[X] Close

ஓடிடி திரைப் பார்வை: மனுசங்கடா - தமிழக 'மண் வாசனை'யும் குற்ற உணர்வும்!

சினிமா,சிறப்புக் களம்

Manusangada---Film-Review

பல்கோண கலாசார நிறங்கள் கொண்டு தீட்டப்பட்ட ஒற்றை ஓவியம்தான் இந்தியா எனும் இப்பெரும் தேசம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா, உலக நாடுகளுக்கு ஓர் ஆச்சர்யமாக இருந்து வருகிறது. ஆனால் இங்கு மண்டிக்கிடக்கும் சாதிய விஷத்தால் இந்தியாவின் கவுரவம் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறது. சாதியால் தலைகுனிவை உருவாக்கும் பல விஷயங்கள் இங்கு அவ்வப்போது நடந்து கொண்டுதானிருக்கின்றன. அதில் ஒன்று பட்டியலின மக்களின் சடலங்களை பொதுப்பாதை வழியே எடுத்துச் செல்ல மறுப்பது.


Advertisement

image

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூர் திருநாள் கொண்டச்சேரி. அங்கு 2016ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஒரு நிகழ்வு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரது சடலத்தை பொதுப்பாதை வழியே எடுத்துச் செல்ல மறுத்து ஒரு தரப்பு வாதிடவே, அது கலவரமானது. நீதிமன்றம் தலையிட்டு தக்க நீதி வழங்கிய போதும்கூட போலீஸார் அந்த சடலத்தை பொதுப்பாதை அல்லாத மாற்றுப் பாதைவழியே தாங்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவத்தின் பாதிப்பில் உருவான சினிமாதான் ‘மனுசங்கடா’. தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கினார். 2018 அக்டோபரில் இப்படம் வெளியானது. அதற்கு முன்பாகவே பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு பரிசு வென்றது.


Advertisement

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் கோலப்பன். இவர் பிழைப்புக்காக நகரத்தில் வசிக்கும் சாதாரணன். கோலப்பனின் தகப்பனார் மறைந்த செய்தியானது அவருக்கு செல்போன் வழியே கிடைக்கிறது. கிராமம் விரைகிறார் கோலப்பன். ஊரடைந்த பிறகுதான் தெரிகிறது ஊரின் அந்நாளின் நிலை. தன் தகப்பனின் சடலத்தை பொதுப்பாதை வழியே எடுத்துச் செல்ல முடியாது என புரிந்துகொண்ட கோலப்பன் நீதிமன்றத்தை நாடுகிறார். சட்டப் போராட்டம் நடக்கிறது. இறுதியாக திருநாள் கொண்டச்சேரியில் என்ன நடந்ததோ அதுவே இந்த சினிமாவிலும் நடக்கிறது. போலீஸார் சடலத்தை தாங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்கின்றனர். அத்தோடு அல்லாமல் கோலப்பன் தன் தகப்பன் அடக்கம் செய்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாத படி மூன்று இடங்களில் குழிமேடு உருவாக்கிவிட்டுப் போகின்றனர். இறுதிவரை கோலப்பனால் தனது தகப்பன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பது சோகம்.

image

கோலப்பனாக ராஜீவ் ஆனந்த் நடித்திருக்கிறார். இதுவே அவருக்கு முதல் படம். இவரது தோழியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார். வணிக நோக்கமற்ற இந்த சினிமா சமரசமில்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. பல மாற்று சினிமாக்களின் மீதும் வைக்கப்படும் அதே விமர்சனம் ‘மனுசங்கடா’ மீதும் விழுந்தது. இப்படத்தின் மேக்கிங் தரமானதாக இல்லை என்று கூட சிலர் விமர்சித்தனர். ஆனால் அது முழுமையாக ஏற்க முடியாத விமர்சனம். காரணம் இப்படியான சினிமாக்களில் இருக்கும் அமெச்சூர் வகை ஒளிப்பதிவுதான் கதையின் அடர்த்தியை மக்களிடம் இயல்பு மாறாமல் கடத்தும். அவ்வகையில் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.தரன் சரியாகவே தன் பணியினை செய்திருக்கிறார்.


Advertisement

அம்ஷன் குமார் அடிப்படையில் ஓர் ஆவணப்பட இயக்குநர். அதனால் இப்படத்தின் காட்சி பாணி ஆவணப்பட சாயலில் அமைந்திருக்கிறது. அது பெரிய குற்றமோ குறையோ அல்ல. கதை பேசும் அடர்த்தியும் நெஞ்சைத் தொடும் சில காட்சிகளும் சிந்திக்க வைக்கிறது. ‘ஒவ்வொரு 18 நிமிடத்திலும் ஒரு பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றம் இந்தியாவில் நிகழ்த்தப்படுகிறது’ என்கிற தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையோடு இந்த சினிமா நிறைவடைகிறது. ஆனால், அது நமக்கு கடத்தும் வலிதான் நில்லாமல் நீள்கிறது.

image

சடலத்தை வீட்டிற்குள் எடுத்து வைத்துகொண்டு குடும்பத்துடன் கோலப்பன் தீக்குளிக்க முயலும் காட்சி அடர்த்தி. கோலப்பன் ஊர்த் தெருவில் நின்று ‘உங்க வீட்ட நாங்கதானடா கட்டுனோம், உங்க சாவுக்கும் நாங்கதானடா ஆடுறோம்’ என ஆதங்கமாக பேசும் காட்சி பலருக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. இப்படியாக படம் முழுக்க அடித்து ஆடியிருக்கிறார் இயக்குநர் அம்ஷன் குமார். ஷீலாவின் நடிப்பு நன்றாக உள்ளது என்றாலும் அக்கதாபாத்திரம் இந்தக் கதைக்கு அவசியமற்றது.

image

நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கும் இந்த சினிமாவானது 2017ஆம் ஆண்டு நடந்த கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் மும்பை திரைப்பட விழா, புனே திரைப்பட விழா, ஆரஞ்ச் சிட்டி திரைப்பட விழா, சென்னை திரைப்பட விழா உள்பட பல்வேறு விழாக்களில் இப்படம் பங்குபெற்று தமிழ் 'மண் வாசனை'யை திரையிலேற்றியது.

‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா... உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ என்ற கவிஞர் இன்குலாப்பின் பாடலே இப்படத்தின் தலைப்பானது. படத்தின் முடிவில் இப்பாடலும் ஒலிக்கிறது.

சடலங்களை எடுத்துச் செல்லும் பொதுப்பாதை என்பது ஊர்நிலத்தில் இல்லை; மனித மனங்களில் உள்ளது. மனிதர்களின் மனம் தெளிந்தாலொழிய இப்படியான சிக்கல்களுக்கு தீர்வு இல்லை.

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப் பார்வை: '99 சாங்ஸ்' - திரையில் ஒரு கதைசொல்லியாக வென்றாரா ரஹ்மான்?

Related Tags : cinemacinema newsindian cinemamovie reviewOTTOTT movies

Advertisement

Advertisement
[X] Close