தேமுதிகவுடன் இன்று மாலை அதிமுக பேச்சுவார்த்தை ?

ADMK-to-talk-with-DMDK-today-Evening-

தேமுதிகவுடன் அதிமுக சார்பில் இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விஜயகாந்துடன் தேமுதிக நிர்வாகிகள் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Advertisement

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல்,  “சிகிச்சைப்பிறகு விஜயகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். நீண்ட உடல் நலம், ஆயுளோடு அவர் இருக்க பிரார்த்திக்கின்றோம். விஜயகாந்த் எனது பழைய நண்பர். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா சார்பில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவருக்கு வாழ்த்துகளை கூறுமாறு மோடியும், அமித் ஷாவும் கூறினர். திரைத்துறைக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசு மற்றும் மோடியின் நடவடிக்கைகளை விஜயகாந்த் பாராட்டினார். கூட்டணி அரசியல் மட்டுமே முக்கியமல்ல. தனிப்பட்ட நட்பும் முக்கியம்” என்றார். இதனிடையே அதிமுக- தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட காரணத்தினால் தான் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் தேமுதிகவுடன் அதிமுக சார்பில் இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேட்ட தொகுதிகளை தர அதிமுக தரப்பு இதுவரை முன்வராததால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவை விட அதிகமாகவும், பாமகவுக்கு குறையாமலும் தொகுதிகளை பெற தேமுதிக திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர் தங்கமணி இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement