Published : 17,Jun 2021 10:47 AM
நள்ளிரவில் சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் தொடர் விசாரணை

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபாவை டெல்லி அருகே கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவரை நள்ளிரவு சென்னைக்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அருகே அவர் நடத்தி வரும் சுஷில் ஹரி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவர் தேடப்பட்டு வந்தார். டெல்லி அருகே காஸியாபாத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை, பல்வேறு தேடல்களுக்குப் பின் சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரை, விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இருந்த சிவசங்கர் பாபா, எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரித்து வரும் காவல்துறையினர், அதனை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர். விசாரணையை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.