[X] Close

மதுரா, அயோத்தி, காசி... உ.பி தேர்தலுக்காக ஓபிசி மக்களை ஈர்க்க பாஜக வகுக்கும் வியூகங்கள்!

சிறப்புக் களம்

Analysis-about-new-BJP-plan-for-OBC-outreach-in-UP

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஓபிசி சமூக மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள பாஜக தமது ஆட்சியைத் தக்கவைக்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜக, அதற்கான வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் ஓபிசி பிரசாரத்தை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. யாதவர்கள் அல்லாதவர்கள் மற்றும் ஓபிசி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் வாக்குகளை கவரும் முயற்சியாக இந்த பிரசாரம் அமையும் என பாஜக எதிர்பார்க்கிறது.

இது தொடர்பாக 'தி பிரின்ட்' செய்தித் தளத்துடன் பேசியுள்ள உத்தரப் பிரதேச பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் நரேந்திர காஷ்யப், "கட்சி நிர்வாகிகளை கொண்டு மாநில அளவில் 32 குழுக்களை உருவாக்கி இருக்கிறோம். இந்தக் குழு மாநிலத்தின் 75 மாவட்டங்களின் ஆறு பகுதிகளில் பிரசாரங்களை ஏற்பாடு செய்யும். அயோத்தி, கான்பூர், மதுரா மற்றும் காசி போன்ற இடங்களில் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.


Advertisement

இந்தப் பேரணிகளில் பொதுமக்களும் அழைக்கப்படுவார்கள். எங்கள் மூத்த தலைவர்கள் இந்தப் பேரணிகளில் உரையாற்றுவார்கள். நாங்கள் சாதிவாரியாக ஓபிசி மாநாடுகளை நடத்துவோம். அதில், சாதித் தலைவர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

image

பீகாரில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. இதற்கு மத்தியில் ஓபிசி பக்கம் பாஜக கவனம் செலுத்த தொடங்கியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.


Advertisement

பாஜகவைப் பொறுத்தவரை இதை ஒரு முக்கியமான சோதனையாக கருதுகிறது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக ஓபிசி அரசியல், பாஜகவின் இந்துத்துவா அரசியலின் முக்கிய அம்சமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் பாஜக பெற்ற வெற்றிகளுக்கு மிகப்பெரிய பின்புலமாக இருந்தது ஓபிசி வாக்குகள்தான். அதனால்தான் இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற ஓபிசி வாக்குகள் முக்கியதுவம் என்னவென்பதை புரிந்துகொண்டு இப்போது முதலே பணிகளை ஆரம்பித்துள்ளது.

இந்த முறையும், ஓபிசி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறும் நரேந்திர காஷ்யப், "நாங்கள் மாநிலத்தில் 10 கோடிக்கும் அதிகமான ஓபிசி மக்களை இலக்கு வைத்துள்ளோம். ஓபிசி சாதிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் அந்த சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ பதவிகள் மற்றும் 2 டஜன் அமைச்சர் பதவிகள் கொடுத்துள்ளோம். எங்கள் கட்சியில் போதுமான ஓபிசி தலைமை உள்ளது. இதனால் அந்த சமூகங்கள் தேர்தலில் எங்களுக்கு முழுமையாக ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

image

இந்தப் பிரதிநிதிதுவத்துக்கு மத்தியில் மற்ற நடவடிக்கைகளையும் யோகி ஆதித்யநாத் அரசு கடந்த சில வாரங்களில் செய்துள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் மந்திர் வளாகத்திற்கு செல்லும் சாலைக்கு முன்னாள் உ.பி முதல்வர் கல்யாண் சிங் பெயரிட முடிவு செய்துள்ளது. ஏனென்றால், பாஜகவின் முதல் ஓபிசி தலைவர் என்றால், அவர் கல்யாண் சிங்தான் என்கிறார்கள் அக்கட்சி உறுப்பினர்கள். மருத்துவக் கல்லூரிகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இடஒதுக்கீடு அறிமுகம் மற்றும் மழைக்கால கூட்டத்தொடரில் 127-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றம் உள்ளிட்டவையும் கைகொடுக்கும் என நம்புகிறது அக்கட்சி.

இந்த விஷயங்களையும், ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, இப்போது ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 27 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளது போன்ற விஷயங்களையும் கட்சி சார்பிலான இந்தப் பேரணிகளை எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close