Published : 20,Aug 2017 04:12 PM
இலங்கைக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி

இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் சதமடித்து அசத்தினார்.
இலங்கை தம்புல்லாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 44-வது ஒவரிலேயே 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்களான குணதிலகா 35 ரன்களும், நிரோஷன் திக்வெல்லா 64 ரன்களும் எடுத்தனர். குஷால் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்ஷர் படேல் மூன்று விக்கெட்களையும், கேதர் ஜாதவ், சாஹல், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.
217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 4 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானும், கேப்டன் விராட் கோலியும் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் விளாசி ரன்கள் சேர்த்தனர். ஷிகர் தவான் 71 பந்துகளில் சதமடித்து ரசிகர்களை கவர்ந்தார். கேப்டன் கோலி 50 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 29-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. தவான் 90 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 20 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 70 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.