையில், இப்படியான சில பிரச்னைகள் வருவது இயல்புதான். உரையாடல் மூலமே அதை சரிசெய்ய முடியும். உரையாடல்தான், படைப்பாளியை செம்மைப்படுத்தும். அதைவிட்டுவிட்டு, ‘நீ இப்படி செய்ததற்காக உன்னை கழுவில் ஏற்றுவேன்’ என கலைஞன் மீது வன்மத்தை தெளித்தால் எப்படி? எப்படி ஒரு புது முயற்சியை ஒரு படைப்பாளியும் கலைஞனும் உருவாவர்கள்?” என்றார்.

படத்தில் அக்னி கலச காலண்டரில் வைக்கப்பட்ட காட்சி குறித்து கேள்வி கேட்கப்படுகையில், “அதை வெறும் ஒரு பின்னணி பொருளாகத்தான் நான் பார்த்தேன். மற்றபடி உள்நோக்கத்துடன் பார்க்கவில்லை. ஆனால் அதற்கு வெவ்வேறு விளக்கம் தரப்படும் போதுதான், நான் அதை உணர்ந்தேன். மற்றபடி அதை நான் உள்நோக்கத்துடன் வைக்கவில்லை. படத்தை ப்ரீமியம் ஷோவாக கிட்டத்தட்ட 1000-த்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களுக்கு எங்கள் படக்குழு திரையிட்டு காண்பித்தது. அவர்கள் யாருமே, அந்த காலண்டர் குறித்து எதுவுமே என்னிடமோ குழுவிடமோ விமர்சனமாக சொல்லவில்லை. ஒருவேளை ஒரு எதிர்விணை வந்திருந்தாலும், நாங்கள் அதை அப்போதே மாற்றியிருப்போம். ஏனெனில் எங்கள் நோக்கம் யாரையும் புண்படுத்துவதல்ல. எதிர்விணைகளே வராததால், எங்களுக்கும் அது தெரியவில்லை.

image

ஆனால் படம் வெளிவந்த பிறகு, அதுபற்றி பேசினர். அப்போதும் உடனடியாக அது மாற்றப்பட்டுவிட்டது. அப்படி மாற்றப்படுவதற்கு, தொழில்நுட்ப ரீதியாக சில நாள்கள் ஆனது. இறுதியில் மாற்றிவிட்டோம். ஆக, எங்களுக்கு விஷயம் தெரிந்தவுடன் நாங்கள் மாற்றிவிட்டோம். நாங்கள் யாரையும் புண்படுத்த நினைத்திருந்தால், அந்த மாற்றம் அங்கு நிகழ்ந்திருக்காது... எங்கள் நோக்கம் நிச்சயம் அல்ல. அந்த காலண்டர் காட்சி, ஒரு கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு பிழை. அவ்வளவே. அது தெரியவந்தவுடன் நாங்கள் அதை திருத்திக்கொண்டோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி: "விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை"- அன்புமணிக்கு சூர்யா பதில்

தொடர்ந்து வில்லனாக சித்தரிக்கப்பட்ட காவல் அதிகாரி குறிப்பிட்ட சமூகத்தினராக காட்டியிருப்பதாக வரும் குற்றச்சாட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “படத்தில் நல்ல காவல் அதிகாரிகளும் காட்டப்பட்டுள்ளனர். அவர்களை யாரும் எங்க சமூகத்தினர் எனக்கூறி - பெயர் பற்றி விளக்கம் கூறி உரிமை கொண்டாடவில்லை. அது ஐஜி பெருமாள்சாமியாகட்டும் அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரியாகட்டும்... அவர்களை யாரும் உரிமை கொண்டாடவில்லை. அவரை மட்டும் அநாதையாக விட்டுவிட்டார்கள் என்பதில் எனக்கும் வருத்தம் இருக்கிறது”

ஜெய் பீம் படம், வன்னியர் சமூகத்தை மட்டும் தாக்குவதாக படம் அமைந்திருப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டபோது, “என்னை பொறுத்தவரை இப்படம் ஒரு நீதிமன்ற போராட்டம் - வழக்கியல் பார்வை என்பதுமட்டும்தான் கதை. அதனால்தான் நான் பார்வதி அம்மாளை (நிஜ செங்கேணி) நேரில்கூட சந்திக்கவில்லை. எப்போது படத்தில் குறவர் சமூகத்தை இருளர் சமூகம் என்று கொண்டுவந்தேனோ அப்போதே இது நீதிமன்ற போராட்டம் மட்டுமே என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். நான் சந்தித்தது, வழக்கறிஞர் சந்துருவை மட்டுமே. ஆக, நான் எந்த சமூகத்தையும் தாக்கும் நோக்கத்தில் யோசிக்கக்கூட இல்லை.

image

இது ஒரு புனைவு கதைதான் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்... பார்வதி அம்மாள் நிஜத்தில் இவ்வழக்குக்கு வந்தது அவருடைய 45 வயதில்தான். ஆனால் என் கதையில் அவர் சிறுவயது பெண். அதேபோல குறவர் - இருளர் மாற்றமும் செய்துள்ளேன். ஆக, இது புனைவு கதை; நீதிமன்ற கோணம் மட்டுமே என்னுடைய பார்வை. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் நீதிமன்ற போராட்டம். அவ்வளவே. மற்றபடி, இதில் சமூகம் சார்ந்து நான் எதுவும் யோசித்து செய்யவில்லை. அப்படி யோசித்து கதையும் எழுதவில்லை. எங்களை மீறு அது அப்படி அமைந்தது, எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு கவனக்குறைவு. அதையும் நாங்கள் சரிசெய்துவிட்டோம்” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close