Published : 23,May 2021 11:10 AM
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 வரை தொடரும்: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு

புதுச்சேரியில் ஏற்கெனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்
புதுச்சேரியில், கடந்த 10-ம் தேதி முதல், 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மே 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ''புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு மே 24 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்கள் துணையோடு ஏற்கனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை தொடரும். நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.விரிவான அரசாணை வெளியிடப்படும்” என்று தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.