Published : 02,Aug 2017 02:22 AM
கர்ப்பிணிகளின் உயிரிழப்பு இந்தியாவில் அதிகம் - அதிர்ச்சி தகவல்

கர்ப்பிணிகள் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 15 சதவிகிதம் இந்தியாவில் நடைபெறுவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் அறிவியலும், சமுதாயமும் விரைவாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதற்கேற்ப மருத்துவர்களின் பங்களிப்பும், சிந்தனையும், செயல்பாடும் இருக்க வேண்டும். ஒரு நாட்டின் நலன் மக்களின் உடல் நலத்தையே சார்ந்திருக்கும் என்று கூறுவதுண்டு. அனைத்து தரப்பு மக்களும் உடல் நலத்தை பேணிக்காத்தாலும், இதில் பெரும் பங்கு மருத்துவர்களையே சார்ந்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உள்-முகமையின் கணிப்பின் படி 1990 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை கருவுற்ற தாய்மார்கள் இறப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 15 சதவீத தாய்மார்கள் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ஃபக்கான் சிங் குலாஸ்தே இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பால் 8 சதவீதத்தினரும், உயர் ரத்தழுத்த கோளாறால் 5 சதவீதத்தினரும் உயிரிழந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உதிரிப்போக்கினால் 38 சதவீதத்தினரும், இரத்த சோகை உள்ளிட்ட இதர காரணங்களால் 34 சதவீத கர்ப்பிணிகள் உயிரிழக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, குறைவான சுகாதாரம், மருத்துவ வசதிகள் குறைப்பாடு, ரத்த சோகை உள்ளிட்டவற்றை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவர்களின் அணுகுமுறை குறுகிய தொழில்நுட்ப அடிப்படையில் மட்டும் அமையாமல் உடல் நலத்தைப்பேணும் பணியை ஒட்டுமொத்தமாக கவனிக்கும் வகையில் பயிற்சி இருக்க வேண்டியது அவசியம். கருவுற்ற தாய்மார்கள் உயிரிழப்பிற்கு காரணமாக அமையும் குறைவான சுகாதாரம், மருத்துவ வசதிகள் குறைப்பாடு, ரத்த சோகை உள்ளிட்ட பாதிப்புகள் கிராமபுறங்களிலே அதிகளவில் காணப்படுகிறது என்ற புகாரும் எழுந்துள்ளது. எனவே, மருத்துவர்களும், மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்களும் உள்ளூர் சமூகத்தினருடனும், கிராமப்புறங்களிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.