[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

“பெண்களின் அலறல் குரலைக் கேட்டால் நெஞ்சு வெடித்துவிடும்” - வைகோ வேதனை

vaiko-condemn-pollachi-sexual-harassment-issue

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்ப முடியாது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் மற்றும் நெட்டிசன்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அனைவரும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர் வைகோ  கண்டணம் தெரிவித்துள்ளார். அதில் “தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத, நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவங்கள், பொள்ளாச்சி பகுதியில் அரங்கேறி இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவிகளை, வேலைக்குச் செல்லும் இளம் பெண்களை நேரிலும் முகநூலிலும் பழகி நட்பாக நடித்து, காதல் வலையில் ஏமாற்றி வீழ்த்தி, சின்னப்பாளையம் பண்ணை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களைக் கதறக் கதற நாசமாக்கிய மிருக வெறி பிடித்த காமுகர் கூட்டத்தின் அக்கிரமச் செயல்கள், காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இந்தப் பயங்கரச் செய்தி, உள்ளத்தை உறைய வைக்கின்றது.

அந்தக்  காட்சிகளைக் காண முடியாது. அந்தப் பெண்களின் அலறல் குரலைக் காது கொடுத்துக் கேட்டால், நெஞ்சு வெடித்துவிடும் போல் உள்ளது. நூற்றுக்கணக்கான இளம்பெண்கள், சிறுமிகளை இந்தக் கும்பல் சீரழித்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இப்பெண்களும், அக்குடும்பத்தினரும், நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று பதறுகின்றார்கள். அவர்கள் இதுவரை வாழ்ந்த வந்த பகுதியில் இனி எப்படி அவர்கள் தலைநிமிர்ந்து நடக்க முடியும்? ஐயோ, நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.

மிருகங்களை விடக் கொடிய இப்பாவிகளைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண்களை, வெளிப்படையான விசாரணைக்கு ஆளாக்காமல், அவர்களுக்குப் பெரும் தலைக்குனிவு ஏற்படாத வகையில், மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரணை நடைபெற வேண்டும். 

Image result for vaiko

இந்த நாசக்காரர்களைப் பாதுகாக்க, ஆளுங்கட்சியின் கரங்கள் நீளுகின்றன என்ற செய்தி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. இந்த இழி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களைப் பாதுகாக்க முனைந்தவர்கள், நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் அனைவரும், சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட வேண்டும்; கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.  தக்க நடவடிக்கையை அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாவிடில், அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமை இயக்கங்களும் கிளர்ந்து எழுவார்கள். குற்றவாளிகள் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close