[X] Close

நவரசா: ஒன்பது படைப்புகளில் எதை விட எது பெட்டர்? - சிறப்புப் பார்வை

சிறப்புக் களம்

Navarasa-Movie-Review

மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ் 'நவரசா'. டெல்லிகணேஷ், நெடுமுடி வேணு, அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சூர்யா, சித்தார்த், பிரசன்னா, விஜய் சேதுபதி, அதர்வா, யோகிபாபு, அழகம் பெருமாள், ரேவதி, பார்வதி, ரோகினி, ரம்யா நம்பீசன், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.


Advertisement

கருணை, கோபம், காதல், நகைச்சுவை, அசூயை, வீரம் முதலான ஒன்பது வகையான மனித உணர்வுகளை மையமாக வைத்து ஒன்பது தனித்தனி கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தன் அண்ணன் மரணத்திற்கு காரணமானவரை கொலை செய்துவிட்டு, கொலைக்குப் பின் கருணை வேண்டி காத்திருக்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதில் முக்கியக்  கதாபாத்திரங்களில் ரேவதி, பிரகாஷ்ராஜ். உண்மையில் சொல்ல முற்படுவதை திரைமொழியில் படக்குழு பார்வையாளனுக்கு தெளிவுற கடத்தவில்லை. ஆமை வேகத்தில் நகரும் காட்சிகள் நம்மை வெகுவாக சோர்வடையச் செய்கின்றன. 'எதிரி' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பகுதியை இயக்கி இருக்கிறார் பிஜாய் நம்பியார். நவரசா தொகுப்பின் முதல் கதையே நம்மை ஏமாற்றிவிடுவதால் அடுத்தடுத்த கதைகளுக்குள் செல்ல தயக்கம் உருவாகிறது.

image


Advertisement

'சம்மர் ஆப் 92' என பெயரிடப்பட்டிருக்கும் கதையில் யோகிபாபு நடித்திருக்கிறார். நவரசங்களில் நகைச்சுவை உணர்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எபிசோடில் யோகிபாபு, நெடுமுடி வேணு, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர். ப்ரியதர்ஷன் இயக்கி இருக்கும் இப்பகுதி அசூயை உணர்வைத் தருகிறதே தவிர நகைச்சுவை பெயரளவிற்கும் இல்லை. பள்ளிவிழா மேடையில் யோகிபாபு தன் ஆசிரியர்கள் குறித்து பேசும் பல இடங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் செய்திருக்க வேண்டிய ஒரு சின்ன கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் போன்ற தேர்ந்த நடிகையை பொறுத்தி வீணாக்கியிருக்கிறார்கள். அசூயை உணர்வைத் தரும் ஐடியாவை தவிர்த்து நகைச்சுவைக்காக வேறு ஐடியாவை யோசித்திருந்தால் 'மால்குடி டேஸ்' போல இதமான உணரவைத்தந்திருக்கும் இந்தக் கதை. காரணம் கதை நிகழும் நிலத்தேர்வு அப்படியாக உள்ளது.

முதல் இரண்டு கதைகளில் சோர்வடைந்து மூன்றாவது கதைக்குள் நுழைந்தால் கார்த்திக் நரேன் கொஞ்சம் ஆறுதல் தருகிறார். ஆச்சர்ய உணர்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் புராஜக்ட் அக்னி என்ற இக்கதையில் அரவிந்த்சாமி, பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஆழ்மனதின் வலிமை குறித்த ஆய்வில் இருக்கும் அரவிந்த்சாமி அதனை தனது நண்பர் பிரசன்னாவிற்கு விளக்கிச் சொல்கிறார். நல்ல காட்சி அனுபவத்தைத் தருகிறது இந்தப் பகுதி. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உண்மையில் ஆச்சர்ய உணர்வைத் தருகிறது. நரேன் குழுவிற்கு பாராட்டுகள். ஆனால் 90 சதவிகிதம் ஆங்கிலத்தில் பேசியிருப்பதால் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் இப்படம் சென்று சேர்வது சிக்கல்தான்.

image


Advertisement

தி.ஜானகிராமனின் கதையை மையமாக வைத்து பாயாசம் என்கிற கதையை இயக்கி இருக்கிறார் வசந்த். டெல்லிகணேஷ், ரோகினி, அதிதி பாலன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த சினிமா நல்ல அழகியல் உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தன் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கவில்லை என்பதால் பொறாமை கொள்ளும் டெல்லிகணேஷ் தனது அண்ணன் மகன் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சியில் எதிர்மறை எண்ணத்தோடு கலந்து கொள்கிறார். நடந்தும் கொள்கிறார். 1960களில் நடப்பதாக உருவாக்கப்பட்டிருக்கும் இக்கதை நம்மை 60களுக்கு எடுத்துச் செல்கிறது. புராஜக்ட் அக்னி மற்றும் பாயாசம் ஆகிய இந்த இரு எபிசோடுகளில் கலை இயக்குநர்கள் நல்ல பாராட்டைப் பெறுகின்றனர். பாயாச அண்டாவை கவிழ்த்துவிட்டுத் திரும்பும் டெல்லி கணேஷை அதிதி பாலன் முறைக்கும் காட்சி அருமை. இக்கதையில் டெல்லி கணேஷ் தான் ஒரு சீனியர் நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரனின் இசை இதம். வசந்த் குழுவிற்கு வாழ்த்துகள்.

நவரசங்களில் அமைதியுணர்வை மையமாக வைத்து அமைதி என்ற பெயரில் கார்த்திக் சுப்பராஜ் ஒரு பகுதியை இயக்கி இருக்கிறார். இப்படியொரு பகுதியை இயக்கியதற்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜ் அமைதியாக இருந்திருக்கலாம். போர்க்களத்தில் தன் குடும்பத்தை இழந்த சிறுவனின் நாயைத் தேடிவரும் பாபி சின்ஹா உயிரிழக்கிறார். விடுதலைப் புலிகள் மீது கார்த்திக் சுப்பராஜுக்கு எதும் தனிப்பட்ட கோபம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. விடுதலைப் புலியாக வரும் பாபி சிம்ஹா ஒரு அப்பாவி சிறுவனை தரக்குறைவாக திட்டுவது போலொரு காட்சியை வைத்திருக்கிறார். அவசியம் தவித்திருக்க வேண்டிய சொல் அது. கவுதம் வாசுதேவ் மேனனை ஈழத்தமிழ் பேச வைக்க முயன்று ஏதோ புதிய மொழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். நவரசா தொகுப்பில் ரொம்பவே சுமாரான எபிசோடு இதுதான். அமைதி அமைதி அமைதியோ அமைதி.

image

'ரெளத்திரம்' என்ற பெயரில் அரவிந்த்சாமி ஒரு எபிசோடை இயக்கி இருக்கிறார். நவரசங்களில் கோபத்தை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அழகம் பெருமாள், ரித்விகா, ஸ்ரீராம் ஆகியோர் இக்கதையில் நடித்திருக்கிறார்கள். கணவன் கைவிட்டுவிட்ட நிலையில் வீட்டு வேலைகள் செய்து தன் இரு பிள்ளைகளை வளர்க்கிறார் தாய். வட்டிக்கு பணம் கொடுக்கும் அழகம் பெருமாள் இவர்களின் குடும்ப சூழலை பயன்படுத்திக் கொள்கிறார். தந்தை இல்லாத நிலையில் தாயின் குறிப்பிட்ட ஒரு செயலை வெறுக்கும் பிள்ளைகளின் கோபமும் அதன் விளைவுகளும் தான் திரைக்கதை. விவாதிக்கத் தகுதியான படைப்பு. தாயின் செயலால் பிள்ளைகள் தாயை வெறுக்கிறார்கள் என அழுத்தமாக பதிவு செய்த அரவிந்த் சாமி, இயலாமையால் மாற்று முடிவுகளை எடுக்கும் தாயின் நியாயத்தையும் கொஞ்சம் அழுத்தமாக பேசி இருக்கலாம். ஒரு காட்சியில் தங்கத்தோடு பெண்களை ஒப்பிட்டு தாய் பேசும் சொற்கள் நம்மைச் சுடுகின்றன. ஸ்ரீராமின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது பாராட்டுகள். விமர்சனங்களைக் கடத்து வரவேற்க வேண்டிய கதை. வாழ்த்துக்கள் அரவிந்த் சாமி.

இம்மை எனும் கதையினை இயக்கி இருக்கிறார் ரதீந்திரன் ஆர்.பிரசாத். பய உணர்வை மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சித்தார்த், பார்வதி ஆகியோர் நடித்திருக்கின்றனர். சொத்துக்காக ஆசைப்பட்டு பணக்காரரை மணமுடிக்கும் பெண் பிறகு அவரது மரணத்திற்கு காரணமாகிறார். அதன் எதிர்விளைவாக பார்வதியை பழிவாங்குகிறார் சித்தார்த். வித்தியாசமான வாழ்வியல் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் காட்சிகள் புதிதாக உள்ளன. நல்ல ஒளிப்பதிவு, திரைக்கதை என இம்மை சற்று நேர்த்தியாக உருவாகியிருக்கிறது. சித்தார்த், பார்வதி இருவரின் நடிப்பும் நன்றாக உள்ளது.

image

சர்ஜூன் இயக்கி இருக்கும் அடுத்த பகுதி துணிந்த பின். அதர்வா, அஞ்சலி, கிஷோர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் ஒரு வனத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதிரடிப்படை வீரனாக நடித்திருக்கிறார் அதர்வா. மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் போராளியாக வருகிறார் கிஷோர். இருதரப்புக்கும் இடையிலான மோதலில் காயம்படும் கிஷோரை அதர்வா தனது ஜீப்பில் மருத்துவமனை கொண்டு செல்கிறார். ஆனால் கிஷோர் அதர்வாவிடமிருந்து தப்பிக்க பிறகு என்ன நடந்தது என்பது மீதிக் கதை. உண்மையில் இக்கதை எதை நோக்கி நகர்கிறது என்று புரியவில்லை. வெறும் அதிரடிக் காட்சிகளின் கோர்வையாக மட்டுமே இந்தக் கதையினை பார்க்க வேண்டியிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாக கணவனுக்காக காத்திருக்கும் அஞ்சலியின் கதாபாத்திரத்தில் துளியும் அடர்த்தி இல்லை. நவரசங்களில் தேவையற்ற இடைச்செருகலாக வந்து போகிறது துணிந்தபின்.

கிடார் கம்பியின் மேலே நின்று - கவுதம் வாசுதேவ் மேனன் இசைத்திருக்கும் காதல் இசைதான் கடைசி எபிசோட். சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின் நடித்திருக்கும் இந்தப் பகுதியில் இசைக்கலைஞராக வருகிறார் சூர்யா. படம் முழுக்க இசையால் நிறைகிறது. இந்த ஒன்பது எபிசோடுகளிலும் மிகவும் நீளமான எபிசோட் இதுதான். கவுதம் வாசுதேவ் படங்களுக்கேயான செயற்கையான சூழல், செயற்கையான காதல், செயற்கையான உடல்மொழி, வசனம் என இதுவரை முழுநீள சினிமாவாவில் அரைத்த மாவை கொஞ்சம் லிமிடெட் மீல்ஸ்ஸாக அரைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

image

நல்ல நட்சத்திரப் பட்டாளம், மணிரத்னம் என்ற ப்ராண்ட் இருந்தால் மட்டுமே ஒரு படைப்பு சிறப்பாக வந்து விடாது. நல்ல படைப்புகளை தயங்காமல் கொண்டாடும் ரசிகர்கள் கொஞ்சம் சொதப்பினாலும் உங்களை ஓரமாக ஒதுக்கி விடுவார்கள் என்பதற்கு நவரசா சமீபத்திய சாட்சி. மற்றபடி நவரசா கொஞ்சம் திருப்தியினையும், நிறைய ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது. மொத்தத்தில் ஒன்பது படைப்புகளில் எது பெஸ்ட் என்று யோசிக்க வைக்காமல், எதைவிட எது பெட்டர் என்று திணறல் கணக்குப் போட வைக்கிறது நவரசா.

Related Tags : navarasanetflixmanirathnamtamil cinemacinema news

Advertisement

Advertisement
[X] Close