Published : 15,Jun 2021 09:51 PM
"கடன் தவணையை கட்டாவிட்டால்..." - மிரட்டும் சுய உதவிக்குழு தலைவியின் ஆடியோவால் பரபரப்பு

மாத தவணையை கட்டவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு ரூ.1000-க்கு 20 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடும் காஞ்சிபுரத்தில் சுய உதவிக்குழு தலைவி தடாலடி ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், தங்கள் குடும்பத்திற்காக பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏஜன்சிகள், நிறுவனங்கள் போன்றவை கடன் வசூலிப்பதில் கறார் காட்ட கூடாது என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், ஓரிக்கை வசந்தம் நகரில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவில் உள்ள 30 உறுப்பினர்களுக்கும் குழு தலைவி கவிதா ராஜேந்திரன் ஆடியோ ஒன்றை வாட்ஸ்-அப் குழுவில் அனுப்பியுள்ளார்.
அதில், 'நீங்கள் பெற்ற கடனை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் செலுத்தாவிடில் ஆயிரம் ரூபாய்க்கு அபராத வட்டியாக நாளொன்றுக்கு 20, 40 என கூடுதலாக செலுத்த வேண்டும். இதில் எந்தவித சமரசமும் இல்லை' எனக் கூறியுள்ளார்.
அரசு அறிவுறுத்தியும் இதுபோன்று மகளிர் சுய உதவிக்குழு தலைவியே இப்படி ஒரு ஆடியோ வெளியிட்டு இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வேகமாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.