“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்?” - மோதலின் பின்னணி என்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்மைக் காலமாக திமுக தலைவர் ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது.


Advertisement

இவ்விருவரின் வார்த்தை மோதல் அரசியல் களத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் இப்போது சொல்ல முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை வரும் காலங்கள் தீர்மானிக்கும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் இருந்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அத்தனை அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. அதிமுகவில் அதிகார மையம் யாரிடம் உள்ளது என்பதற்கான ஒரு போட்டி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்துள்ளது. இதில் கிட்டத்தட்ட முதலமைச்சர் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். தற்போது அதிமுக, அமமுகவும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றன.


Advertisement

            

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் மறைமுகமாக கூட்டு வைத்து செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை பரஸ்பரம் திமுக, அதிமுக, பாஜக, அமமுக பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டனர். அதிமுக பாஜகவின் பிடியில் உள்ளது என திமுக ஒருபுறம் குற்றம்சாட்டினாலும், திமுக பாஜக உடன் மறைமுகமாக கூட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என்று அதிமுகவும் கூறிவருகிறது.

அதிலும் குறிப்பாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றபோது திமுக தலைவர் ஸ்டாலினுடன் டிடிவி தினகரன் கைகோர்த்து ஆட்சியை கவிழ்க்கப் பார்த்ததாக அதிமுக நிர்வாகிகள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இந்த குற்றச்சாட்டை அதிமுக அதிகம் முன் வைத்தது. தான் டெபாசிட் இழந்தாலும் ஆளும் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்று விட்டுக் கொடுத்ததாக திமுகவை பகிரங்கமாக அதிமுக குற்றம்சாட்டியது. 


Advertisement

        

தொடக்கத்தில் இருந்தே தினகரனை விடுத்து, அதிமுக தலைமையை மட்டும் அதிகமாக ஸ்டாலின் விமர்சித்து வந்தார். அதேபோல், எதிர்க்கட்சியான திமுகவை காட்டிலும் அதிமுகவையே தினகரன் அதிகம் விமர்சித்து வந்தார். அதனால், ஸ்டாலின், தினகரன் ரகசிய கூட்டு இருப்பதாக அதிமுக தரப்பில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதற்கு வலுசேர்க்கும் வகையில் 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வெளியான சமயத்தில் தினகரனும், ஸ்டாலினும் ஒரே ஹோட்டலின் தங்கி இருந்ததை சுட்டிக் காட்டி விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஒரே ஹோட்டலில் தான் இருந்தோம், தனித்தனி அறையில் இருந்தோம், இருவரும் சந்திக்கவில்லை என்று தினகரன் தன்னுடைய பாணியில் பதிலளித்துவிட்டு கடந்து சென்றார்.

              

இப்படியாக ஸ்டாலின், தினகரனை வைத்து நிறைய பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்து காணப்படுகிறது. ஒருவரை ஒருவர் நேரடியாக கடுமையாக தாக்கிப் பேசிக் கொள்கின்றனர். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் விலகினால் ஆபத்து வரும் என டிடிவி தினகரன் நிதானம் இழந்து பேசி வருவதாக திமுகவின் அதிகாரப் பூர்வநாளேடான முரசொலியில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அமமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவையும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

         

ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ள டிடிவி தினகரன், ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தலைக் கண்டு திமுக பயப்படுகிறது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இருளில் செல்பவர்கள் பயத்தை போக்க பாட்டு பாடிக்கொண்டே செல்வது போன்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் செயல்பாடுகள் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். 

               

ஆளும் கட்சியையும் தாண்டி டிடிவி தினகரன் மீது கடும் விமர்சனத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. வரக்கூடிய தேர்தலில் திமுகவிற்கும், அமமுகவிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் விமர்சர்கள் கருதுகின்றனர். அமமுக-வில் இருந்து திமுகவிற்கு செந்தில் பாலாஜி சென்றது உள்ளிட்ட விவகாரங்கள் திமுகவிற்கு எதிரான மனநிலையை டிடிவி தினகரனுக்கு அதிகப்படுத்தியிருப்பதாகவும் சொல்கின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இடையேயான கருத்து மோதலின் தாக்கம் வரவிருக்கின்ற தேர்தல்களில் நிச்சயம் பிரதிபலிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement