Published : 27,Jul 2017 09:02 AM
தரம் பரிசோதிக்கப்படாத மாணவர்களின் மதிய உணவு

தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட தரம் பரிசோதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, மதிய உணவு மாதிரிகளை அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடங்களுக்கு அனுப்ப தமிழக அரசு தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மதிய உணவு விதிகளின்படி பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சூடான உணவு, உணவு ஆராய்ச்சி நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தால் சோதிக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் அனைத்து மதிய உணவு மையங்களில் இருந்தும் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பிவைப்பது சாத்தியமற்ற ஒன்று என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். மாநிலத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிய உணவு மையங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து ஒவ்வொரு மாதமும் 3 மாதிரிகளை சோதனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.