Published : 11,Nov 2021 06:56 PM

"1947-ல் பெற்றது பிச்சை... 2014-ல் நிஜ சுதந்திரம்"- கங்கனா கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

Kangana-Ranaut-comment-that-India-got-real-freedom-in-2014-triggers-outrage

இந்தியாவின் சுதந்திரம் தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பேசிய கருத்துகள் கடுமையான கண்டனங்களை பெற்று வருகிறது.

கங்கனா ரனாவத்தும் சர்ச்சைகளும் பிரிக்க முடியாது என்பது போல் இருக்கிறார். கடந்த சில நாட்களாக பத்ம விருது வென்ற மகிழ்ச்சியில் சர்ச்சைக்கு லீவு விட்டிருந்தவர் இன்று மீண்டும் தொடங்கிவிட்டார். ஆங்கில ஊடகம் ஒன்றின் வருடாந்திர நிகழ்வில் கங்கனா கலந்துகொண்டு பேசினார். இதில் அவர் தெரிவித்த கருத்துகள் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

அந்த நிகழ்வில் சுதந்திரப் போராட்டம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி குறித்து பேசினார். "பிரிட்டிஷாரின் நீட்சி தான் காங்கிரஸ். 1947-ல் பெற்றது சுதந்திரம் அல்ல, அது பிச்சை. 2014-ல் தான் எங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. பிச்சை எடுத்து சுதந்திரம் வந்தால் அது உண்மையான சுதந்திரமாக இருக்க முடியுமா?" என்று கங்கனா பேசினார்.

image

இந்த கருத்தை எதிர்த்து நெட்டிசன்கள் கங்கனாவுக்கு கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். நடிகை ஸ்வரா பாஸ்கர், கங்கனா பேசும் இந்த வீடியோ கிளிப்பை பகிர்ந்து, “ இந்தப் பேச்சுக்கு கைதட்டுகிற முட்டாள்கள் யார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றுள்ளார்.

இதேபோல் மற்றொரு ட்விட்டர் பயனர், “ பிளாஸ்டிக் வாளைப் பிடித்துக்கொண்டு, மரக்குதிரையின் மீது அமர்ந்து போர்வீரராக மாறிய ஒரு அரசாங்க துரோகி, நமது சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கிறார். நம் தியாகத்தின் பலன்களை, கங்கனா பிச்சை என்று அழைக்கிறார்" என்றுப் பதிவிட்டுள்ளார்.

பாஜக எம்பி வருண் காந்தியும் இந்த விவகாரத்தில் கங்கனாவை கடுமையாக சாடியிருக்கிறார். “ மகாத்மா காந்தியின் தியாகத்தை அவமதிக்கிறார். சிலசமயம், காந்தியை கொன்றவர்களை புகழ்கிறார். இதோ இப்போது சுதந்திரத்துக்காக தியாகம் செய்த நமது மங்கல் பாண்டே, ராணி லக்‌ஷ்மிபாய், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பல லட்சக்கணக்கான வீரர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துள்ளார். இதைப் பைத்தியக்காரத்தனம் என சொல்வதா அல்லது தேசத் துரோகம் என சொல்வதா?" என்று வருண் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ப்ரீத்தி ஷர்மா மேனன் என்பவர், இந்த விவகாரம் தொடர்பாக கங்கனா ரனாவத் மீது புகார் அளித்துள்ளார். இதேபோல், “ நடிகை கங்கனா ரனாவத்தின் இழிவான பேச்சை ஆம் ஆத்மி கடுமையாகக் கண்டிக்கிறது" ஆம் ஆத்மியும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. தொடர்ந்து கங்கனாவின் பேச்சுக்கு கடுமையான எதிர்வினைகள் கிடைத்து வருகின்றன.

- மலையரசு 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்