[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

அடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் !

the-journey-of-india-s-yorker-man-bumrah

பொதுவாக ஆசிய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களைவிட சுழற்பந்து வீச்சாளர்களே சிறப்பாக செயல்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இதற்கு மாறாக சமீபத்தில் இந்திய அணியின் எழுச்சிக்கு வேகப்பந்து வீச்சாளர்களே முக்கிய காரணமாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆகவே அவர் மீது அதிக வெளிச்சம் விழுந்துள்ளது. சரி, இவர் கடந்த வந்த பாதையை பார்ப்போமா? 

ஜஸ்பிரித் பும்ராவிற்கு 7 வயதாக இருந்தப் போது தனது தந்தையை அவர் இழந்துவிட்டார். எனவே இவரையும் இவரது சகோதரியையும் அவரது தாயார் தல்ஜீத் வளர்த்து வந்தார். பும்ராவுக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம்.  ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரின் சிறப்பு, துல்லியமாக யார்கர் (Yorker) பந்துகள் வீசுவதுதான். இதனைத் துல்லியமாக வீச காரணமாக இருந்தது பும்ராவின் தாயாரின் ஒரு சொல். 

பும்ராவின் குடும்பம் குஜராத் மாநிலத்தில் வசித்து வந்தது. அங்கு கோடை காலத்தில் அதிகளவில் வெயில் வாட்டி வதைக்கும். ஆகவே பும்ரா வெயிலில் விளையாடுவதற்கு பதிலாக வீட்டிற்குள் டென்னிஸ் பந்தை வைத்து விளையாட தீர்மானித்தார். அப்போது இவரது தாயார் சுவரில் அடித்து விளையாடுவதால் அதிக சத்தம் வருகிறது. என்னால் தூங்க முடியவில்லை எனக் கூறி பும்ராவை திட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பும்ரா சுவரின் அடிப் பகுதியான இடத்தில் துல்லியமாக பந்தைவீச தொடங்கினார். அவ்வாறு வீசிய போது சத்தம் குறைவாக வந்தது. எனவே பும்ரா வீட்டிற்குள் அதையே கடைபிடிக்க ஆரம்பித்தார். 

இந்தப் பயிற்சியால் அவர் டென்னிஸ் பந்துகள் உடன் கிரிக்கெட் விளையாடும் போது யார்கர் வீசுவது எளிதானது. இவரின் திறமையால் 2011ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் 19வயதுக்கு உட்பட்டோர் அணியில் சேர்ந்தார். அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு குஜராத்  மாநில டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். குஜராத் அணியின் டி20 போட்டியில் பும்ரா விளையாடும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் அந்தப் போட்டியை பார்த்தார். 

அப்போது அசத்தலாக பந்துவீசிய பும்ரா தொடர்ந்து யார்கர் பந்தாக வீசினார். அசந்து போன ஜான் ரைட், பும்ராவை மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்காக ஒப்பந்தம் செய்ய வைத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் மலிங்கா, மிட்சேல் ஜான்சான் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். குறிப்பாக மலிங்கா, பும்ராவிற்கு ஒரு பயிற்சியாளரை போல் சிறப்பாக உதவி செய்தார். பந்துவீச்சில் சில வேறுபாடுகளை கற்றுக் கொள்ளுமாறு பும்ராவிற்கு மலிங்கா வலியுறுத்தினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா முதலில் களமிறங்கினார். இந்தப் போட்டியில் பும்ரா அசத்தலாக பந்து வீசி, விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார். அத்துடன் இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய கடைசி ஓவர் பந்துவீச்சாளராக பும்ரா உருவெடுத்தார். 

2016ஆம் ஆண்டு முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, ஆஸ்திரேலியா தொடருக்கு பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரிலேயே பும்ரா தனது வித்தியாசமான பந்துவீச்சு முறை மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கடைசி ஓவர்களை வீசும் சிறப்பு பந்துவீச்சாளராகவே பும்ரா விரைவில் மாறினார். 

இதற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பும்ரா சரியாக பந்துவீசவில்லை. இந்தத் தொடரில் 5 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே பும்ரா எடுத்தார். எனினும் கடைசி ஓவர்களில் இவர் மிக குறைந்த ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் (Death Over Specialist) என்ற பட்டத்தை தக்கவைத்தார். 

எனினும் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சாதித்ததைபோல டெஸ்ட் போட்டியில் சாதிக்க முடியாது என்று பல விமர்சனங்கள் எழுந்தன. இதனை முறியடிக்கும் விதமாக பும்ராவின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் தற்போது அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு பும்ரா முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பும்ரா அசத்தலாக விளையாடினார். இதுவரை விளையாடி உள்ள 12 டெஸ்ட் போட்டியில் 62 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பும்ரா ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். 

மேலும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையை செய்யும் முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இந்தச் சாதனைகளின் மூலம் பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 7ஆவது இடத்திலிருந்து பும்ரா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஏற்கெனவே பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடத்தில் உள்ளார். 

இந்திய அணிக்காக கபில் தேவ், ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரிலும் இருந்து பும்ரா தனது பந்துவீச்சு முறையில் மட்டும் மாறுபடாமல் மொத்தமாகவே மாறுபட்டிருக்கிறார். பும்ராவின் இந்த அதிவிரைவு வளர்ச்சி தொடர வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாக உள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close