[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கூவம் ஆறு தூய்மையும்.. வாழ்ந்த மண்ணை இழக்கும் மக்களும்..

koovam-river-cleaning-process-and-poor-people-life-journey

கூவம், சென்னை மாநகரில் பாயும் மூன்று ஆறுகளில் ஒன்று. இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் என்னும் சிற்றூரில் கல்லாற்றின் கிளையாறாக உருவாகிறது. ஒரு காலத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடிப்பும், படகு போட்டியும் நடைபெற்றன. இந்த ஆறானது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது. 75 கி.மீ ஓடும் இந்த கூவமானது, சென்னையின் புறநகரில் 40 கிலோமீட்டரும், நகருக்குள் 18 கிலோமீட்டரும் ஓடுகிறது. ஆனால் தற்போது கூவத்தின் நிலமையோ கவலைக்கிடமாக உள்ளது. இன்று கூவத்தை கழிவுநீர் அகற்றும் கால்வாயாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.    

கூவம் எப்படி அசுத்தமாகியிருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். கிழக்கிந்திய நிறுவனம் இங்கிலாந்துக்கு ஆடை ஏற்றுமதி செய்துவந்தது. ஆடைகளுக்கு சாயம் போடுவதற்காக சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து கூவம் அருகே மக்களை குடியேற்றினர். இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் கூவத்தில் கலக்கப்பட்டது. அப்போது தான் முதல் முறையாக கூவம் அசுத்தமானது. பின்னர் தொழில் நிறுவனங்களின் கழிவுநீர் மற்றும் வீடுகளில் இருந்தும் வரும் கழிவுநீர் கூவத்தில் கலந்தது. மேலும் மேலும் குப்பைகளும், கழிவுநீரும் கலந்ததே கூவம் மாசடைய காரணமாக அமைந்தது.
      
பிற்காலத்தில் கூவத்தை சுத்தம் செய்ய அப்போது இருந்த தலைவர்கள் முன்வந்தனர். முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது கூவத்தை அழகு படுத்தும் திட்டத்திற்காக 2.2 கோடி ஒதுக்கினார். அப்போது கருணாதிநி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இத்திட்டத்தினால் கூவத்தில் பல படகுகள் இயக்கப்பட்டதோடு ஏழு இடங்களில் மணிமண்டபங்களும் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதும் கூவத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது, ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை. இதையடுத்து 2015ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதற்காக 2000 கோடி நிதி ஒதுக்கினார். இத்திட்டத்தில் மூன்று கட்டங்களாக கூவம் சுத்தம் செய்யப்பட்டது. இருந்தும் எந்த மாற்றமும் இல்லை. 

தற்போது சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவத்தை சுத்தம் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கூவம் அற்றின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் ஒரு பகுதியாக ஆற்றினை தூர்வாருதல், அகலப்படுத்துதல், கால்வாய் அமைத்தல், இருபுறங்களிலும் கரைகள் அமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக கூவம் ஆற்றின் அருகே வசித்து வரும் மக்களை வேறு இடத்திற்கு அரசு இடம் மாற்றம் செய்து வருகிறது. 

இது குறித்து இசையரசு (சமூக ஆர்வலர்) கூறுகையில், ஆற்றின் கரையில் குடியிருக்கும் மக்கள் பெரும்பாலானோர் பிற்படுத்தபட்ட மக்களும், தலித் மக்களும் தான். இவர்கள் தினசரி கூலி வேலைகளுக்கு சென்றுதான் அன்றாட வாழ்வை கடக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்கு சென்னையில் இருந்து 40 கி.மீ தள்ளி பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி, கூடப்பாக்கம் போன்ற இடங்களில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் வழங்கப்பட்டு, 1 சென்ட் காலி இடமும் வழங்கப்பட்டது. அரசாங்கம் கொடுத்த இந்த மாற்று இடமானது மருத்துவமனைகள், பள்ளிகள், கடைகள் போன்ற எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுற்றிலும் காடுகளாகவே இருக்கின்றது. ஒரே இடத்தில் 15,000 குடும்பங்களை குடியேற்றுவதால் பல்வேறு கலாச்சார சீரழிவுகள் ஏற்படலாம். மக்களுக்கு தனியுரிமை என்பதே இல்லாமல் போய்விடும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் என்ற காரணத்திற்காகதான் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். ஆனால் தற்போது அரசு கொடுத்த மாற்று இடங்களான பெரும்பாக்கம், கண்ணகி நகர் ஆகிய இடங்களும் ஏரிகள் தான். “நகருக்குள் இருந்தால் அது ஆக்கிரமிப்பு, ஆனால் அதுவே நகருக்கு வெளியே இருந்தால் ஆக்கிரமிப்பு ஆகாதா?” என்றார். 

இதுதொடர்பாக அரும்பாக்கம் பகுதி கூவ நதிக்கரையோரம் வசித்து வந்தவரும், தற்போது பெரும்பாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டவருமான சுதாகர் என்பவரிடம் கேட்டோம். அவர் கூறும்போது, “நாங்க 20 வருஷமா அரும்பாக்கம் கூவ நதிக்கரையோரமா தான் இருந்தோம். அங்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, எங்கள பெரும்பாக்கம் பகுதிக்கு இடம் மாற்றிட்டாங்க. எங்க பகுதியில இருந்து இதேபோல 150 வீடுகள் மாற்றப்பட்டிருக்கு. இதுனால நாங்க பெரிய சிரமத்திற்கு உள்ளாகியிருக்கோம். நான் அரும்பாக்கம் பகுதியில தான் கூலி வேலை பாக்குறேன். இப்போ பெரும்பாக்கத்துல இருந்து தினமும் வேலைக்கு வந்துபோக ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்க பிள்ளைங்களும் அரும்பாக்கத்துல தான் ஸ்கூல்ல படிக்குறாங்க. அவங்களும் தினமும் ஸ்கூல் வந்துபோகுறதும் ரொம்ப சிரமமா இருக்கு. பெரும்பாக்கத்துல எங்க வீடு இருக்குற பகுதியில கடை, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்ல. ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு”  என்று புலம்பினார்.

இவ்வளவு பாதிப்புகள் இருப்பினும் கூவத்தை சுத்தம் செய்வது நம் கடமை ஆகும். அதேசமயம் பல ஆண்டுகளாக சென்னைக்குள் வசித்த மக்களை திடீரென சென்னையிலிருந்து அப்புறப்படுத்தினால், அவர்களது வாழ்வும் அகதிகள் போல மாறிவிடும் என்பதே அனைவரது கருத்தாக இருக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close