[X] Close >

நாடு முழுவதும் 1000 கி.மீ தூர மெட்ரோ ரயில் பாதைகளுக்கான பணிகள் தீவிரம்: பிரதமர் மோடி தகவல்

Intensity-of-work-for-1000-km-long-metro-rail-lines-across-the-country--Prime-Minister-Modi-informed

நாடு முழுவதும் சுமார் 1000 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: "நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இது நாட்டின் உள்கட்டமைப்புத் துறை சந்தித்து வரும் பிரச்சினைகளுள் முக்கியமானது. புதிய திட்டங்களின் துவக்கத்திலேயே அவற்றுக்கான நிதியைத் எனது அரசு உறுதி செய்துள்ளது. தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படும். பல்முனை இணைப்பு கட்டமைப்புக்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலக அளவில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Advertisement

ஒவ்வொருவருக்கும் வருமானம் அளிக்கக்கூடிய வகையில் சுற்றுலாத் துறையில் வாய்ப்புகள் இருக்கிறது. இ-விசா திட்டத்தின் கீழ், நாடுகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்திருப்பதோடு, விடுதிகளுக்கான வரியையும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நடவடிக்கைகளினால், பயண மற்றும் சுற்றுலா போட்டித் திறன் குறியீட்டில் இந்தியா 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு, இந்தப் பட்டியலில் இந்தியா 65-வது இடத்தில் இருந்தது. கொரோனா தொற்று குறையும்பொழுது சுற்றுலாத் துறையின் மீதான ஆர்வமும் மீண்டும் திரும்பும் என்று நான் நம்புகிறேன். தனித்தனியாக அல்லாமல், சீர்திருத்தங்கள் முழுவதுமாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு, சுமூகமான வாழ்வு, அதிகப்பட்ச முதலீடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய நான்கு கட்டங்களாக நகரங்களின் வளர்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளை வாங்குவோரின் நம்பிக்கை பாலத்திற்கு நடுவில் இடைவெளி இருந்தது. தவறான நோக்கங்களுடன் செயல்பட்ட மக்கள், ரியல் எஸ்டேட் துறைக்கே களங்கம் ஏற்படுத்தி, நடுத்தர மக்களை துன்பத்தில் ஆழ்த்தினர். இந்தப் பிரச்னைகளை நீக்குவதற்காக ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் (ஆர்இஆர்ஏ) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, நடுத்தர குடும்பங்களின் வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டதாக சில அண்மை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நகர வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்துடன் நவீன, பொது போக்குவரத்தில் இருந்து வீடுகள் வரை அனைத்து தரப்பு வளர்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

image


Advertisement

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஆக்ராவில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் நகரத்தில் வாழும் ஏழை மக்களுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் நடுத்தர மக்களுக்காக, முதல்முறை அவர்கள் வீடு வாங்குவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தரக் குடும்பங்கள் வீடு வாங்குவதற்காக ரூ.28,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான அடல் லட்சிய நோக்குத் (அம்ருத்) திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களில் தண்ணீர், கழிவு நீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. நகரங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை மேம்படுத்துவதற்கும், கழிவு மேலாண்மையில் நவீன முறையைப் பயன்படுத்துவதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.

2014-ஆம் ஆண்டு முதல், நாட்டில் 450 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதைகள் செயல்பாட்டில் உள்ளன. அதற்கு முன்னர் வெறும் 225 கிலோ மீட்டர் மட்டுமே இருந்தது. சுமார் 1000 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது" என்றார் பிரதமர் மோடி. இந்த 1000 கி.மீ தூரத்துக்கான மெட்ரோ ரயில் பாதைகளுக்கான பணிகள் 27 நகரங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிகந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்களுடனும், பேருந்து நிலையங்களுடனும் இணைக்கும் வகையில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஆக்ரா நகரின் 26 லட்சம் மக்களுக்கும், ஆண்டு தோறும் ஆக்ராவுக்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும். வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு, இந்த மெட்ரோ ரயில் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவுப் போக்குவரத்தை அளிக்கும். ரூ.8,379.62 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும். முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி லக்னோ மெட்ரோ ரயில் சேவையை 'சிசிஎஸ் விமான நிலையம் முதல் முன்ஷிபுலியா' வரை, பிரதமர் தொடங்கி வைத்தபோது, ஆக்ரா ரயில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close