Published : 02,Aug 2021 07:42 PM
பட ரிலீஸ் தேதியில் படத்திற்குப் பதில் பாடலை வெளியிடும் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ படக்குழு

அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் ஹீரோ அறிமுக டீசர், சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கடத்தல்கார லாரி டிரைவராக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் புஷ்பா படத்தின் முதல் பாகம் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா பரவலின் இரண்டாவது அலை இன்னும் முடியாததால் படத்தை அறிவித்த தேதியில் படக்குழுவால் வெளியிடமுடியாத சூழல் உள்ளது.
இதனால், படம் வெளியாவதாக இருந்த அதே ஆகஸ்ட் 13-ல் படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று, இன்று படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளையொட்டி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. தெலுங்கு,தமிழ்,மலையாளம்,கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ஓடு ஓடு ஆடு’ என்று தொடங்கும் பாடலை ஐந்து மொழிகளிலும் ஐந்து பாடகர்கள் பாடியுள்ளனர். தமிழில், பென்னி தயால் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.