[X] Close >

சித்ராவோடு என்னை தொடர்புபடுத்துவது பொய்யானது; வேதனை அளிக்கிறது! - ரக்‌ஷன் பேட்டி

Rakshan-interview

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்திருக்கிறது காவல்துறை. இந்நிலையில், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான ரக்‌ஷனுக்கு சித்ராவின் தற்கொலையில் தொடர்பு இருப்பதாக வதந்திகள் றெக்கை கட்டி பறந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரக்‌ஷனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்,


Advertisement

சித்ராவின் தற்கொலையை எப்படி பார்க்கிறீர்கள்?

எனக்கு தெரிந்தவரை சித்ரா கடின உழைப்பாளி. வடிவேல் பாலாஜி அண்ணன் இறந்ததற்கே கதறி துடித்தேன். அதிலிருந்து, மீளவே எனக்கு 15 நாளுக்குமேல் ஆனது. சித்ராவின் மறைவும் எனக்கு மிகுந்த வேதனையை கொடுக்கிறது. அவரது, இறுதிச் சடங்கிலும் கலந்துகொண்டேன். எப்போதும், சித்ரா பாசிட்டிவாக பேசுவார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி நமக்கும் தொற்றிகொள்ளும். ஆனால், அப்படியொரு பெண்ணை தவறாக பேசுவது வருத்தமளிக்கிறது.


Advertisement

image

சித்ராவுக்கும் உங்களுக்குமான நட்பு குறித்து?

     இரண்டு வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் சித்ராவை ’ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சியில் பார்த்தபோது ”மக்கள் டிவியில் உங்களைப் பார்த்திருக்கேன். ரொம்ப அழகா தமிழ் பேசுனீங்க” என்று பாராட்டினேன். அதற்கு, அவரும் ’நானும் உங்களை கலைஞர் டிவியில் பார்த்திருக்கிறேன். நீங்களும் படிப்படியா முன்னேறி விஜய் டிவிக்கு வந்துட்டீங்க. ஆல் தி பெஸ்ட். நல்லா பண்ணுங்க’ என்றார், உற்சாகமுடன் ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு, விஜய் டிவி ஷூட்டிங்கின்போது சித்ராவை சிலமுறை சந்தித்திருக்கிறேன்.


Advertisement

   நான் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதால் தெரியாதவர்களிடம் கூட தெரிந்தவர்கள்போல்தான் பேசவேண்டும். அப்படித்தான் சித்ராவிடமும் பேசுவேன். விஜய் டிவியில் பணிபுரிபவர்கள் போலவே, எப்போதாவது ’ஹேய் இங்க ஒரு ஈவண்ட் நடக்குது. பேமண்ட் கிடைக்கும். வேணும்னா போய்ட்டுவா’ என்று சித்ரா, ஜாக்குலின் உள்ளிட்டவர்கள் எனக்கு மெசேஜ் அனுப்புவார்கள். அதேபோல, ஷூட்டிங்கின்போது ’மாமா.. மச்சான் சாப்டியா’ என்று எல்லோரும் கலாய்த்துக்கொண்டிருப்போம். அவ்வளவுதான். அங்கிருந்து கிளம்பிச் சென்றால் யார் என்ன செய்கிறார்கள் என்பதை யாரும் கண்டுகொள்ள மாட்டோம்.

   சித்ராவுக்கும் எனக்கும் உள்ள நட்பு என்பது இதுவரைககும்தான். இதற்கே, சித்ராவுக்கு நிச்சயத்தார்த்தம் என்பதை விஜய் டிவி நிகழ்ச்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். 

image

சித்ரா தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்று பலவித தகவல்கள் வெளியாகி வருகிறதே? அதனையெல்லாம் பார்த்தீர்களா?

   ஒரு யூடியூப் சேனலில் என்னையும் சித்ராவையும் வைத்து தவறான தகவல்களைப் பரப்பினார்கள். பின்பு, அதனையே பிடித்து அனைவரும் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பொய்யான ஒரு தகவலை பரப்பினால் எவ்வளவு வேதனையும் வலியும் இருக்கும் என்பது பாதிகப்பட்டவர்கள் நிலையில் இருந்துப் பார்த்தால்தான் தெரியும். அதனால், இப்பிரச்னை, குறித்து என் நண்பர்களிடம் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க ஆலோச்சித்து வருகிறேன். சித்ராவுடன் என்னை எதற்காக தொடர்புபடுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. முழுக்க முழுக்க பொய்யான இந்தத் தகவலால் அதிர்ச்சியும் வேதனையுமே ஏற்படுகிறது.

   சித்ராவின் அப்பா காவல்துறையில் இருக்கிறார். வதந்தி உண்மையாக இருந்திருந்தால், என்னை கண்டித்திருக்க மாட்டாரா? என்மீது நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்களா? சித்ரா இறந்ததிலிருந்து இதுவரை காவல்துறையிடம் இருந்து ஒரு போன் கால்கூட எனக்கு வரவில்லை. இன்று இருக்கும் டெக்னாலஜியில் யார் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அப்படி நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தால் எளிதாக தெரிந்திருக்குமே? என்னையும் சித்ராவையும் இணைத்து வதந்தி பரப்புபவர்கள் ஏன் இதனையெல்லாம் யோசித்துப் பார்க்கவில்லை?

       இன்று உயிருடன் இருந்தால், சித்ராவே கடவுள் சாட்சியாக மறுப்பு தெரிவித்திருப்பார். ஏனென்றால், எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்புகூட கிடையாது. எப்போதாவது நிகழ்ச்சியில் பார்க்கும்போது பேசுவோம். அவ்வளவுதான். சித்ராவின் மரணத்திற்கு குடும்பப் பிரச்சனை, கணவருடன் பிரச்சனை, கடன் பிரச்சனை என்கிறார்கள். எந்தக் காரணத்திற்காக சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை. நெருங்கிய நட்பாக இருந்தால்தானே, அந்தக் காரணம்கூட தெரியும்?

image

இதனையெல்லாம் பார்த்துவிட்டு உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்?

    இதேபோல, மூன்று வருடம் முன்பு ’பிக்பாஸ்’ ஜூலியையும் என்னையும் இணைத்து ’நானும் ஜூலியும் காதலிக்கிறோம். அவருக்கு நான் மோதிரம் போட்டேன்’ என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். சித்ராவாவது என்னுடன் பணியாற்றினார். பார்த்திருக்கிறோம்; பேசியிருக்கிறோம். ஆனால், ஜூலியை சந்தித்ததுகூட கிடையாது. இப்படி வதந்தி வரும்போதெல்லாம் எனது மனைவி சிரிக்கத்தான் செய்வார். நான் இந்தத் துறைக்கு வருவதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அதுவும், எங்களுடையது காதல் திருமணம்.

   திருமணமான என்னை பலருடன் தொடர்புபடுத்துவது  காயப்படுத்துகிறது. சித்ரா பிரச்சனையில் என்னை தொடர்புபடுத்தியதற்கு ”இதுக்கெல்லாம் கவலைப்படாத. உன்னைப் பத்தி எனக்கு தெரியும். ஃப்ரியா விடு. பார்த்துக்கலாம்” என்று ஆறுதல் சொன்னார் என் மனைவி. என்னை நன்கு அறிந்தவர்; புரிந்துகொண்டவர். இப்படி, வதந்தி பரப்புவது மனரீதியாக மட்டுமல்ல என் தொழில் வாழ்க்கையையும் பாதிக்கும். ஆனால், இதனையெல்லாம் என்மேலே விழுந்த தூசியாகத்தான் நினைத்துக்கொள்கிறேன்.

image

      கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் உள்ளன. இப்போதுவரை, வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். நான் பணமெல்லாம் பெரிதாக சம்பாதிக்கவே இல்லை. சம்பாதித்தது பேர் மட்டும்தான். அதனையும், இப்படி கெடுப்பது வருத்தத்தை அளிக்கிறது. தயவு செய்து இதனை யாரும் நம்பவேண்டாம். போட்டி நிறைந்த இந்தத் துறையில் படிப்படியாக முன்னேறி வருவது சவாலானது.

    வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் நானும் வந்திருக்கிறேன். ஒரு வாய்ப்பு கிடைக்க எவ்வளவு போராடுகிறோம் என்பது இத்துறையில் உள்ளவர்களுக்குத் தெரியும். கஷ்டத்தை உணர்ந்து வளர்ந்தவன் நான். விஜய் டிவி ஷூட்டிங் ஷோக்களில் யாரிடமும் அதிர்ந்துகூட பேசமாட்டேன். புண்படுத்தமாட்டேன். அப்படி இருக்கும்போது எப்படி அடுத்தவரை கஷ்டப்படுத்த முடியும்? அதுவும் இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட முடியும்? நினைக்கவே அருவருப்பாக உள்ளது.

- வினி சர்பனா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close