ரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆவதால், தங்கள் படங்களை வெளியிட முடியாமல் தவித்து வரும் சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள், ரிலீஸில் ஒழுங்குமுறையை வகுக்கக் கோரி, நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.


Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக, சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய ஹீரோ படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்தால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் மதியக் காட்சி மற்றும் இரவுக் காட்சியை மட்டும் ஒதுக்கிறார்கள். படம் நன்றாக இருந்தாலும் கூட அந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் வருவதில்லை. 


Advertisement

இதனால், பட ரிலீஸை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன், தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. அதன்படி பெரிய ஹீரோ படங்களை, பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும் மற்ற வாரங்களில் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவை, நிறைவேற்றிய தயாரிப்பாளர்கள் சிலரே அதை மீறினர். இதனால், இந்த திட்டம் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது.

பிறகு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்றபின், சிறு பட்ஜெட் படங்களின் ரிலீஸ் பிரச்னை மீண்டும் எழுந்தது. அப்போது அவர் தலைமையிலான டீம், ஒரு தீர்வை கொண்டு வந்தது. ஒரு வாரம் 2 பெரிய படம் அல்லது 3 படம் ரிலீஸ் பண்ணலாம். அடுத்த வாரம் சின்னப்படம், பண்டிகை காலங்களில் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்தனர். இதனால் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை அறிந்துகொள்ள முடிந்ததால் உறுதியாக இருந்தனர்.


Advertisement

இதை சிலர் விமர்சித்தாலும், இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்பட்டு வந்தது. எந்த பிரச்னையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த இந்த ரிலீஸ் திட்டம், விஷாலின் எதிரணி தயாரிப்பாளர்களின் ஈகோ பிரச்னையால் சிக்கலானது என்கிறார்கள். பிறகு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக சேகர் என்பவரை நியமித்தது வணிக வரித்துறை.

‘அவருக்கு, இவ்வளவு அதிக முதலீடு செய்து  நடக்கும் தொழிலை, எப்படி நடத்த வேண்டும் என்கிற விஷயம் தெரியவில்லை. அதற்கு அவரை குற்றம் சொல்ல முடியாது. அவரிடம் எப்படி இதை தெரிவிப்பது என்றும் எங்களுக்கும் தெரியவில்லை. பழைய ரிலீஸ் முறைகளை மறந்துவிட்டு இப்போது தயாரிப்பாளர்கள் இஷ்டத்துக்கு ரிலீஸ் தேதியை அறிவிப்பதால் சுமார் 200 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளன’’ என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர்.

அவரே மேலும் கூறும்போது, ‘ஒரு வருடத்தில் 52 வாரம் வருகிறது. வருடத்துக்கு சுமார் 210 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் 20 வாரம் பெரிய ஹீரோ படங்கள் (40 படங்கள்) ரிலீஸானால், மற்ற 32 வாரங்களில் 170 படங்களை எப்படி ரிலீஸ் செய்ய முடியும்? அதற்கு எங்கே வாய்ப்பிருக்கிறது? இதனால் பலகோடி ரூபாய், பெட்டிக்குள் முடங்கி வீணாகிறது என்பதுதான் உண்மை’ என்கிறார் அவர்.

சமீபத்தில் கூட தீபாவளிக்கு பெரிய ஹீரோ படங்கள் வெளியானதால், மற்ற வாரங்களில் சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யலாம் என நினைத்திருந்தனர், தயாரிப்பாளர்கள். ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லாமல், வரும் வாரங்களில் விஷாலின் ஆக்‌ஷன், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன், விக்ரம் மகன் நடிக்கும் ஆதித்ய வர்மா (பெரிய படங்களுக்கு சமமாக இதை வெளியிட இருக்கின்றனர்), அடுத்த மாதம் தனுஷ் படம் என பொங்கல் வரை பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன. 

’ஒரு வாரம், பெரிய பட்ஜெட் படம் வரவில்லை என்று நான்கு சின்ன படங்கள் ரிலீஸ் தேதி போட்டு விளம்பரம் செய்கின்றன. ஆனால், திடீரென்று அந்த தேதியிலும் பெரிய படங்களை ரிலீஸ் செய்துவிடுகிறார்கள். இதனால், கஷ்டப்பட்டு போராடி சுமார் 90 தியேட்டர்களை பேசி வைத்திருக்கும் சிறு தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் போய்விடுகிறது. இதற்காக விளம்பரம் செலவு நஷ்டத்தை தருகிறது. இதனால் நல்ல படங்கள் கூட வெளிவராமல் போகின்றன’ என்கிறார் விநியோகஸ்தர் ஒருவர். 

இதனால் படங்களை வெளியிட முடியாமல் இருக்கும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள், ரிலீஸை ஒழுங்கப்படுத்தக் கோரி நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement