Published : 24,Oct 2021 02:01 PM
நிலச்சரிவுகளை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்க தீவிர முயற்சி

நிலச்சரிவுகளை முன் கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு அமைப்புகளும் ராணுவ பொறியியல் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் வீடு்கள் சாலைகளும் பாதிக்கப்பட்டு பெரும் பொருளதார இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 15 சதவிகித பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ளவையாக இருப்பதுடன் நிலச்சரிவால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், எல்லைப்புற சாலைகள் நிறுவனம் ஆகிய அரசு அமைப்புகளும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன. இதற்கிடையே குறைந்த செலவிலான நிலச்சரிவு கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளதாகவும் அது சோதிக்கப்பட்டு வருவதாகவும் மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது.