[X] Close

உலக ரேபிஸ் தினம்: ரேபிஸ் தாக்கிய மனிதர்களால் பிழைக்க முடியுமா? - மருத்துவர் விளக்கம்

சிறப்புக் களம்

World-Rabies-Day-2021--Will-a-Rabies-positive-person-can-survive

செல்லப்பிராணிகளுக்கான பட்டியலை எடுத்தால் இன்றும் என்றும் பலரின் விருப்பமான பிராணி, நாய்கள்தான். மனிதர்களை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றார்போல வாஞ்சையுடன் நடந்துக்கொள்வது தொடங்கி, அந்த வீட்டுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது வரை நம்பிக்கைக்குரிய பிராணியாக விளங்கும் நாய்கள், சில நேரங்களில் நோய் ஆபத்துகளையும்கூட வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும். அப்படி நாய்கள் கொண்டுவரும் சூழலுள்ள முக்கியமான ஒரு பாதிப்பு, ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடியால் ஏற்படும் வைரஸ் பாதிப்பு.


Advertisement

இந்த ரேபிஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் ரேபிஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ரேபிஸ் நோயை பொறுத்தவரை, இதற்கு சிகிச்சையே கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், இதற்கு எதிரான தடுப்பூசி உள்ளது. அந்த தடுப்பூசியை, நாய் பிறந்து முதல் 100 நாள்களுக்குள் போட்டுவிட்டால், அந்த நாய் பிற்காலத்தில் ரேபிஸால் தாக்கப்படாமல் இருக்கும். ரேபிஸூக்கு எதிரான இந்த தடுப்பு மருந்தை தனது குழுவினருடன் இணைந்து கண்டுபிடித்தது, பிரெஞ்சு விஞ்ஞானியான லூயிஸ் பாஸ்டர் என்பவர். இவர், செப்.28, 1895-ல் மறைந்தார். அவரது நினைவு நாள்தான், உலக ரேபிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவர் மறைந்தது 1895 என்றிருந்தாலும்கூட, கடந்த 2007 முதல்தான் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

image


Advertisement

2007-ம் ஆண்டு ரேபிஸ் கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்வில் முதன்முறையாக உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்பட தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீம் அடிப்படையில் இந்த தினம் அனுசரிக்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு இத்தினத்தின் தீம் - ‘Rabies: Facts, not Fear’. அதாவது, ‘ரேபிஸ்: உண்மைகள், பயமல்ல’ என்பது.

ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி வந்து ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டாலும்கூட, இன்றும் 9 நிமிடங்களுக்கு ஒருவர் ரேபிஸ் காரணமாக இறக்கின்றார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதிலும் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்தான் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

image


Advertisement

ரேபிஸ் பற்றிய இந்த விழிப்புணர்வின்மை குறித்தும், ரேபிஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் கால்நடை மருத்துவர் சொக்கலிங்கம் ரங்கநாதனிடம் பேசினோம். “ரேபிஸ் என்பது, முழுமையாக தடுக்கப்படக்கூடிய ஒரு வைரஸ் பாதிப்புதான். ரேபிஸை தடுப்பதற்கு தேவைப்படுவதெல்லாம், ஒரே ஒரு தடுப்பூசி. இந்த தடுப்பூசியை நாய்கள் போட்டுக்கொண்டால், அந்த நாய் அதன்பின் மனிதர்களையோ, உடனிருக்கும் நாய்களையோ கடித்தாலும்கூட நோய் பரவாது. முக்கியமாக, அந்த நாய்க்கும் பாதிப்பு ஏற்படாது. இந்தத் தடுப்பூசி, பிறந்து முதல் 100 நாள்களுக்குள் நாய்க்கு போடப்பட்டிருக்க வேண்டும். 100 நாள் எனக்குறிப்பிட காரணம், அதுவரை தாயிடமிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு இருக்கும். ஆகவே ஓரளவு அவை பாதுகாப்பாக இருக்கும். இருந்தும் ஒருசில சூழல்களில் 50 நாள்களேயான நாய்க்குட்டிக்குக்கூட பாதிப்பு உறுதியாக சூழலெல்லாம் உள்ளது என்பதால், விரைந்து நாய்க்குட்டிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

சிலர் தெருநாய்களை எடுத்து வளர்ப்பதுண்டு. அவர்களும் தங்கள் நாய்களை கால்நடை மருத்துவர்களிடம் காண்பித்து உரிய நேரத்தில் அதற்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். பொதுவாக ரேபிஸ் என்பது ஒரு நாயிடமிருந்து இன்னொரு நாய்க்கு பரவக்கூடியது என்பதால், தடுப்பூசி செலுத்தாத குட்டிகளை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வதை அதன் வளர்ப்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.

image

ரேபிஸ் தடுப்பூசி போலவே வருடம் ஒருமுறை போடப்படும் நாய்களுக்கான கூட்டு தடுப்பூசி மற்றும் மருத்துவ பரிந்துரையில் அளிக்கப்படும் குடற்புழு நீக்க மருந்துகளை அளிக்க வேண்டியதும் அவசியம். கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் ஈன்றேடுக்கும் குட்டிகளுக்கு, தாய்ப்பால் வழியாக, நோய்த்தடுப்பு சக்தி கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் சிலர் குட்டிகளுக்கு தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருப்பார்கள். ஆனால், இந்த ஒப்பீடு எல்லா நேரமும் சரியாக இருக்காது. அதனால் முன்முடிவுகளோடு இருக்காமல், குட்டிகளுக்கும், பிறந்து 45 நாள்களுக்குள் அவற்றுக்கு தேவைப்படும் அனைத்து தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுவிட வேண்டும். ரேபிஸ் தடுப்பூசிதான் 100 நாள்களுக்குள் போடப்பட்டால் போதுமென்ற விதிக்குள் அடங்குவது. பிற தடுப்பூசிகள் யாவும், பிறந்து முதல் 45 நாள்களுக்குள்ளே குட்டிகளுக்கு தடுப்பூசி போடவேண்டுமென்பது விதி. பின் 21 நாள்களுக்குப் பிறகு, தடுப்பூசியின் செயல்பாட்டை அதிகரிக்கும் மருந்தும் போடப்பட வேண்டும். அதன்பிறகு, வாழ்நாள் முழுவதும், வருடம் ஒருமுறை அவற்றுக்கு தடுப்பூசி போடவேண்டும்.

நாய்க்குட்டிகள் ஒரு வயதை கடக்கும்வரை, வெளி இடங்களுக்கு அவற்றை அதிகம் அழைத்துச் செல்வதை தவிர்ப்பதும் நல்லது. நடைப்பயிற்சிக்குக் அழைத்துச்செல்வதைக்கூட தவிர்க்கவும். தடுப்பூசி போடப்பட்டாலும்கூட, அந்த மருந்து குட்டியின் உடலில் முழுமையாக கலப்பதற்கு சில நாள்களாகும். ஆகவே தடுப்பூசி போட்டு, அடுத்த 20 நாள்கள்வரை குட்டிகளை வெளியில் அழைத்துச்செல்வதை தவிர்க்கவும்.

தொடர்புடைய செய்தி: தழைக்கும் மனிதம்: தாயை இழந்து தவிக்கும் நாய் குட்டிகளுக்கு ஆதரவளிக்கும் இளைஞர்

ரேபிஸால் தாக்கப்பட்ட நாய்கள், 48 மணி நேரத்துக்குள் இறந்துவிடும் அளவுக்கு ஆபத்தானது. இதில் முதல் 24 மணி நேரம் இருட்டை பார்த்தால் பயப்படுவது, ஓரிடத்தில் பதுங்கிக்கொண்டு இருப்பது, மிகவும் சோர்வாக இருப்பது என்றிருக்கும். பின் அடுத்த 24 மணி நேரம், ஓரிடத்தில் அமரவே அமராது. ஓடிக்கொண்டே இருக்கும். அதேபோல அதிகமாக எச்சிலை உமிழும்; தூங்காமல் இருக்கும்; ஏதாவதொரு பொருளை கடித்துக்கொண்டே இருக்கும் (அவற்றின் பற்கள் உடைந்தாலும்கூட கடித்துக்கொண்டே இருக்கும்). இதில் எந்த அறிகுறி ஏற்பட்டாலும் அந்த நாய்க்குட்டி /நாயை, அதன் வளர்ப்பாளர்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

ரேபிஸால் பாதிக்கப்படும் நாய்கள், மனிதர்களை தாக்கினால் அவர்கள் பிழைப்பதும் மிக மிக அரிது. ஏனெனில் இதுவரை ரேபிஸால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையேதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே மனிதர்களும் இவ்விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது அவசியம். நாயிடம் சிறு மாறுதல் தெரிந்தாலும், உடனடியாக அதை கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். ஒருவேளை ஏதேனும் நாய் கடித்துவிட்டாலும்கூட, மனிதர்களும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

image

நாய்க்கடித்து, 12 மணிநேரத்திற்குள் மருத்துவரை அனுகி ‘இம்யூனோ க்ளோபுளின்’ அல்லது ‘ஆண்டி ரேபிஸ் சீரம்’ போட்டுக்கொண்டால் அதன் தாக்கத்திலிருந்து விடுபடலாம். பின் 3--ம் நாள், 7-ம் நாள், 14-ம் நாள், 19-ம் நாள், 21-ம் நாள் இதேபோல மருந்து எடுக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தையும் பின்பற்றினால், ரேபிஸ் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து மனிதர்கள் பிழைக்கலாம். இதில் ஏதாவதொன்றை கைவிட்டால்கூட, பின் பிழைப்பது கஷ்டம்தான்” என்றார்.

ஆக, ரேபிஸ் என்பது மனிதர்களுக்கு ஏற்பட்டால் மிகதுரிதமான நடவடிக்கை அவசியம். நாய்களுக்கு ஏற்படும்போது, அவற்றை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.


Advertisement

Advertisement
[X] Close