[X] Close >

குறைபாட்டை சாதனையாக மாற்றிய வல்லமை: கேலிகளைக் கடந்து வந்த பைடன்!

jeo-biden

அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் ஜோ பைடனின் வாழ்க்கை, பல கடினமான பக்கங்களைக் கொண்டது. அவற்றை பைடன் எதிர்கொண்ட விதம் உத்வேகம் அளிக்கக்கூடியது.


Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த ஜோ பைடனும் மோதிக்கொள்ளும் விவாத நிகழ்ச்சி அது. காரசாரமான மோதலுக்கு நடுவே பைடனின் சில சொற்கள் கேட்காமல் போகின்றன. சில நேரங்களில் அவரது உதடுகள் மட்டுமே துடிக்கின்றன; ஒலியில் தெளிவில்லை. ஆயினும் தடுமாற்றத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக விவாதத்தில் பங்கேற்கிறார் பைடன். அவருக்கு இந்தப் பேச்சுத் தடுமாற்றம் புதிதில்லை. 4 வயது முதலே திக்கிப் பேசும் குறைபாடு அவருடன் இருக்கிறது. 50 ஆண்டுகால வாஷிங்டன் அரசியலை இதையும் தாங்கிக் கொண்டே கடந்து வந்திருக்கிறார்.

இன்றுவரை பைடனைக் கேலி செய்வோர் இருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சிக்கு எதிரானவர்கள் அவரது தடுமாற்றமான உரையைத் தொகுத்து சமூக வலைதளங்களில் பரவ விடுகிறார்கள். பைடன் அவற்றைப் பொருள்படுத்துவதில்லை. பல தருணங்களில் தன்னுடைய நிலையைப் பற்றி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.


Advertisement

image

பள்ளி, கல்லூரி, பணியாற்றும் இடம் என அனைத்திலும் அவருக்கு கசப்பான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. இளமைக் காலத்தில் கடைகளில் பொருள்களை ஆர்டர் செய்வது முதல், சாதாரணமான கலந்துரையாடல்கள்வரை ஒவ்வொன்றும் அக்னிப்பரீட்சை போன்றே இருந்ததாக பைடன் நினைவுகூர்கிறார். அதற்காக அவர் தளர்ந்துவிடவில்லை.

பேச்சில் தடுமாற்றம் ஏற்படும்போது பல உத்திகளைக் கடைப்பிடிப்பதாக பைடன் கூறுகிறார். கால்களால் தரையில் தட்டுவது, பேனாவை ஒரு கையில் இருந்து மற்றொரு கையில் மாற்றிக் கொள்வது, நெற்றியில் உள்ளங்கையால் அழுத்துவது என பல்வேறு செய்கைகள் மூலம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்கிறார்.


Advertisement

பைடனின் மன உறுதிக்கு அவர் மட்டுமே காரணமில்லை. எப்போதெல்லாம் கேலிகளால் சோர்வும், கோபமும் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் அவரது தாய் கேத்ரின் அவருக்கு ஆதரவாக நின்றார். கேலி செய்பவர்களைப் பற்றிக் குறை சொல்லாதே, எதையும் விளக்கவும் முற்படாதே என்று தந்தை தன்னம்பிக்கை ஊட்டினார். கடினமான தருணங்களைக் கடந்து வர இவையே பைடனுக்கு உதவின.

திக்கிப் பேசும் குறைபாடு, உலகில் 7 கோடி பேருக்கு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பலருக்கு பதின்ம வயது வரையும், பலருக்கு வாழ்நாள் முழுவதும் இது தொடருகிறது. இதை குறைபாட்டைக் கொண்டிருக்கும் ஒருவர்தான் உலகின் அதிகாரம் மிக்க பதவிக்கு வந்திருக்கிறார். அவர் கூறுவது இதுதான்: கேலிகளைப் புறந்தள்ளுங்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close