[X] Close

உள்துறையை விட்டுக் கொடுத்த புதுச்சேரி முதல்வர் - பாஜக அமைச்சர் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு

இந்தியா

புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமாக முதலமைச்சர் வசம் இருந்து வந்த உள்துறை, இப்போது வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் பதவி கோரி வந்த பாரதிய ஜனதாவின் நமச்சிவாயத்துக்கு உள்துறை ஒதுக்கப்பட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Advertisement

துணை முதல்வர் பதவி கேட்ட நமச்சிவாயத்தை திருப்திபடுத்தும் முயற்சி?

புதுச்சேரி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். கூட்டணியில் பங்கேற்று 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. பாஜகவின் நமச்சிவாயத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைமை, முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.


Advertisement

ஆனால், துணை முதல்வர் பதவியை தர ரங்கசாமி சம்மதிக்காத நிலையில், முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என பாஜக தலைமை தொடர்ந்து ரங்கசாமியை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி நமச்சிவாயம் உட்பட இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள், மூன்று என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அமைச்சர்களுக்கு துறை ஒதுக்குவதிலும் இழுபறி நிலவி வந்த நிலையில், அந்தப் பட்டியல் வெளியானது. பெரும்பாலும் மாநிலத்தின் பாதுகாப்பு, காவல் அம்சங்களை உள்ளடக்கிய உள்துறையை முதலமைச்சரே வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில் உள்துறை அமைச்சர் பொறுப்பு நமச்சிவாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக மின் துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை உள்ளிட்ட 6 துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

துணை முதலமைச்சர் பதவி கேட்டு வந்த பாஜக தலைமையை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நமச்சிவாயத்திற்கு உள்துறை பொறுப்பை ரங்கசாமி வழங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சபாநாயகர் பதவியும் பாஜகவிற்கு வழங்கப்பட்டது. ஆகவே பாஜகவை திருப்திப்படுத்தி மத்திய அரசுடன் இணக்கமாக செல்லவே ரங்கசாமி விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close