[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..!

gotabaya-rajapaksa-controversial-war-hero-who-ended-sri-lanka-s-3-decade-long-bloody-civil-conflict

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு அதிபர் உருவாகியுள்ளார். ராணுவ அதிகாரியாக பணியைத் தொடங்கிய கோத்தபய ராஜபக்ச தற்போது இலங்கை அதிபராக உயர்ந்துள்ளார். இதன் பின்னணி என்ன?

இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மக்களிடையே செல்வாக்கு பெற்ற அரசியல் குடும்பம் ராஜபக்ச குடும்பம். அந்த குடும்பத்தில் இருந்து மற்றுமொரு அதிபர் உருவாகியுள்ளார். டான் ஆல்வின் ராஜபக்ச, இலங்கையின் மூத்த அரசியல்வாதி. இவருக்கு 9 பிள்ளைகள். இந்த 9 பேரில் 5-ஆவது குழந்தையாக 1949-ஆம் ஆண்டு பிறந்தவர் தான் கோத்தபய ராஜபக்ச. தற்போது 70 வயதாகும் கோத்தபய ராஜபக்ச, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர். 

1971ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இணைந்தார் கோத்தபய ராஜபக்ச. ராணுவத்தில் பல்வேறு பதவிகளை பெற்ற கோத்தபய, இந்தியாவின் அஸ்ஸாம், பாகிஸ்தானின் ராவல்பிண்டி, நியூசிலாந்தின் வெலிங்டன் ஆகிய நகரங்களில் பாதுகாப்புத் துறை தொடர்பான பயிற்சிகளைப் பெற்றார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் பாதுகாப்புத் துறை தொடர்பான மேற்படிப்பை முடித்து இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்சவுக்கு ராணுவத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, 1998-இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 

அமெரிக்க குடியுரிமை பெற்றதுடன் அங்கு தொழில்நுட்ப‌ம் சார்ந்த கல்வியை பயின்றார். 2005ஆம் ஆண்டு தேர்தல் பணிகளில் சகோதரர் மகிந்த ராஜபக்‌சவுக்கு உதவும் பொருட்டு இலங்கைக்கு திரும்பினார் கோத்தபய ராஜபக்ச. அவர்கள் எதிர்பார்த்தபடியே மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றார். ராஜபக்ச குடும்பத்தில் இருந்து முதல் அதிபர் உருவானார். மகிந்த ராஜபக்சவின் அரசில், கோத்தபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அரசு எதிர்ப்பாளர்களின் குரல்களை நசுக்கினார் என கோத்தபய மீது குற்றச்சாட்டுகள் உண்டு. சிறுபான்மையின மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழும் நிலைக்கு ஆளாகினர். 

குறிப்பாக ஈழப்போரின்போது தமிழர்களை படுகொலை செய்தார், மனித உரிமை மீறலில் ஈடுபட்டார் என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உண்டு. பத்திரிகையாளர்களை மிரட்டிய புகாரும் இவர் மீது சொல்லப்படுவதுண்டு. அரசு நிதியை தவறாக பயன்படுத்தினார் என்ற வழக்கும் இவர் மீது இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் பொதுஜன முன்னணியின் அதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டார். தொடக்கம் முதலே தீவிர பரப்புரையில் ஈடுபட்ட கோத்தபய, பரப்புரையின்போது பிரதானமாக முன் வைத்த வாக்குறுதி நாட்டின் பாதுகாப்பு.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல்களால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையே கையில் எடுத்து கொண்ட கோத்தபய ராஜபக்ச, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவேன், பயங்கரவாதத்தை வேரறுப்பேன் எனக் கூறி மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். 

ஏற்கெனவே இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்ததும், இவர்கள் குடும்பம் மீது சிங்கள மக்களிடையே நிலவும் செல்வாக்கும் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது. எனினும் சிறுபான்மை மக்களிடையே கோத்தபய ராஜபக்சவுக்கு செல்வாக்கு இல்லை என்பது அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து வந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா, இலங்கை என இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அரசமைப்பு சட்டப்படி தேர்தலில் போட்டியிட‌த் தகுதியில்லை என எதிர்க்கட்சிகள் இவர் மீது குற்றம் சுமத்தின. ஆனால் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து விட்டதாக கோத்தபய ராஜபக்ச தொடர்ந்து கூறி வந்தார். 

இரட்டை குடியுரிமை விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்தவர்களுக்கு அது கைகொடுக்கவில்லை. பாதுகாப்பு துறை மட்டுமல்லாது நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார். அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் சகோதரர் மகிந்த ராஜபக்சவின் வழியில் அரசியலுக்குள் நுழைந்தவர் கோத்தபய ராஜபக்ச. தற்போது அந்த வழியிலேயே அதிபராகவும் ஆகி‌ உள்ளார். ராஜபக்ச குடும்பத்தில் இருந்து இரண்டாவது அதிபர் வந்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இலங்கையின் வெளியுறவு செயல்பாடுகள் சீனாவுக்கு ஆதரவாகவே இருந்தன. 

அந்த காலத்தில் தான் இலங்கையில் சீனாவின் ஆதிக்கமும் அதிகரித்தது. இதனால் இந்தியா அதிருப்தி அடைந்திருந்த நிலையில் மீண்டும் ராஜபக்ச குடும்பம் இலங்கையை ஆளப் போகின்றது. மகிந்தாவை போலவே கோத்தபயவும் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்படுவாரா? இந்த ஆட்சி மாற்றம் இந்தியா இலங்கை உறவிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது எதிர்காலத்தில்தான் தெரிய வரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close