“வேதா நிலையம் புதுமனை புகுவிழாவில் என் அன்னை இல்லை” - ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் நினைவு 

Jayalalitha-wrote-about-her-Boise-Garden-home-experience-during-that-time-
 
 
போயஸ்கார்டன்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இரும்புக் கோட்டையாக விளங்கியது பகுதி! கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதிக்குள் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்துவிட முடியாது. ஏன் அந்த பகுதியில் குடியிருப்பவர்களேகூட பல சோதனைகளுக்குப் பின்பே உள்ளே போக முடியும். மத்தியில் அரசியல் அதிகாரத்திலிருந்தவர்கள் கூட, ஜெயலலிதா விரும்பினால் மட்டுமே அவரது போயஸ்கார்டன் பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க முடியும் என்ற நிலைமை இருந்ததைப் பலரும் அறிவார்கள். 
 
image
 
குறிப்பாகச் சொன்னால் 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு இவர் குடியிருந்த பகுதி கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. சரியாகச் சொன்னால் ‘மத்திய கருப்பு பூனைப் படை’ இவருக்குப் பாதுகாப்பு அளிக்க வந்த பிறகு பெரிய அளவுக்கு இந்தப் பகுதிக்குள் கெடுபிடிகள் கொண்டுவரப்பட்டன. அவர் வீட்டு முன்பாக தான் அமைச்சர்கள் வரிசையாகக் காத்திருப்பார்கள். போயஸ்கார்டன் இரும்பு கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 
 
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகும் இதே நிலைதான்.  பெரிய அளவுக்குப் பாதுகாப்புகள் நிலவின. இதனிடையே சென்னையில் அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினரான தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
image
 
இதனிடையே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு சமீபத்தில் தீவிரப்படுத்தியது. இதுகுறித்து வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பாணை ஒன்றும் வெளியானது. அதில், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
மேலும், போயஸ் தோட்ட இல்லம் அமைந்துள்ள நிலத்திற்கு அடியில் எந்த விதமான கனிம வளங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
 
image
 
பலரும் வியப்புடன் பார்க்கக் காத்திருக்கும் இந்த போயஸ்கார்டன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இளமைக் காலத்தில் ‘வேதா நிலையம்’ என்றே அடையாளம் கொண்டிருந்தது. அந்த வீட்டைக் கட்டுவதற்காக ஜெயலலிதா பல கனவுகளைக் கண்டார். அந்த வீட்டின் அழகுகளைக் குறித்தும் அனுபவங்களைக் குறித்தும் அவர் அந்தக் காலத்து ‘பொம்மை’ பத்திரிகையில் தனியாகக் கட்டுரையையே எழுதி இருந்தார்.  1974 ஆண்டு ஜெயலலிதா தனது ‘வேதா நிலையம்’ குறித்து எழுதிய நினைவுகளை இப்போது தெரிந்து கொள்வது அவசியமாக இருக்கும்.
 
“இந்த மாளிகையை அணு அணுவாகச் செங்கல் செங்கல்லாகப் பார்த்துக் கட்டியவர் என் அன்னைதான். ஆனால் இந்த விழாவுக்கு அவர் இல்லையே. கண் குளிரப் பார்த்து உள்ளம் குளிர வாழ்த்திட அவர் இப்போது இல்லையே என்ற ஏக்கம், திரை விரிவது போல என் நெஞ்சில் விழுந்தது. நான் நினைத்திருப்பேனா இப்படி ஒரு நடிகையாவேன், இந்த அளவுக்கு மாளிகையை என் தாயின் பெயரில் கட்டுவேன் என்று? 
 
image
 
நான் மட்டுமா? என் வீட்டார் கூட நினைத்ததில்லை. ஏன், என் அன்னைகூட நினைத்திருக்க மாட்டார். என் நெடுநாளைய அருமை நண்பர் சோ அவர்கள், எனக்கு எழுதி இருந்த கடிதத்தில், ‘எங்களுடன் சின்னஞ் சிறுமியாக அம்மாவின் பின்னால் நின்று கொண்டு மேடைகளில் வளைய வளைய வந்த நீ, இன்று புகழ் மிக்க நடிகையாகி, இம்மாளிகையைக் கட்டுமளவுக்கு உயர்ந்து நிற்பதைக் கண்டு பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்’ என்று எழுதி இருந்தார். அந்தளவுக்கு இந்தச் சிறுமி எப்படி வளர்ந்தாள்? அந்த அளவுக்கு என்னை ஆளாக்கிய  விட்டவர்கள் யார்? யார்? நான் யோசித்துப் பார்க்கிறேன். என் அன்னையின் உருவம் நடுநாயகமாக விளங்கினாலும் அவருடன் இன்னும் பலரும் சேர்ந்து அல்லவா என்ன ஆளாக்கி இருக்கிறார்கள்” எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா.
 
மேலும் அவர், “வேதா நிலையம். இதைக் கட்டி முடிக்கும் வரை என் தாய் தூங்கவில்லை. கட்டி முடிக்கப்பட்ட பின் புதுமனை புகு விழாவுக்கு அவர் இல்லை. ஆனால் அவரது வண்ண ஓவியம் தெய்வமாக வீட்டின் முகப்பிலிருந்து என்னைக் காத்து வருகிறது” என்றும் அவர் எழுதியிருந்தார்.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement