[X] Close

தோட்டத் தொழிலாளர் டூ பள்ளி ஆசிரியர்... உத்வேகமூட்டும் செல்வமாரியின் பயணம்!

கல்வி

From-a-labourer-to-teacher-this-Idukki-girl-eyes-IAS-next

தோட்டத் தொழிலாளராக இருந்து பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தற்போது அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக தேர்வாகி பலருக்கும் நம்பிக்கையாக மாறியிருக்கிறார் இளம்பெண் செல்வமாரி. ஐ.ஏ.எஸ் கனவை நோக்கிய அவரது பயணம், நம் ஒவ்வொருவருக்குமே உத்வேகமூட்டக் கூடியது.


Advertisement

தமிழ்நாடு - கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான எஸ்.செல்வமாரி. ஏரளமான கனவுகளை சுமந்துகொண்டு தனது வாழ்க்கையை ஒவ்வொரு படியாக மாற்றி வரும் செல்வமாரி, நமக்கு எல்லாம் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன் எனலாம். குமுளியின் பிரதான தொழிலான ஏலக்காய் தோட்டப் பணியே செல்வமாரிக்கும் அவரின் குடும்பத்துக்கும் உணவளித்தது. செல்வமாரியோடு சேர்த்து அவரின் வீட்டில் மூன்று பிள்ளைகள். அவரின் தந்தை சிறுவயதிலேயே கைவிட்டு சென்றதால் தாய் செல்வம் மற்றும் பாட்டி பேச்சியம்மாள் அரவணைப்பில் மூவரும் வாழ்ந்து வந்தனர். தந்தையால் கைவிடப்பட்ட குடும்பம் எந்த அளவுக்கு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளுமோ, அதே நிலையை செல்வமாரியின் குடும்பம் எதிர்கொள்ள நேர்ந்தது.

image


Advertisement

தொடர்ந்து வாட்டிய வறுமையால் படிப்பில் சுட்டியாக இருந்த செல்வமாரிக்கு உறவினர்கள் மூலம் வேறு சிக்கல்கள் வந்தது. அது திருமணம். தனது படிப்பை விட்டுவிட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று உறவினர்கள் நெருக்கடி கொடுக்க, அதற்கு செல்வமாரி கீழ்ப்படியவில்லை. படிப்பே முக்கியம் என்பதை தனது அம்மாவுக்கு புரியவைத்தார். அவரது தாயின் கண்டிஷன் ஒன்றுதான்... செல்வமாரியை படிக்க வைக்கும் அளவுக்கு பணம் இல்லை. அதனால் கல்விச் செலவுகளுக்கு செல்வமாரியே வேலை செய்து சமாளித்து கொள்ள வேண்டும் என்பதே அம்மாவின் கண்டிஷன்.

இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட செல்வமாரி, தனது தாய் மற்றும் பாட்டியுடன் ஏலக்காய் தோட்டங்களில் ஒரு தொழிலாளராக வேலைக்கு சேர்ந்தார். ஒரு தோட்டத் தொழிலாளராக பணிபுரிவது எளிதான ஒன்று கிடையாது. நாள் முழுக்க தோட்டங்களில் பணிபுரிய வேண்டியிருக்கும். அதுவும் சிறிது நேரம் உட்காரகூட முடியாத நிலை இருக்கும். கடுமையான முதுகுவலியை கொடுக்கும். ஒரு பெண் காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்தால் மட்டுமே ரூ.150 ஊதியம் கிடைக்கும். தனது கனவை துரத்த அந்த நேரத்தில் இந்த கடினமான வேலைக்கு சேரும் சவாலை ஏற்றுக்கொண்டார் செல்வமாரி. தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிப்பை மேற்கொண்டவர், பள்ளி விடுமுறை நாட்களில் தனது குடும்பத்துடன் தோட்டங்களுக்கு சென்று வேலை செய்யத் தொடங்கினார்.

image


Advertisement

பள்ளியில் படிக்கும்போதே படிப்பில் வல்லவர் செல்வமாரி. இதனால் ஆசிரியர்களுக்கு மிகவும் விருப்பமானவராக இருந்துள்ளார். பிளஸ் 2-வில் அந்தப் பள்ளியில் மூன்றாவது அதிக மதிப்பெண் எடுத்தவரும் அவரே. கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பிளஸ் 2-வை வெற்றிகரமாக முடிக்க, அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள பெண்கள் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர்ந்து கல்லூரி வாழ்க்கையை தொடங்கினார். திருவனந்தபுரம் இதுவரை அவரின் வாழ்க்கையில் சந்திக்காத வழக்கத்திற்கு மாறான ஓர் இடம்.

பள்ளிப்படிப்பை போல் கல்லூரியில் அவருடன் இருந்த மாணவர்கள் தமிழர்கள் கிடையாது. அங்கு படித்த ஒரு சில தமிழர்களில் செல்வமாரியும் ஒருவர். கல்லூரியில் மொழி பாகுபாடு மற்றும் கேலி, கிண்டல்களை எதிர்கொள்ள தொடங்கியதால், தனிமைப்படுத்தப்பட்டது போல் உணர்ந்துள்ளார். இதேபோன்ற காரணங்களால் அவர் உடன் படித்த ஒருவர் கல்லூரியை விட்டுச் சென்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. செல்வமாரியும் ஒருகட்டத்தில் படிப்பை கைவிட முடிவு செய்து தாயிடம் கூறியிருக்கிறார். `அப்படி செய்ய வேண்டாம், அப்படிச் செய்தால் ஊர்க்கார்களிடம் தேவையில்லாத பேச்சை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்' என்று தாய் எச்சரிக்க, வேறு வழியே இல்லாமல், ஹாஸ்டலில் இருந்த ஒரு சில தமிழ் மாணவர்கள் உதவியுடன் அங்கு சமாளிக்க தொடங்கியிருக்கிறார்.

ஹாஸ்டல் வாழ்க்கை அவரை முற்றிலும் மாற்றியது. அவரின் கனவுகளுக்கு உரம்போட்டது. வீட்டில் இல்லாத வசதிகள் ஹாஸ்டலில் இருந்ததால், வீட்டுக்கு வருவதை குறைத்துக்கொண்டு அங்கேயே இருந்து படிப்பை தொடர்ந்துள்ளார். பள்ளிப் பருவத்தில் தோட்ட தொழிலாளியாக வேலை செய்த ஊதியம் மற்றும் அவருக்கு கிடைத்த ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட சலுகைகள் கைகொடுக்க, இறுதியாக இளங்கலை, முதுகலை படிப்புகளை முடித்து, எம்ஃபில், பிஎட், எம்எட் உள்ளிட்ட படிப்புகளையும் கேரளாவிலேயே தங்கி முடித்துக்காட்டினார் செல்வமாரி. படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் அவரின் அடுத்த இலக்காக இருந்தது அரசு வேலை.

image

கேரள பொது சேவை ஆணையம் (பி.எஸ்.சி) தேர்வுக்கு தயாரானார். இதில் இரண்டு முறை தேர்ச்சியும் பெற்றார். முதல்முறை இவருக்கு கேரள காவல்துறையில் வேலைக்கு தேர்வானார். ஆனால், சில காரணங்களால் அவரால் இந்த போலீஸ் வேலையில் சேர முடியவில்லை. 2013-ல் இது நடந்தது. இதன்பின் 2017-ல் மீண்டும் கேரள பொது சேவை தேர்வை எழுதியவர், இந்த முறை ஆசிரியர் பணிக்கு தேர்வாகி சாதித்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக தேர்வானார் செல்வமாரி. ஆசிரியர் ஆவதற்கான உத்தரவுகள் வந்தாலும், கொரோனா தற்காலிகமாக அவரது சேர்க்கைக்கு தடைபோட்டது.

ஆனால், கடந்த மாதம் இடுக்கி மாவட்டத்தின் வஞ்சிவாயலில் உள்ள அரசு பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியராக பணியில் சேர்ந்துகொள்ள உத்தரவு வந்தது. தற்போது குமுளி பஞ்சாயத்தில் உள்ள சோட்டுப்பாறை கிராமத்திலிருந்து சுமார் 16 கிமீ தொலைவில் உள்ள இந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் செல்வமாரிதான். வறுமை, சாதி பாகுபாடு, மொழி பாகுபாடு போன்ற பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு, தன்னை நிரூபிக்க ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதலால் தனது கனவுகளை வெறித்தனமாகப் பின்தொடர்ந்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார் செல்வமாரி. இந்த நீண்ட நெடிய பயணத்தில் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டாலும், அதைப் பற்றி பேச வேண்டாம் என்பதே செல்வமாரியின் விருப்பமாக இருக்கிறது.

நிச்சயம் செல்வமாரி துணிச்சலான பெண் என்பது மறுப்பதற்கில்லை. மேலும் இந்தநிலையோடு அவர் கனவு காண்பதை நிறுத்த விரும்பவில்லை. ஆசிரியர் என்பதை தாண்டி அவரின் அடுத்த இலக்கு ஐஏஎஸ் ஆவது என்று மனம் திறக்கிறார். ஐஏஎஸ் கனவுக்கு விதைபோட்டது அவரின் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. கேரள மாநிலம் திருச்சூரின் தற்போதைய மாவட்ட ஆட்சியரான இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹரிதா வி குமார் ஒருநாள் செல்வமாரி கல்லூரியில் நடந்த கலந்துரையாடலில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்வில் அவர் பேசியதே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக தன்னை ஊக்கப்படுத்தியது என்கிறார் செல்வமாரி. தற்போது பிஎச்டி ஆய்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவர், அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தீவிரமாக தயாராக போவதாக கூறுகிறார்.


Advertisement

Advertisement
[X] Close