கைகளை கிள்ளி பார்க்கும் நிலையில் தமிழக அரசியல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக அரசியல் களத்தில் தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்தைப் பற்றிதான் ஒரே பேச்சு. இப்படி ஒரு கூட்டம் எப்படி நடந்தது என்பதை நம்ப முடியவில்லை என்கிறார்கள் பலர். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்க, அதற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்ததில் தொடங்கியது இந்த ஆச்சர்யம். ஏனென்றால், திமுக தலைமையில் தனியாக அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கும், அவர்கள் தனியாக பிரதமரை சந்திக்க முயற்சி செய்வார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், ஸ்டாலின் எல்லாத்தையும் மாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்தார். தமிழக அரசு அறிவித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பதோடு, ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைப்போம் என்றார் ஸ்டாலின். அதோடுவிட்டாரா, விவசாய சங்க பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்று சொல்லி அடுத்த பாலிலும் சிக்ஸர் அடித்தார். 


Advertisement

          

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக முடிவெடுத்ததும் அவ்வளவும் சதாரணமான விஷயம் இல்லை. 11 வருடங்களுக்கு பிறகு கூட்டப்படுவதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி தமிழக அரசியலில் ஆக்டிவ் ஆக இருந்திருந்தல் இப்படி ஒரு கூட்டம் சாத்தியமாகி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஜெயலலிதா இல்லாத நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அதிமுக நற்பெயரை அள்ளிக் கொண்டது. எல்லா கட்சிகளுக்கும் அழைப்பிதழை தட்டிவிட்டார்கள். பந்து திமுகவின் பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்வதில் குறிக்கோளாய் இருந்தார்கள். நற்பெயர் தன்பக்கத்தில் இருந்து விலகாமல் பார்த்துக் கொண்டார்கள். வரலாறு முக்கியமல்லவா. 


Advertisement

          

அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்த விஷயங்கள் பலருக்கும் தங்கள் கைகளை கிள்ளிப் பார்க்கும் அளவிற்கு புல்லரித்துவிட்டது. முதலில் கூட்டத்திற்கு வந்தவர்களின் லிஸ்டே மலைக்கும் அளவிற்கு இருந்தது. அவ்வளவு கூட்டம். 39 அரசியல் கட்சி தலைவர்கள், 14 விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பித்துவிட்டார்கள். காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை, மாலை 3 மணிக்கு தொடங்கி 5.15 வரை சுமார் 6 மணி நேரம் கூட்டம் நடந்தது. 6 மணி நேரம் கூட்டம் நடந்தப் போதும், பெரும்பாலும் யாரும் இடையில் எழுந்து செல்லவே இல்லை. கருணாஸ், திருநாவுக்கரசர், தமிழிசை உள்ளிட்ட சிலரை தவிர. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், ஸ்டாலினும், துரைமுருகனும் இறுதிவரை கூட்டத்தில் இருந்தார்கள். சட்டசபையில் எப்பொழுதும் எதிரும் புதிருமாக இருக்கும் திமுக-அதிமுக. ஆளும் கட்சியாக திமுக இருந்தால் அதிமுக வெளிநடப்பு செய்யும், அதிமுக இருந்தால் திமுக வெளிநடப்பு செய்யும். இதுதான் தமிழக அரசியலில் பார்த்து வந்தது. ஜெயலலிதா மறையும் வரை அப்படிதான் இருந்தது. இன்று பார்த்தால், அதிமுக கூட்டிய அனைத்துக் கூட்டத்தில் திமுக கடைசி வரை இருந்தது.

           


Advertisement

கூட்டத்தில் மிகவும் முக்கியமாக கவனிக்க கூடியது என்னவென்றால், திமுகவும், அதிமுகவும் சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் பேசிக்கொள்ளவே இல்லை. ஏதோ தோழமை கட்சிகள் போல் நடந்து கொள்கிறார் என்று பலரும் கண் வைத்திருக்க கூடும். ஒரு சலசலப்பும் கூட்டத்தில் இல்லை. கூட்டம் எப்படி நடந்தது என்பதை மறுநாள் செய்திதாள்களில் வந்த படங்களை பார்த்தாலே புரியும். அமைச்சர்களும், திமுகவினரும் சிரித்துக்கொண்டிருப்பது போல் படங்கள் வெளியானது. இதில், அனைத்துக் கட்சி கூட்டத்தின் உணவு இடைவேளையின் போது, ஸ்டாலின், ஓ.பி.எஸ், வைகோ, வேல்முருகன் ஒன்றாக அமர்ந்து உரையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கடைசியாக ஒரு விஷயம். அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக 3 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. 

ஏன் இவ்வளவு முக்கியமானது இந்தக் கூட்டம் என்பதை இதுவரை நடந்த வரலாறுதான் சொல்ல வைக்கிறது. 2002 ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டிய போது, திமுக தலைவர் கருணாநிதி கட்சி சார்பில் வேறு பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார். அதேபோல், 2007-ல் கருணாநிதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டிய போது, ஜெயலலிதா, பன்னீர் செல்வத்தை அனுப்பி  வைத்தார். கூட்டத்தில் ஜெயலலிதாவின் அறிக்கையை பன்னீர்செல்வம் வாசித்தார். ஜெயலலிதாவும், கருணாநிதியும் எந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் ஒரு சேர கலந்து கொண்டதே இல்லை. இதனால்தான், ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி விவகாரத்தை தேர்தல் அரசியலுக்காகதான் கையாள்கிறார்கள் என்ற விமர்சனம் இன்றளவும் உள்ளது. 

         

அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் கட்சிகளுக்கு பாராட்டுகள் குவிந்தது. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பலரும் இந்த முயற்சியை பாராட்டினார்கள். சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் பாராட்டு மழை பொழிந்தார்கள். கூடவே அனைத்து பொதுப் பிரச்னையிலும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என கோரிக்கையை வைத்தார்கள்.

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இப்படி ஒற்றுமையாக ஒரு அனைத்துக் கூட்டத்தை நடத்தி முடித்திருப்பது தமிழக வரலாற்றில் முக்கிய இடம்பெறக் கூடியது. திமுக, அதிமுக உடனான உறவில் ஏற்பட்டுள்ள இந்த மலர்ச்சி ஆரோக்கியமானது தான். சில தினங்களுக்கு முன்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து திமுக சார்பில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை முதலமைச்சர் பழனிசாமியை ஸ்டாலின் நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். இந்த படமும் வைரலாக பரவியது. 

         

எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் வீரியமாக இருந்த நேரங்களில் நடக்காத விஷயங்கள் எப்படி இப்பொழுது நடக்கிறது என்கிற கேள்வியும் எழவே செய்கிறது. ஜெயலலிதா மறைந்தது முதலே திமுக, அதிமுக உறவில் மாற்றங்கள் ஏற்பட்டது உண்மைதான். சட்டசபையில் துரைமுருகன், பன்னீர் செல்வம் தலைமையிலான அப்போதைய அரசுக்கு ஆதரவாக பேசியது. ஸ்டாலினும், பன்னீர் செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட செய்திகள் எல்லாம் அறிந்ததே. அப்படி இருந்தாலும் இப்பொழுது நடந்திருப்பது எல்லாவற்றையும் தாண்டி சென்றுவிட்டது. இது சிறந்த அரசியல் நாகரீகம் என்று எடுத்துக் கொள்ளவும் சிறிய தயக்கம் இருக்கவே செய்கிறது. 

அதாவது, திமுகவும், அதிமுகவும் தங்களை தவிர வேறு அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் ஒத்த கருத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக, ரஜினி, கமலின் வருகை பெரிய அளவில் அவர்களை கவலை கொள்ள வைக்கவில்லை என்றாலும், ஒரு முன்னெச்சரிக்கைக்காகவது அவர்கள் தங்களது நற்பெயரை தற்காத்துக் கொண்டு வருகிறார்கள். பிப்ரவரி 21ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்த நிலையில், சரியாக 22ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் தங்கள் கட்சி தமிழக மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது என்ற கருத்தினை உறுதி செய்வதில் இரு கட்சிகளும் முனைப்பு காட்டுகிறார்கள் என்பதையும் தாண்டி, இதனை பார்க்க வேண்டியுள்ளது. காகிதப் பூக்கள் என்று ஸ்டாலின் கூறியதை, அமைச்சர் ஜெயக்குமார் ஆமோதிக்கிறார். ஜெயலிதாவும், கருணாநிதியும் அரசியல் களத்தில் இல்லாத நிலையில், ஸ்டாலினும், முதலமைச்சர் பழனிசாமியும் பார்த்துக் கொள்கிறார்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஒருவேளை, எந்த உள்நோக்கமும் இல்லாமல் மக்கள் நலனுக்காக திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயலாற்றுகிறார்கள் என்றால் அது ஆரோக்கியமான விஷயம்தான். அதனைதான் ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.  ஏனென்றால், காவிரி நீர் பிரச்சனையில்  இன்றளவும் கர்நாடக மாநிலத்தின் ஆளும், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இருப்பது கண் கூடு. இதில் கேரளாவும் விதிவிலக்கல்ல!

loading...

Advertisement

Advertisement

Advertisement