[X] Close

சென்னை: ஆட்டோவில் கடத்திச்சென்று பாலியல் தொல்லை; சாதுர்யமாக தப்பி வந்த சிறுவன்!

Subscribe

ஆட்டோவில் கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த கும்பலிடமிருந்து 14 வயது சிறுவன் சாதுர்யமாக தப்பி வந்துள்ளான். கடத்தல் தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


Advertisement

பெண் குழந்தைகள் மட்டும் இன்றி, சிறுவர்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தனியார் நிறுவன ஊழியரின் 14 வயது மகன் கொரோனா காரணமாக விடுமுறை என்பதால் நண்பர்களோடு விளையாடி விட்டு வீட்டின் முதல் தளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். பின்னர் மகனை நீண்ட நேரமாக காணவில்லை என்பதால் காவல்நிலையத்தில் தந்தை புகார் அளிக்கச்சென்றார். அப்போது மகன் அழுதுகொண்டே ஓடிவந்ததை கண்ட தந்தை அதிர்ச்சி அடைந்தார். தன்னை யாரோ கடத்தியதாக சிறுவன் கூறியதையடுத்து தந்தை, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுவனிடம் விசாரித்தபோது, ஆட்டோவில் வந்த 2 பேர், கலர் மீன் வாங்கும் இடத்தின் முகவரி கேட்டதாகவும், முகவரியை கூற வந்தபோது சிறுவனின் வாயைப் பொத்தி, ஆட்டோவில் கடத்திச்சென்றதும் தெரியவந்தது. கடத்தல் கும்பல் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வீட்டிற்கு அழைத்து சென்று அடைத்து வைத்தநிலையில், நீண்டநேரமாக யாரும் வராததால் அங்கிருந்து தப்பி பிரதான சாலைக்கு வந்து லிப்ட் கேட்டு வீடு வந்து சேர்ந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

சிறுவன் கூறியதை முதலில் நம்பாத காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சிறுவனை அடைத்துவைத்த இடத்திற்கு அழைத்துச்சென்றும் விசாரித்தனர். விசாரணைக்குப்பின் சிறுவனை கடத்தியதாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன், அஜீத்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். லோகேஸ்வரன் மீது ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு சிறுவனை கடத்தி சென்ற வழக்கும், கோயம்புத்தூரில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்தி விட்டு அவரது தந்தையை மிரட்டி பணம் பறிப்பதற்காக கைதான 2 பேரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close