Published : 19,Oct 2021 06:27 PM
புதுச்சேரியில் நடக்காத தேர்தல்: நடைமுறையில் நடத்தை விதிகள்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத போதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடி வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக கடந்த மாதம் 22 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அதில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக வழக்கு தொடரப்பட, கடந்த 8 ஆம் தேதி புதிய அட்டவணை வெளியிடப்பட்டது. அதில், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு சரியாக இல்லை என புகார் எழ தேர்தல் நிறுத்தப்பட்டது. திருத்தங்களுடன் அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் 4 மாதம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
சூழலில் கடந்த 22ஆம் தேதி அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் தற்போதுவரை அமலில் உள்ளது. அதனை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியும், தேர்தல் நடத்தை விதிகளை நீக்க உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. அதனால், தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்க 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல முடியாமல் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.