[X] Close

நண்பர்கள் தினம்: நட்பின் உன்னதத்தை சொல்லும் தமிழ் படங்கள்!

சினிமா,சிறப்புக் களம்

Friendship-Day-Tamil-Movies-That-Tell-The-Nobility-Of-Friendship
மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான, மதிப்புமிக்க ஒரு பந்தம் நண்பர்கள். அன்பின் எல்லையில்லாத நீட்சியே நட்பு. அப்பேற்பட்ட நட்பின் சிறப்பை பேணும்விதமாக, நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்றுதான் நண்பர்கள் தினம். இந்த நாளில் நட்பின் சிறப்பை கொண்டாடும் விதமாக, உங்கள் நண்பருடன் பார்க்கக்கூடிய வகையில் ஓடிடியில் கிடைக்கக்கூடிய சில திரைப்படங்களை இங்கே பார்க்கலாம்!
 
image
நண்பன்
 
`நண்பன்' பாலிவுட் திரைப்படமான 3 இடியட்ஸின் ரீமேக் என்றாலும், படைத்தல் ஒரிஜினாலிட்டி மாறாமல் செதுக்கி இருப்பார் இயக்குநர் ஷங்கர். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா டி க்ரூஸ், சத்யராஜ் மற்றும் சத்யன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம், இன்றைய கல்வி முறைகளை கடுமையாக சாடியிருக்கும். அதேநேரம் கல்லூரி கலாட்டாக்களை நம் கண் முன் நிறுத்தும். நிச்சயம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து பார்க்க தகுந்தது இந்த படம். ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.
 
image
உள்ளம் கேட்குமே
 
மீண்டும் கல்லூரி காலத்திற்கு அழைத்துச் செல்லும் மற்றொரு உணர்ச்சிபூர்வ படம் `உள்ளம் கேட்குமே'. கல்லூரியில் ஒன்றாக இருந்த ஐந்து நண்பர்களின் மறுசந்திப்புடன் தொடங்கும் இந்த படம், நண்பர்கள் ஒவ்வொருவரின் பழைய ஞாபகங்களை அசைபோடும். யூ டியூப்பிலும், அமேசான் பிரைமிலும் இந்தப் படம் இருக்கிறது.
 
கல்லூரி
 
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டில் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது கல்லூரி திரைப்படம். கிராமப்புற மாணவர்களின் கல்லூரி வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் இந்தப் படம். சோகமான கிளைமேக்ஸ் தவிர்த்து, கல்லூரி நாட்களின் மகிழ்ச்சியான நட்புப் பயணத்தைக் காட்டுகிறது இந்தப் படம். இதை ஹாட் ஸ்டாரில் பார்க்க முடியும்.
 
ஏப்ரல் மாதத்தில்
 
சினேகாவுக்கும்-ஸ்ரீகாந்துக்கும் இடையிலான காதலை விட நட்பை கொண்டாடும் படம் தான் ஏப்ரல் மாதத்தில். கல்லூரியில் ஒன்றாக சுற்றி திரியும் நண்பர்கள் கூட்டம் பிரிகின்ற வலியை இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள `மனசே மனசே' என்ற ஒற்றை பாடல் எடுத்துரைக்கும். எல்லா காலத்து நண்பர்கள் அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் கிடைக்கிறது.
 
காதல் தேசம்
 
இந்தப் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒரு படம் என்றால் காதல் தேசம். `முஸ்தபா முஸ்தபா' என்ற பிரபல நட்பு பாடல் அமைந்துள்ள படம் இது. சென்னையின் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஒரே பெண்ணை காதலிப்பதையும் அதனால் நட்புக்குள் ஏற்படுகின்ற பிரிவியையும் எடுத்துரைக்கிறது இந்தப் படம். யூ டியூப்பிலும், அமேசான் பிரைமிலும் இந்தப் படம் இருக்கிறது.
 
இனிது இனிது
 
`இனிது இனிது' தெலுங்கு பிளாக்பஸ்டர் படமான ஹேப்பி டேஸின் ரீமேக். கல்லூரி சேர்க்கை நாளில் சந்திக்கும் நண்பர்கள் கல்லூரி வாழ்க்கை முழுவதும் நட்பு, காதல், கலாட்டா என திரிவதை அழகாக சொல்லியிருக்கும். இதை ஹாட் ஸ்டாரில் பார்க்க முடியும்.
 
தளபதி
 
மகாபாரதத்திலிருந்து கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையிலான நட்பை அடிப்படையாகக் கொண்டு தளபதி படத்தை கொடுத்திருப்பார் மணிரத்னம். ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். 90களில் வெளியான மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் இதுவாகும். யூ டியூப்பிலும், அமேசான் பிரைமிலும் இந்தப் படம் இருக்கிறது.
 
image
சுப்பிரமணியபுரம், நாடோடிகள்
 
தமிழ் சினிமாவில் நல்ல நண்பர்களாக வலம் வரும் சசிகுமார், சமுத்திரக்கனி பங்களிப்பில் உருவான இந்த இரண்டும் நட்பை எடுத்துச் சொல்லும் படங்கள். கடந்த தசாப்தத்தில் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன இந்தப் படங்கள். சுப்பிரமணியபுரம் அமேசான் பிரைமிலும், நாடோடிகள் சன் நெக்ஸ்ட்டிலும் காணலாம்
 
ஓ மை கடவுளே
 
சிறுவயது முதல் நண்பர்களாக இருக்கும் மூவரில் இரண்டு நண்பர்கள் திருமணம் செய்துகொள்வதும், அந்த திருமண பந்தம் எந்தளவுக்கு செல்கிறது என்பது தான் கதை. சமீபத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியை பெற்றது. அமேசான் பிரைமிலும் இந்தப் படம் இருக்கிறது.
 
image
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
 
இந்த படம் நட்பை தாண்டி காதல், த்ரில்லர், பழிவாங்குதல் கொண்ட நல்ல பொழுதுபோக்குப் படம். துல்கர் சல்மான் மற்றும் அவரது நண்பர் ரக்ஷனின் நகைச்சுவை காட்சிகள் இதில் ஹைலைட். நண்பர்களுடன் அமர்ந்து பொழுதை போக்க ஒரு நல்ல படம். நெட்ஃபிக்ஸ் தளத்தில் இருக்கிறது.
 
பெங்களூர் டேஸ்
 
இது மலையாள திரைப்படம். நெருங்கிய உறவினர்கள் மூவர் சிறுவயது முதல் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். மூவருக்கும் பெங்களூரு செல்ல வேண்டும் என்பது கனவு. அப்படி பெங்களூரு செல்லும் அவர்கள் அங்கு அடிக்கும் லூட்டிகள், சந்திக்கும் பிரச்சனைகள் என பீல் குட் மூவியாக `பெங்களூர் டேஸ்' உருவாக்கி இருப்பார்கள். செம ஹிட் அடித்த இந்தப் படம் ஹாட் ஸ்டாரில் இருக்கிறது. தமிழிலும் பெங்களூரு நாட்கள் என இந்தப் படம் வெளியாகி இருக்கிறது.
 
இதுபோன்று நட்பை விவரிக்கும், நட்பில் அழகை சொல்லும் எண்ணற்ற படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் மேலே குறிப்பிட்டு இருக்கிறோம்!

Advertisement

Advertisement
[X] Close