[X] Close

உட்கட்சி பூசலுக்கு 'அணை கட்ட' மேகதாது பிரச்னை: எடியூரப்பாவின் 'உள்நோக்க' பயணக் குறிப்புகள்

இந்தியா

Karnataka-CM-B-S-Yediyurappa-s-sudden-visit-to-Delhi-is-that-for-regarding-Dam-issue-or-Internal-Party-Politics-issue

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் திடீர் டெல்லி பயணத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கும் மேகதாது அணை பிரச்னை காரணமா அல்லது பாரதிய ஜனதா கட்சிக்குள் கர்நாடக மாநிலத்தில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமா என சலசலப்பு கிளம்பியிருக்கிறது.


Advertisement

எடியூரப்பா மகன்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் கட்சிக்குள் கர்நாடக முதல்வருக்கு எழுந்துவரும் எதிர்ப்பு ஆகியவற்றை சரிகட்ட கர்நாடக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். ஜனவரி மாதம் அமைச்சரவை விரிவாக்கம் நடத்திய எடியூரப்பா, பாஜக தேசியத் தலைமையின் ஒப்புதலைப் பெற்று மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய விரும்புகிறார். 

கட்சித் தாவல் மூலம் எடியூரப்பா அரசு கர்நாடக மாநிலத்தில் அமைய காரணமாக இருந்த பெரும்பாலோருக்கு அமைச்சரவையில் ஏற்கெனவே இடம் கிடைத்துள்ள நிலையில், முனியப்பா போன்ற ஆதரவாளர்களையும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்பது எடியூரப்பாவின் நோக்கம். சமீபத்தில் கர்நாடக முதல்வரின் ஆதரவாளரான ஷோபா கரண்ட்லஜே மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயத்தில் சதானந்த கவுடா மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகி உள்ளதால், அவருக்கு கர்நாடக முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என கவுடாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Advertisement

எடியூரப்பா தன்னுடைய ஆதரவாளர்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வரும் சில அதிருப்தி தலைவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என விரும்புகிறார். ஆகவேதான் டெல்லியில் பிரதமர் மோடி சந்திப்பு மட்டுமல்லாமல்,  பாஜகவின் தேசியத் தலைவரான ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகியோரையும் சந்திக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். மேகதாது அணை விவகாரத்துக்காக மட்டுமே எடியூரப்பா பிரதமரை சந்திக்கிறார் என்றால், பிற பாஜக தலைவர்களை அவர் சந்திப்பது ஏன் என்கிற கேள்வியை அதிருப்தி கர்நாடக பாஜக தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பை மீறி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி பெறவே பிரதமர் மோடியை சந்திப்பதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழு டெல்லியில் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ள அதே தினத்தில், எடியூரப்பாவும் டெல்லியில் பிரதமரை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பிரதமரை சந்தித்து, தமிழ்நாடு சார்பாக சமர்ப்பித்த மனுவில் மேகதாது அணை விவகாரம் இடம்பெற்றிருந்தது. அத்துடன் அவர் பிரதமர் மோடிக்கு அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கடிதமும் எழுதியுள்ளார்.


Advertisement

விரைவில் மத்திய அரசு இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்த காவிரி நீரை பகிர்ந்துகொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எடியூரப்பா டெல்லியில் பிரதமர் உள்ளிட்டோரை சந்திப்பதால் என்ன பலன் கிட்டும் என அதிருப்தி கர்நாடக பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வெளிப்படையாக கர்நாடக முதல்வருக்கு எதிராக மேகதாது விவகாரத்தில் கருத்து தெரிவிப்பதை மாநில நலன் கருதி தவிர்த்தாலும், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்ட முடியுமா என்பதே அவர்களுடைய கேள்வி. உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீதிமன்ற அவமதிப்பு என மத்திய ஜல் சக்தி துறையின் அதிகாரிகளும் கருதுகிறார்கள்.

ஆகவே, தன்னுடைய சொந்த அரசியல் பிரச்னைகளை திசை திருப்ப எடியூரப்பா தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தை பயன்படுத்தி வருகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எடியூரப்பாவின் கருத்துக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருந்தால், மக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும் என்ற அரசியல் சதுரங்கத்தை கர்நாடக முதல்வர் விளையாடுகிறார் என கருதப்படுகிறது. பாஜகவின் கர்நாடகா உட்கட்சி பூசலால், தமிழ்நாட்டுக்கு பாதிப்பு உண்டாகிறது என்ற ஐயமும் இதனால் எழுந்துள்ளது. 

- கணபதி சுப்பிரமணியம்


Advertisement

Advertisement
[X] Close