[X] Close >

ஜெ. பிறந்தநாளில் சசிகலாவை சந்தித்த சீமான், சரத்குமார், தனியரசு : அடுத்தகட்ட திட்டம் என்ன?

Seeman-and-Sarathkumar-who-met-Sasikala-on-Jayalalithaa-s-birthday--What-is-the-next-plan-

ஜெயலலிதா பிறந்தநாளன்று சசிகலாவை சந்தித்துள்ளனர் சீமான் மற்றும் சரத்குமார், இன்று எம்.எல்.ஏ தனியரசு அவரை சந்தித்திருக்கிறார். சசிகலாவின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும்?


Advertisement

சசிகலா சென்னை திரும்பிய பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்றுதான் அனைவருமே நினைத்திருந்தார்கள், ஆனால் பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, பிப்ரவரி 24 ஆம் தேதி வரை எந்த அதிரடி நகர்வுகளையும் செய்யவில்லை. கட்சி தொண்டர்களையோ அல்லது அரசியல் பிரமுகர்களையோ வெளிப்படையாக சந்திக்கவில்லை.

இந்த சூழலில்தான் பிப்ரவரி 24 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்த சசிகலா, மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி 27 ஆம் தேதி அவசர அவசரமாக திறக்கப்பட்டு, அதேவேகத்தில் சில நாட்களில் மூடப்பட்ட ஜெ-வின் நினைவிடம், அவரின் பிறந்தநாளுக்குக்கூட திறக்கப்படவில்லை. இதனால் சசிகலா தங்கியிருக்கும் தி.நகர் இல்லத்திலேயே ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார், தனது ஆதரவாளர்களையும் சந்தித்தார்.


Advertisement

image

சென்னை திரும்பிய பிறகு அரசியல் பிரமுகர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை, அவரின் இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் அமீர், சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் சந்தித்து பேசியது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இன்று தனியரசு எம்.எல்.ஏ, நடிகர் பிரபு, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட பலரும் சசிகலாவை சந்தித்தனர்.

சீமான், சரத்குமார், தனியரசு சந்திப்பு ஏன்?


Advertisement

திடீரென நாம் தமிழர் கட்சியின் சீமான் சசிகலாவை சந்தித்தது, உண்மையில் பல தரப்பிலும் ஆச்சர்யத்தை உருவாக்கியது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்து, பெரும்பான்மையான வேட்பாளர்களையும் அறிவித்து, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட சீமான் ‘ சசிகலாவை நலம் விசாரிக்கவே சந்தித்தேன்” என தெரிவித்தார். சசிகலா விடுதலையானது முதலே அவருக்கு ஆதரவான கருத்துகளையே சீமான் சொல்லிவந்தார், மறைந்த சசிகலாவின கணவர் நடராஜனுடன் நெருக்கமான உறவு சீமானுக்கு இருந்தது, அதன் தொடர்ச்சியே இந்த சந்திப்பு எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் சரத்குமார் மற்றும் ராதிகா, “ ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியை” சந்தித்தோம் என தெரிவித்தனர். அதிமுகவில் மிகக்குறைவான எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கும் பட்சத்தில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் எண்ணம் சரத்குமாருக்கு உள்ளது, அதனால்தான் அவர் சசிகலாவை சந்தித்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர். தனியரசுவை பொறுத்தவரை ஆரம்பம் முதலே சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார், அதன் காரணமாகவே இன்று அவரை சந்தித்தார் என சொல்லப்படுகிறது.

image

உண்மையில் சசிகலாவுடன் நடந்த சீமான், சரத்குமார் மற்றும் தனியரசுவின் சந்திப்பு என்பது அவரை சகஜநிலைக்கு கொண்டுவந்திருக்கிறது என்றே அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். சசிகலாவின் மீது கட்டமைக்கப்பட்ட நெகட்டிவ் பிம்பத்தை உடைத்து அவரின் பாசிட்டிவ் ஸ்கோரை உயர்த்தவும், அரசியல் ரீதியாக இனி பல கட்சிகளின் தலைவர்கள் அவரை சந்திப்பதற்கு அச்சாரமாகவும் இவர்களின் சந்திப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

சசிகலாவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

ஒரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான சட்டப்போராட்டம், மறுபுறம் அமமுகவை செல்வாக்கு மிக்க கட்சியாக மாற்றுவது என்ற இரட்டை நோக்கங்கள்தான் இப்போது சசிகலா முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள். ஒருபுறம் அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் சசிகலா தரப்பு, மற்றொரு புறம் அமமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது, அதன் தொடர்ச்சியே இந்த சந்திப்புகள் எனவும் சொல்லப்படுகிறது.

இப்போதைய சூழலில் தேர்தல்வரை சசிகலா அதிமுகவை கைப்பற்றுவது என்பது நிச்சயமாக முடியாத காரியம்தான், அதனால் அமமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றுவது என்பதே தற்போது அவரின் திட்டமாக இருக்கலாம். அதற்கு வலுவூட்டும் விதமாகவே, டிடிவி.தினகரனின் தலைமையில் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்று இன்று நடந்த அமமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

image

1991 முதலே பல்வேறு கூட்டணிகளை உடைத்தது, பல்வேறு கூட்டணிகளை உருவாக்கியது தேர்தல் அரசியலில் ஊறிப்போனவர் சசிகலா. அதுபோல தேர்தலில் எப்படி வெல்வது, எப்படி நிர்வாகம் செய்வது, எந்த இடத்தில் எப்படி காய் நகர்த்துவது என்பது அவருக்கு அத்துப்படி. எனவே இனிவரும் நாட்களில் திமுக, அதிமுக கூட்டணிகளில் அதிருப்தி அடைந்த கட்சிகளை பலவற்றை அமமுக கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியை தொடங்கியிருக்கிறார் சசிகலா.

சரத்குமார், தனியரசு மற்றும் தேமுதிக, சில இஸ்லாமிய கட்சிகள், கருணாஸ், புதிய தமிழகம் போன்ற பல்வேறு கட்சிகளையும், பல அமைப்புகளையும் கூட்டணிக்குள் கொண்டுவந்தால் வலுவான மூன்றாவது அணியை அமைக்கலாம் என்பதே அவரின் வியூகம். இந்த கூட்டணியை அமைத்து தெளிவாக திட்டமிட்டால், நிச்சயமாக சில தொகுதிகளில் வெற்றிபெறலாம், எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்கலாம். அதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கலாம் என காத்திருக்கிறார் சசிகலா.

-வீரமணி சுந்தரசோழன் 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close