Published : 08,Aug 2021 07:47 AM
‘விதிகளுக்குட்பட்டே கைது நடவடிக்கை’- ராஜ் குந்த்ரா தொடர்ந்த மனு நிராகரிப்பு

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
ராஜ் குந்த்ரா மற்றும் அவரது தொழில் கூட்டாளியான ரியான் தார்பேவும் தங்களை கைது செய்யும் முன் குற்றவியல் சட்டப்படி நோட்டீஸ் தரப்படவில்லை என்றும் எனவே தங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவும் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கைதுக்கு முன் தாங்கள் நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள மனுதாரர்கள் தரப்பு தவறி விட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளி ரியான் தார்ப் ஆகியோர் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாக கூறி அவர்களது மனுவை நிராகரித்தார்.
ராஜ் குந்த்ராவும் அவரது கூட்டாளி ரியான் தார்ப்பும் ஆபாச படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.