[X] Close

சந்திரசேகர் ஆசாத் Vs ஆகாஷ் ஆனந்த் - உ.பி-யில் பட்டியலின மக்களை கவரும் புதுயுக தலைவர் யார்?

சிறப்புக் களம்

Akash-Anand-Vs-Chandra-Shekhar-Aazad-on-2022-Uttar-Pradesh-elections

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலின மக்களின் ஒற்றைப் பிரதிநிதியாக மாயாவதி இருந்த காலம் போய், அம்மக்கள் மத்தியில் புதிதாக நிறைய தலைவர்கள் உருவாகி வருவது கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. அப்படி இந்தப் புதுயுக பட்டியலின மக்களுக்கான அரசியலில் வளரும் புதுத் தலைவர்கள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.


Advertisement

உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக, பட்டியலின மக்கள் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் அதன் தலைவர் மாயாவதியை ஆதரித்து வருகின்றனர். இருப்பினும், 2014 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஜாதவ் அல்லாத சமூகங்களின் ஆதரவைப் பெற்று மாயாவதியின் அரசியல் வீழ்ச்சிக்கு வித்திட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிஎஸ்பி-க்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. 2017, 2019 தேர்தல்களும் மாயாவதிக்கு இறங்குமுகமே.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிஎஸ்பி-க்கு 10 இடங்கள் கிடைத்தன. ஆனால், அப்போது சமாஜ்வாதி கட்சியுடன் பிஎஸ்பி அமைத்த கூட்டணியின் காரணமாக அத்தனை இடங்கள் கிடைத்தன. இந்தக் கூட்டணி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதனால், உத்தரப் பிரதேச அரசியலில் பகுஜன் சமாஜ் தனித்து நிற்கிறது. இந்தமுறை பட்டியிலன மக்கள் மாயாவதியை ஆதரிப்பார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமே. ஏனென்றால், பட்டியலின மக்களின் ஒற்றைப் பிரதிநிதியாக மாயாவதி இருந்த காலம் போய், அம்மக்கள் மத்தியில் புதிதாக நிறைய தலைவர்கள் உருவாகி வருவதும், அவர்களின் எழுச்சியும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.


Advertisement

'பீம் ஆர்மி' சந்திரசேகர் ஆசாத்: உத்தரப் பிரதேச பட்டியலின மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரும் தலைவராக உருவெடுத்து வருபவர் சந்திரசேகர் ஆசாத். இரண்டு ஆண்டுகள் முன்பு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜும்மா மசூதியில் நடந்த பேரணியில் அரசியலமைப்பின் நகலையும் அம்பேத்கரின் புகைப்படத்தையும் கையில் ஏந்திக்கொண்டு கலந்துகொண்ட பின் பொதுவெளியில் பிரபலமான நபராக அறியப்படும் சந்திரசேகர் ஆசாத், மேற்கு உத்தரப் பிரதேசமான சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி என்ற கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர்.

image

அந்தப் பகுதிகளில் சந்திரசேகர் ஆசாத் ராவண் என்று அழைக்கப்படும் இவர் சமூக ஆர்வலர் மட்டுமில்லாமல் வழக்கறிஞரும்கூட. பட்டியலினத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். தனது சிறுவயது முதலே அப்பகுதியில் பட்டியலின மக்களின் குரலாக எதிரொலித்து வரும் ஆசாத், பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய கன்ஷிராம் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு 'பீம் ஆர்மி' என்ற அமைப்பை நிறுவியவர். முழுக்க முழுக்க பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படும் வகையில் இந்த அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வரும் ஆசாத், உத்தரப் பிரதேச மக்கள் மத்தியில் பிரபலமானது சஹாரான்பூர் கலவரத்தின்போது தான்.


Advertisement

சில ஆண்டுகள் முன்பு, சஹாரான்பூர் பகுதியில் பட்டியலினத்தவர்களுக்கும் மாற்று சமூகத்தினவர்களுக்கும் இடையே நடந்த கலவரத்துக்குப் பிறகு வலுவான போராட்டங்களை இவரின் 'பீம் ஆர்மி' முன்னெடுத்தது. அதில் இருந்து லட்சக்கணக்கான உத்தரப் பிரதேச பட்டியலின இளைஞர்களின் புதுயுக தலைவராக உருவெடுத்து வருகிறார் சந்திரசேகர் ஆசாத். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு பாஜக அரசை கடுமையாக எதிர்த்தும் வருகிறார். சில ஆண்டுகள் ஆசாத், சமாஜ் கட்சி என்ற அரசியல் கட்சியையும் நிறுவி, தேர்தல் அரசியலிலும் இறங்கியுள்ளார்.

பட்டியலின மக்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாற்றாக உருவெடுத்து வரும் இவரின் கட்சி, 2019-ல் ஆரம்பிக்கப்பட்ட பிறகு புலந்த்ஷகார் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதல்முறையாக களம்கண்டது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், 10,000 வாக்குகளுக்கு மேல் பெற்று புலந்த்ஷகார் சட்டப்பேரவைப் பிரிவில் தனது இருப்பை உணர்த்தியது. இதன்பின் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஆசாத் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மேற்கு உ.பி.யில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றனர். பின்னர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் தேர்தலில், ஆசாத் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் உடன் கூட்டணி அமைத்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் வரவுள்ள தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் ஆசாத். வலுவான கூட்டணி அமைக்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். அகிலேஷ் யாதவ் முதல் ஒவைசி வரை அவருடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்தத் தேர்தலில் அவர் முக்கிய ரோல் வகிக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் பட்டியலின மக்களின் புதிய சக்தியாக உருவெடுப்பார் ஆசாத்.

image

ஆகாஷ் ஆனந்த்: பாஜகவும் தன் பங்கிற்கு பட்டியலின மக்களைக் கவரும் வகையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் பட்டியிலன பிரதிநிதியாக மூன்று பேருக்கு இடம் கொடுத்தது. இப்படி சந்திரசேகர் ஆசாத் மற்றும் பாஜகவின் நெருக்கடிகளை சமாளிக்க மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் களத்தில் இறக்கிவிட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசியலில் நுழைந்தபோதே, தேர்தலில் போட்டியிடவோ அல்லது எந்தப் பதவியையும் வகிக்கவோ மாட்டேன் என்றும், மாறாக தனது சேவைகளை கட்சிக்கு அர்ப்பணிப்பேன் என்ற உறுதிமொழியுடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இவரின் பின்னால் கணிசமான பட்டியலின இளைஞர்கள் அணிதிரண்டு வருகிறார்கள். மாயாவதி செல்லாத பகுதிக்கு எல்லாம் ஆகாஷ் ஆனந்த் செல்லத் தொடங்கியுள்ளார். கட்சித் தொண்டர்களை வலுப்படுத்தி, வழக்கமான அரசியலுக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டு வரும் வகையில் செயல்பட்டு வரும் ஆகாஷ் ஆனந்தை அதற்கேற்ப கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக்கி இருக்கிறார் மாயாவதி.

image

'பீம் ஆர்மி' தலைவர் சந்திர சேகர் ஆசாத் பட்டியலின மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ள பகுஜன் சமாஜ், அவரை சமாளிக்கும் பொருட்டு ஆகாஷ் ஆனந்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. ஆகாஷ் ஆனந்த்தும் பாஜக ஆட்சியில் பட்டியலின மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக இப்போதே பிரசாரங்களை தொடங்கிவிட்டார். அவரின் பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்கால முகம் என்று இப்போதே அவர்மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி இரண்டுமே 403 தொகுதிகளிலும் தனித்தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்து இப்போதே பிரசாரக் களங்களை முற்றுகையிட தொடங்கியுள்ளன. இந்த இரு இளம் தலைவர்களும், அவர்களின் அரசியலும், பட்டியலின ஆதரவும் எப்படி இருக்கப்போகிறது என்பதை வரவிருக்கும் தேர்தல் தீர்மானிக்கும்.

- மலையரசு

தொடர்புடைய செய்திக் கட்டுரை: சமூகப் பிரதிநிதித்துவம், நேரடி அணுகுமுறை... பிரியங்காவின் உ.பி. தேர்தல் கள வியூகங்கள்!


Advertisement

Advertisement
[X] Close