[X] Close

பிச்சை எடுத்து நாய்களுக்கு உணவளிக்கும் கோவை கெளரி பாட்டி.. யார் இவர்?

தமிழ்நாடு

old-lady-begs-and-feeds-dogs-Who-is-this

வாயில்லா ஜீவன்களின் மீது கெளரி பாட்டி கொண்டுள்ள கருணை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. யார் அந்த கெளரி பாட்டி; அவர் அப்படி என்ன செய்தார் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்..


Advertisement

76 வயதான கெளரி பாட்டி தற்போது கோவை மாவட்டத்திலுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் முன்னர் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் பிச்சை எடுப்பது அவரின் உணவிற்காக அல்ல. அங்குள்ள தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக.... ஆம் ..

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் கெளரி பாட்டி தனது 22 ஆவது வயதில் கணவருடன் கோயம்புத்தூருக்கு பிழைப்பு தேடி வந்துள்ளார். கணவர் காவலராக பணியாற்ற, கெளரி பாட்டி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.


Advertisement

image

கெளரியின் சகோதரர்கள் மின்வாரியம் மற்றும் விவசாயத்துறைகளில் பணியாற்றி வந்த போதும், கணவர் இறந்த உடன் பிறருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் மீதமுள்ள காலங்களை கடவுளுடன் கழிக்க முடிவெடுத்துள்ளார். அந்த முடிவு அவரை கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தனது 22 வருடங்களை கழிக்க வைத்திருக்கிறது.

வயதானவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வுதியத்தை வீட்டு வாடகைக்கு கொடுத்து விட்டு, கோயிலில் கிடைக்கும் உணவுகளை வைத்து தனது பசியை தீர்த்துக்கொள்ளும் கெளரி பாட்டி. பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் அங்கு சுற்றும் நாய்களுக்கு உணவு வழங்குகிறார்.


Advertisement

image

இது குறித்து கெளரி பாட்டி கூறும் போது, “ நான் நாய்களுக்கு உணவு அளித்தேன். அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் இணைய ஆரம்பித்து விட்டன. நாய்கள் எனது தட்டிலிருந்து உணவை எடுத்து சாப்பிடும் போது, அது எனக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது.

நான் நாய்களை அக்கறையுடன் பார்த்துக்கொள்வதை பார்த்த சில நல்உள்ளங்கள் தினமும் 100 ,150 என ரூபாய்களை வழங்குகின்றனர். ஆனால் ஊராட்சி பணியாளர்கள் தெரு நாய்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நான் நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்துமாறு கூறுகின்றனர். அதற்காக என்னை அவர்கள் மிரட்டினர். ஏன் அடிக்க கூட செய்தனர். ஆனால் எதுவும் என்னை நிறுத்தப்போவதில்லை” என்றார்.

image

இது குறித்து கோயில் அருகே முடித்திருத்தம் செய்யும் பழனிசாமி கூறும் போது, “ கெளரி பாட்டி நாய்களுக்கு பால், முட்டை, மீன் உணவுகளோடு ரேஷன் கடையில் அரிசி வாங்கி அதனை சமைத்து நாய்களுக்கு வழங்குவார். ஒரு நாளைக்கு இருமுறை உணவளிக்கும் பாட்டி, நாய்களுக்கு ஏதாவது உடல்நல குறைவு ஏற்பட்டால் அதனை அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அதற்கான மருந்துகளையும் அவைகளுக்கு வழங்குவார். காலை பேரூர் டேங்க் அருகே பிச்சை எடுத்து நாய்களுக்கு உணவளிக்கும் பாட்டி, மாலை பேரூர்  பட்டீஸ்வரர் கோயில் அருகே அமர்ந்து பிச்சை எடுப்பார்.” என்றார். 

தகவல் உறுதுணை : டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். 


Advertisement

Advertisement
[X] Close