[X] Close

அவதூறு கருத்து முதல் போலி கணக்கு மோசடி வரை- வழக்குப்பதிவு, கைது.. காவல்துறை கிடுக்குப்பிடி

தமிழ்நாடு

19-arrested-in-Chennai-by-cyber-crime-police-for-spreading-aspersion-in-social-media

ஒரு வருடத்தில் அவதூறாக பதிவிட்டதாக 19 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதள விரோதிகளை வளைக்கும் முயற்சியில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

சமூக வலைதளம் சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை, அதிசயங்களை, சம்பவங்களை மக்கள் முன்பு வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவதற்குத்தான் பயன்பட்டு வந்தது. வந்தது, போனது, நடந்தது, நடக்கபோவது, சமையல் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் என அனைத்தும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கோடிக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதில் தொடங்கி இறுதிச் சடங்குகளை நேரலையாக காண்பிப்பது வரை சமூக வலைதளப் பயன்பாட்டின் அவசியம் பெரிதாகி விட்டது.
மேலும் அறியப்படாத குற்றங்களை வெளிக்கொண்டு வரவும், குற்றங்கள் நடப்பின் அதை நொடிப்பொழுதில் நாடுமுழுவதும் கொண்டுசெல்லவும் இந்த சமூக வலைதளங்கள் பயன்படுகின்றன. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் பல வழக்குகள் சமூக வலைதளம் மூலமாகவே வெளியே அறியப்பட்டது. மேலும் ஒரு சிலர் சமூக வலைதளங்களை பிரயோஜனமாக கையாண்டு பணம் சம்பாதித்தும், தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதிலும் பயன்படுத்தி வருகின்றனர். எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமான வழிகளுக்கு பயன்படுகிறதோ அதே அளவுக்கு சமூக வலைதளங்கள் பழிவாங்கும் படலங்களுக்கும், சமூகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கெடுப்பதற்கும் வழிவகுக்கின்றன.


Advertisement

மேலும் சுய விளம்பரத்திற்காக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அருவருக்கத்தக்க அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். அதன்மூலம் பிரபலம் அடையவேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்கள் குறித்தும், அரசுக்கு எதிராகவும், குறிப்பிட்ட சாதி, மதம் குறித்தும், பெண்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களைக் கையாண்டு கருத்தினை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற கருத்துகள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அமைவதால் தமிழக காவல்துறையினர் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக சைபர்கிரைம் போலீசார் இந்த விஷயத்தில் விரைவாக செயல்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

image

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறு கருத்துகளை பரப்பியதாக 75 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எல்லை மீறிஅவதூறு கருத்துகளை பதிவிட்ட 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்த வீடியோ பதிவுகள் அழிக்கப்பட்டு முடக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வருடத்தில் 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினை பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிபரப்பிய மதன், அவரது மனைவி கிருத்திகா, கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்ட யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மற்றும் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வீடியோ வெளியிட்ட போலி சித்த மருத்துவர் தணிக்காச்சலம் உள்ளிட்டோர் சமூகவலைதள குற்றங்கள் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது சமீபத்திய பரபரப்பு சைபர் கிரைம் வழக்குகள்.

மேலும், குறிப்பாக திருச்சியில் வாகன பழுதுநீக்கும் மைய ஊழியரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், குழந்தைகள் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களது சமூக வலைதளப் பதிவு, வீடியோ ஆகியவற்றை போலீசார் முடக்கியதுடன், சேனலை முடக்கி சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கடந்த வாரம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுவரும் நபர்களை சைபர்கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பதை கண்ணும் கருத்துமாக கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆகவே இனி சைபர்கிரைம் குற்றங்கள் மற்ற குற்றங்களைப் போலவே சென்சிட்டிவ்வான குற்றமாகவே பார்க்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

image

பேஸ்புக் கணக்கில் உள்ள ஒருவரது புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பயன்படுத்தி, அவரது பெயரிலேயே போலியாக பேஸ்புக் கணக்கைத் தொடங்கி அவரது நண்பர்களிடம் பணம் பறிக்கும் முறைகேடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் முதல் சாமானிய மக்கள் வரை அவர்களின் பெயரில் மருத்துவ உதவிக்கு தேவையெனக்கூறி பணம் பறிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் புது முயற்சியாக விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்டுள்ளனர். அதேபோல வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி மற்றும் சிவிவி எண் கேட்டு மோசடி செய்வது குறித்தும், வேலை வாய்ப்புக்காக ஆன்லைன் மூலமாக பணம் பறிப்பது பற்றிய விழிப்புணர்வு குறும்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

வேலைக்காக இணையம் வழியாக பணம் கட்டி ஏமாற வேண்டாம், ஓடிபி கொடுக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் அவ்வாறு ஏமாறப்பட்டதை உணர்ந்தால் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் உடனடியாக புகார் அளிக்கவும் அறிவுறுத்துகின்றனர்.

புகார் அளிக்க WWW.CYBERCRIME.GOV.IN என்ற இணையதள முகவரியிலும், 155260 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ள சென்னை சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

- சுப்ரமணியன்


Advertisement

Advertisement
[X] Close