2017 ஆம் ஆண்டு. டிசம்பர் மாதத்தின் கடைசி வாரம். மீடியாக்களின் முழு கவனமும் ராகவேந்திரா மண்டபத்தை நோக்கியே படையெடுத்திருந்தது. காரணம், கிட்டதட்ட 25 ஆண்டு காத்திருப்புக்கு பின், புத்தாண்டுக்கு முதல்நாள் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். “அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது. சிஸ்டம் சரியில்லை. சட்டமன்றத்தேர்தல்தான் இலக்கு. எழுச்சியை உண்டாக்குவோம்.” இவையனைத்தும் அப்போது ரஜினிகாந்த் பேசிய வீர வசனங்கள்.
1996 லிருந்து 2017 வரை காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது அந்த வார்த்தைகள். ‘அரசியலுக்கு வருவது உறுதி’ என்று ரஜினிகாந்த் முழங்கியதை கேட்டு, ரசிகர்களாக இந்த நாம் இனிமேல் தொண்டர்களாக மாறும் தருணம் வந்துவிட்டது என எண்ணி மகிழ்ச்சியில் பூரித்தனர் கோடான கோடி ரசிகர்கள். அன்று ரஜினியின் பேச்சும் அத்துனை ஆக்ரோஷமாகவும், புத்துணர்ச்சி மிக்கதாகவும் இருந்தது.
ரஜினியின் அந்த எனர்ஜிட்டிக்கான பேச்சு அவரது ரசிகர்களுக்கு புது தெம்பினை கொடுத்தது. அந்த எனர்ஜியை மனதில் ஏந்திக்கொண்டு எதற்கும் தயாரான தொண்டனை போல களத்திற்கு வந்தார்கள் ரசிகர்கள். ரசிகர் மன்றம், மக்கள் மன்றமாக மாறியது. நிர்வாகிகளை நியமித்து பூத் கமிட்டி அமைக்கும் பணியையும் தீயாக செய்தார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். தமிழகத்தின் மூலை முடுக்கில் உள்ள பல கிராமங்களில் இதற்கான வேலைகளை அவர்கள் முடுக்கிவிட்டார்கள். ரசிகர்கள் தொண்டர்களாகவே மாறி, கட்சி ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வந்தனர். ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்கள். ரஜினி வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங் மூலம் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியது தொடர்பான செய்திகளும் அவ்வவ்போது வெளியாகி ரசிகர்களுக்கு இன்னும் ஊக்கமூட்டியது.
சுமார் இரண்டு வருடம்... 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு முழுவதும் மின்னல் வேகத்தில் இந்தப் பணிகள் அரங்கேறி வந்தன. எப்படியும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு விடும் நாமும் கட்சியில் ஏதேனும் ஒரு பொறுப்பில் இருக்கலாம் என பலரும் பல கனவுகளுடன் பணிகளை செய்தார்கள். கட்டமைப்பு பணிகள் நடந்ததே ஒழிய கட்சி அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. 2020 ஆம் ஆண்டுதான் எல்லோரையும் போல ரஜினிக்கும் ஒரு போதாத ஆண்டாக மாறிவிட்டது. மார்ச் மாதத்தில் மிகப்பெரிய ப்ரஸ் மீட்டை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடத்தி, எழுச்சி வந்தால் வருகிறேன் என்று ஒரு குண்டினை ரசிகர்கள் மத்தியில் போட்டார். உணர்ச்சிபூர்வமாக மேசையினை தட்டி அவ்வளவு வேகமாக அன்று பேசினார். ரஜினி ரசிகர்களும் எழுச்சியை தம்முடைய தலைவருக்கு காட்டிவிடலாம் என்று பணிகளை தொடங்கினர்.
அந்த நேரத்தில் உலகத்தை புரட்டி போட்டது கொரோனா எனும் சுனாமி. கொரோனா காலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் பணிகள் கொஞ்சம் தொய்வை சந்தித்தது. இருப்பினும் எப்போது கொரோனா காலம் முடியும்; கட்சி பணிகளை எப்போது தொடங்கலாம் என்று காத்திருந்தனர் மக்கள் மன்றத்தினர். கொரோனா தாக்கத்தின் காலம் கொஞ்சாம் நீண்டு போனதால், ரஜினி ரசிகர்கள் மத்தியில் சற்றே ஒரு சலிப்பு ஏற்பட்டது. இடையில் ரஜினியின் மருத்துவ அறிக்கையும் வெளியாகி பல்வேறு யூகங்களும் கிளம்பியது. இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி தன்னுடைய ஆஸ்தான நாயகன் அரசியலில் காலடி வைத்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள் அவரது ரசிகர்கள். இருப்பினும், ‘தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் தானே இருக்கிறது. இனிமேல் எப்போது கட்சி ஆரம்பிக்கிறது, தலைவரிடம் இருந்து அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறதே’ என்று மனதிற்கு பல எண்ண அலைகளை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில்தான், ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடுவதாகவும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. அப்போதுதான் ரசிகர்கள் ஆனந்த பெருமூச்சுவிட்டனர். ரஜினியின் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு இன்னும் பூஸ்ட் சாப்பிட்டது போல் உற்சாகத்தை ஏற்படுத்தியது. என் உயிரே போனாலும் பரவாயில்லை அரசியலுக்கு வருகிறேன் என்று ஆணித்தனமாக ரஜினி சொன்னது அவர்களை கண்கலங்க வைத்ததோடு காலரை தூக்கிவிட்டு பெருமைபடும் அளவிற்கான ஒரு தருணமாகவும் அமைந்தது.
‘இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லைன்னு’ சொல்லிய கையோடு அர்ஜுன மூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்து வேகம் காட்டினார் ரஜினி. இப்படியெல்லாம் ஜெட் வேகத்தில் பணிகள் சென்றது. அறிவிப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகியிருந்தாலும், டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிப்புக்கு பிறகான ஒவ்வொரு நாளும் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருந்தது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் தாங்களும் களத்தில் இருக்கிறோம் என்ற நினைப்புடன் கெத்தாக திரிந்தார்கள் ரஜினி ரசிகர்கள். சொன்னபடியே எங்க தலைவரு வந்துட்டாரு பாத்தியா? எல்லோரிடமும் கௌரவமாக பேசிவந்தார்கள். ஆனால் இதுவெல்லாம் புஸ்வானம் ஆகும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
‘இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லைன்னு’ சொன்ன ரஜினி, ‘இனி எப்போதும் இல்லை’ என்ற முடிவை அறிவித்து ரசிகர்கள் மனதில் ஆராத ரணத்தை ஏற்படுத்திவிட்டார். அதற்கு காரணமாக சொல்லப்படுவது ரஜினியின் உடல்நிலையும் மருத்துவர்களின் எச்சரிக்கையும்தான். ரஜினியின் இந்த முடிவு கொஞ்சம் அதிரடியானதுதான். பெரும்பாலும் யாருமே இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த முடிவை வரவேற்றார்கள். ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு அரசியல் கணக்கு இருந்திருக்க கூடும். ஆனால், ரஜினியின் இந்த அறிவிப்பு வெளியானது முதல் ரஜினி ரசிகர்கள் பலரும் கண்ணீர் கடலில் மூழ்கிவிட்டார்கள். இதில் மக்கள் மன்றத்தில் தீயாய் வேலை செய்து வந்த ரசிகர்களின் நிலைதான் மிகவும் பரிதாபகரமானது.
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பால்பாண்டி கூறுகையில், “எங்களது கனவு நொறுங்கி விட்டதாகவே பார்க்கின்றோம் எங்கள் தலைவருக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். நாங்கள் கடவுளாக பார்த்தது எங்களது தலைவரைத் தான். ஆனால் அவர் தற்போது மாறி மாறி பேசுகிறார். தலைவர் நல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த உலகத்தில் ரொம்பவும் நல்லவராக இருக்க கூடாது. தலைவரின் முடிவு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. அரசியலுக்கு வருவேன் என அவர் உறுதியளித்ததன் காரணமாக எங்களது பணியை கூடுதல் வேகத்துடன் செய்தோம். எங்களுக்கு மக்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட எங்களது தலைவரின் உடல் நிலை மிகவும் முக்கியம்.
மக்கள் மத்தியில் எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும், ஒரு கரை வேட்டி கட்டலாம் என்ற நினைப்புடன் துடிப்புடன் செயல்பட்டு வந்தோம். நாங்கள் சாலையில் செல்லும் போதெல்லாம் மக்கள் எங்களை ஏளனமாக பேசியுள்ளனர். ஆனால் நாங்கள் தலைவர் கட்சி அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். எங்களது நம்பிக்கை வீணாகி விட்டது. எனது குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்கனவே திட்டிக் கொண்டிருந்தார்கள். எங்களது கைக்காசை செலவழித்துதான் பணியை மேற்கொண்டு வந்தோம். ” என்றார்.
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி தாமோதரன் கூறுகையில், “தலைவரின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 8 கோடி பேரில் நானும் ஒருவன். ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை என்றவுடன் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு. எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அவருக்கு ரசிகனாகவும் இருக்கிறேன். அதேநேரத்தில் அரசியல் வருகை குறித்து அறிவித்ததும் நான் அரசியல் தலைவராகவும் அவரை ஏற்றுக்கொண்டேன். தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்பது 8 கோடி பேரின் துர்திஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். சாமானிய மக்கள் அரசியலில் மாற்றம் வராதா என காத்துக்கிடக்கின்றனர். தலைவர் அதை கொண்டு வருவார் என எதிர்ப்பார்த்திருந்தோம். அதை எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்று தெரியவில்லை. தலைவர் மீண்டும் அரசியல் களத்திற்கு வரவேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணமும்” என்றார்.
இதுகுறித்து கணத்த குரலுடன் பேசிய ராமேஷ்வர துணைச்செயலாளர் சங்கிலி முருகன், ‘கிட்டதட்ட 1978 முள்ளும் மலரும் படத்திலிருந்து ரஜினி ரசிகர் நான். தலைவரின் நடிப்பு, செயல் அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. அவர் எப்படி ஒழுக்கமாக இருக்கிறாரோ அதேபோன்று நானும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படிதான் வாழ்ந்துட்டு இருக்கேன்’ எனக்கூறி தேம்பி தேம்பி அழத்தொடங்கினார்.
மேலும் தொடர்ந்த அவர், “ஆனால் தலைவர் இப்படி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவேயில்லை. மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என 2017ல் அறிவித்தார். அன்று முதல் எல்லோரும் களத்தில் இறங்கி வேலைப்பார்த்தோம். நேற்று முதற்கொண்டு பூத் கமிட்டி அமைத்தோம். அவருக்கான வாய்ப்பு போய்விட்டது. அவர் வைத்திருந்த நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்காம போயிடுச்சேன்னு ஒரு ஏக்கம்தான் எங்களுக்கு. அதை எங்களால் ஜீரணிக்கமுடியவில்லை” என நெஞ்சைப்பிடித்துக்கொண்டு குமுறினார்.
“அவர் அரசியலுக்கு வராதது வருத்தம்தான் எனவும் ஆனால் அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; நாங்கள் அவரை பார்த்துக்கிட்டே இருக்கணும். அதுவே எங்களுக்கு போதும்” எனக் கூறி முடித்தார்.
இதைத்தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற ஒன்றியச் செயலாளர் மாரிப்பிச்சை பேசும்போது “நான் 40 ஆண்டுகளாக ரஜினி ரசிகனாக உள்ளேன். சில வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்றார். நாங்களும் களத்தில் வேலைப்பார்த்தோம். திடீரென்று வரவில்லை என்று சொல்லிவிட்டார். இது எங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு. அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன பசங்கலாம் எங்களை கேலி பண்ணி அழவைக்கும் அளவிற்கு செய்துவிட்டார்.
இவரை நம்பி நாங்கள் வாழ்ந்ததுபோக, எங்களை அழவைத்துவிட்டு, அவர் போய்விட்டார். மாற்றுக்கட்சியினரும் சின்ன சின்ன புள்ளைங்களும் எங்களை அசிங்கப்படுத்தி கேவலப்படுத்துகிறார்கள். எங்கள் தலைவர் மீண்டும் யார் மூலமாவது அரசியலுக்கு வர வேண்டும். எங்கள் கனவை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
ரஜினி மக்கள் மன்ற நகர பொருப்பாளர் குணசேகரன் பேசும்போது, “தலைவரின் முடிவு சரியில்லாத முடிவு. அரசியல் முடிவு வரவேண்டும் என்று கூறிவிட்டு திடீரென வேண்டாம் எனக்கூறிவிட்டார். எனக்கெல்லம் மாரடைப்பே வந்துவிட்டது. இரவு மாத்திரை போட்டேன். மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். திராவிட கழகத்திலிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும். முதல்வர் ஆக வேண்டும்” எனக் கூறினார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?