“என்னைக் கொன்றிருக்கலாமே” : கண்ணீருடன் கர்ப்பிணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட அப்பாவி கர்ப்பிணிப் பெண் கண்ணீருடன் நியாயம் கேட்டுள்ளார்.


Advertisement

எந்த தவறுமே செய்யாமல் ஒரு குடும்பமே, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிலர் செய்த தவறால் சோகத்தின் எல்லைக்கு சென்றுள்ளனர். சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 30ம் தேதி சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்த போது, சாத்தூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.


Advertisement

முதற்கட்ட விசாரணையில் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஒப்பந்த ஊழியர் செய்த தவறினால் தவறு நிகழ்ந்ததாக விருதுநகர் மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் மனோகரன் கூறியுள்ளார். கடந்த 30ம் தேதி வெளிநாடு செல்ல இருந்த நபர், ரத்த வங்கியில் சோதனை செய்தபோது உடல்நிலை சீராக இருப்பதாக அந்த ஊழியர் தெரிவித்ததாலேயே தவறு நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் மருத்துவமனை தொழில்நுட்ப வல்லுநரான ஒப்பந்த ஊழியர் வளர்மதி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் 2 ஒப்பந்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரத்த பரிசோதனை செய்யப்பட்ட உபகரணங்கள் சோதனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ள மனோகரன், இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறியுள்ளார்.

மனோகரன் இவ்வாறு கூறுகையில், இதற்கு மாறாக விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனை அலுவர் பிரகலாதன் மற்றொரு தகவலை தெரிவிக்கிறார். 2016ம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துமனை அலுவலராக இருந்தபோது, வெளிநாடு செல்ல இருந்த அந்த நபரின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகிறார். இந்த விவகாரத்தை சம்மந்தப்பட்ட நபரிடம் நேரடியாக தெரிவிக்காமல், முறைப்படி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும், இந்த விவகாரத்தை அந்தத் துறை முறையாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்.


Advertisement

நடந்த தவறுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி எழும் அதே நிலையில், இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பேசும்போது, “இனிமேல் நான் அரசை நம்பவில்லை. எனக்கு அனைத்து கட்சியினரும் உதவ வேண்டும். நான் ரொம்ப அழுதுவிட்டேன். தற்போது என்னிடம் அழுவதற்கு கண்ணீர் கூட இல்லை. நாங்கள் ஏன் இதை கேவலம் என நினைக்க வேண்டும். இது அரசு செய்த தவறு. எனக்கு நியாயம் கிடைக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டும். தமிழக மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும். இனி இந்த தவறு வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. நாங்கள் என்ன பாவம் செய்தோம். நாங்கள் தவறு செய்யவில்லை. நானும், எனது மனைவியும் நல்லவர்கள். நாங்கள் தலை குனிய வேண்டும் என்ற அவசியமில்லை. எனது போராட்டம் வெல்ல மக்கள் உதவ வேண்டும்” என்று கலங்கிய கண்களுடன் மன வலிமையாக கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கர்ப்பிணிப் பெண், “எனக்கு மீண்டும் ஒரு ரத்த சோதனை செய்தனர். எதற்காக என்று கேட்டபோது, வழக்கமாக எடுப்பது தான் என்றனர். பின்னர் எனது கணவருக்கு ரத்த சோதனை செய்தனர். பின்னர் என்னிடம் வந்து ரத்தத்தில் கிருமி இருக்கிறது என்றனர். நான் மனம் உடைந்துவிட்டேன். நான் சிறுவயதில் இருந்து ஒரு ஊசி கூட போட்டதில்லை. எனக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படக் காரணம் அரசு தான். என்னை மற்றவர்கள் ஒதுக்கி வைப்பது போல, எனக்கு தெரிகிறது. இந்த ரத்தத்தைக் கொடுத்து அரசு என்னை கொல்லாமல் கொன்றுவிட்டனர். இதற்கு என்னை அரசு கொலையே செய்திருக்கலாம்” என்று அழுதார். பேச்சை தொடர்ந்த அவர், “என்னுடைய இந்த பாதிப்பிற்கு அரசும், மருத்துவமனை ஊழியர்களும் பதில் கூறியே ஆக வேண்டும். இந்த தவறை செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு எல்லா மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். என்னை யாரும் ஒதுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னைப்போல யாருக்குமே பாதிப்பு வரக்கூடாது” என கண்ணீர் வடியக் கூடினார். 

கர்ப்பிணிப் பெண்ணுக்கு தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் பாதிப்பு இல்லாமல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற அலட்சியங்கள் இரு உயிர்களைக் கொல்லும் வகையில் அமைந்துள்ளதோடு அவர்களின் குடும்பத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதற்கு யார் பொறுப்பு ? என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. கர்ப்பிணியோ, அவரது வயிற்றில் வளரும் குழந்தையோ தவறு செய்யாமலேயே வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிக்கும் வகையில் அமைந்தற்கு எந்தவிதமான காரணமும் ஏற்புடையதாக இருக்காது.

loading...

Advertisement

Advertisement

Advertisement