[X] Close

ஓடிடி திரைப் பார்வை: எல்லைப் பிரச்னையை அழுத்தமாக புரியவைக்கும் 'தி ப்ரெசன்ட்'!

சினிமா,சிறப்புக் களம்

The-Present--2020-film----Review

ஒரு சர்வதேச சினிமாவை எடுக்க இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின்படி பெரிதாக பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. கொஞ்சம் அறிவை செலவு செய்தாலே போதும். பேசுவதற்கு இங்கு ஆயிரம் கதைகள் உண்டு என்றபோதும் ஏன் இந்திய சினிமா கதைப் பஞ்சத்தால் தவிக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் உலகளாவிய சூழல் அப்படி இல்லை. உலகளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலும் யுத்த நெருக்கடிகளுக்கு உள்ளான நாடுகளிலும் இருந்துதான் ஆண்டு தோறும் நல்ல அரசியல் சினிமாக்கள் உருவாகின்றன. வாழ்வியல் முறையும் அது தரும் நெருக்கடிகளுமே நல்ல அழுத்தமான கதைகளை உருவாக்குகின்றன. அவ்வகையில் இன்று பார்க்க இருக்கும் பாலஸ்தீன சினிமா அவ்வூர் மக்களின் அன்றாட வாழ்நிகழ்வை யுத்தம் எப்படி பிரச்னைக்குள்ளாக்கி இருக்கிறது எனக் காட்டுகிறது.


Advertisement

image

அரபுமொழி பேசும் 'தி ப்ரெசன்ட்' (The Present) என்கிற பாலஸ்தீன சினிமா. பாலஸ்தீனத்தில் வசிக்கும் அழகான யூசுப்பின் குடும்பத்தை மையமாக வைத்து சர்வதேச பிரச்னையை எழுதி இருக்கிறது. பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் எல்லையில் உள்ளது யூசுப்பின் வீடு. யூசுப் தனது மனைவி மற்றும் மகளுடன் அங்கு வசிக்கிறார். அன்று யூசுப் நூர் தம்பதிகளுக்கு திருமண நாள். யூசுப் சொல்கிறார் தன் மனைவியிடம் ‘இன்று ஷாப்பிங் சென்று உனக்கு நல்ல பரிசுப் பொருள் வாங்கி வருகிறேன்’.


Advertisement

அதன்படியே மகள் யாஸ்மினுடன் ஷாப்பிங் செல்லும் யூசுப் வழியில் இஸ்ரேல் படையினரால் தடுத்து நிறுத்தப்படுகிறார். வாக்குவாதங்களுக்கு பிறகு பர்மிட் பெற்று தந்தையும் மகளும் ஷாப்பிங் செல்கின்றனர். அவர்கள் வாங்கி வந்த குளிர்சாதனப் பெட்டியை மீண்டும் எல்லை தாண்டி எடுத்து வர முடியாமல் போகிறது. அதற்கான எளிய வழி இருந்தும் மறுக்கிறார்கள் இஸ்ரேல் படையினர். யூசுப்பின் வாக்குவாதம் அதற்கு இஸ்ரேல் படையினர் துப்பாக்கி முனையில் கூறும் பதில் என பதற்றம் பரவவே மகள் யாஸ்மின் தந்தையின் பரிசை வேறு வழியில் மெல்ல நகர்த்திச் செல்கிறாள். உண்மையில் பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையினால பிரச்னைகளுக்குத் தீர்வு அடுத்த தலைமுறை குழந்தைகளின் கையில் தான் இருக்கிறது என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம். வெறும் 24 நிமிடங்களே ஓடும் இந்த சினிமா நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.

image

இரு நாட்டு எல்லைப் பிரச்னையை, அங்குள்ள மக்கள் அன்றாடம் சந்திக்கும் அசவுகரியத்தை பேசுவதற்கு ராணுவப்படையினர், டாங்கர், வெடிகுண்டுகளுடன் பெரிய பொருட் செலவில் ஒரு சினிமாவை எடுக்க வேண்டியதில்லை. எல்லையில் வாழும் எளிய மனிதர்களின் ஒரு நாள் நிகழ்வை படம் பிடித்தால் போதும் என அழுத்தமாக நம்பி இருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஃபராக் நபுல்ஸி. ஹிண்ட் ஸோஃபானியுடன் சேர்ந்து அவர் இக்கதையினை எழுதி இருக்கிறார். இப்படத்தின் முதல் காட்சி கணமானது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையினரின் பாதுகாப்பு சோதனைக்களை சந்தித்து தினசரி வேலைகளுக்குச் சென்றுவருகின்றனர். இக்காட்சி நம்முகத்தில் அறைகிறது.


Advertisement

image

யூசுப்பாக நடித்திருக்கும் ஷாலக் பாக்ரி படத்தின் துவக்கத்தில் முயல் போல மென்மையான மனிதராக காண்பிக்கப்பட்டாலும் ஒரு கட்டத்தில் மனம் வெடித்து இஸ்ரேல் வீரர்களிடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் புலியென சீறியிருக்கிறார். மகள் யாஸ்மினாக வரும் மர்யம் காஞ்ச் தன் பிஞ்சு முகத்தில் தன் நாட்டு யுத்தசூழல் குறித்த வெறுப்பையும், அப்பா அம்மா மீதான அன்பையும் தாங்கி நடித்திருக்கிறாள்.

'தி ப்ரெசன்ட்' என்கிற இந்த சினிமா சிறந்த குறும்படத்திற்கான ஃபாப்டா விருதைப் பெற்றது. மேலும் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அர்த்தமற்ற எல்லை அபகரிப்புகளால் மெல்ல மெல்ல பார்வை இழந்து கொண்டிருக்கும் உலகமானது யாஸ்மின் போன்ற அடுத்த தலைமுறை மலர்களின் சிந்தனையால் ஒளி பெறட்டும்.

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப் பார்வை: ’ஏலே’-முத்துக்குட்டியின் நகைச்சுவையால் குலுங்கிச் சிரிக்கும் கிராமம்!


Advertisement

Advertisement
[X] Close