[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

கடைசி ஓவரில்தான் ஜெயிப்பீர்களா ? - சிஎஸ்கே ரசிகர்களின் பெருமூச்சு.. 

chennai-super-kings-winning-in-last-moment-in-every-match

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

12வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அனைத்திலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

        

சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் சிஎஸ்கே அணி கடைசி ஓவரின் கடைசி பந்து வரை பரபரப்பை கொண்டு சென்று வெற்றியை வசப்படுத்தியது. எல்லா போட்டிகளையும் இப்படி கடைசி வரை கொண்டு செல்வது சிஎஸ்கேவுக்கு, அதாவது தோனி தலைமையிலான அணிக்கு எழுதப்படாத விதியாகவே உள்ளது. ஒவ்வொரு போட்டியையும் சிஎஸ்கே இப்படிதான் முடிக்கிறது. கடைசி நேரம் வரை ரசிகர்களுக்கு அவ்வளவு திக்திக் என்ற மனநிலை வந்துவிடுகிறது. சில நேரங்களில் கோபம் கூட வந்துவிடுகிறது. மிகவும் எளிதில் வெற்றி பெறக் கூடிய போட்டியை ஏன் இப்படி கடைசி வரை கொண்டு சென்று பரபரப்பை உண்டாக்குகிறார்கள் என்று. 

             

முதல் போட்டியை எடுத்துக் கொண்டால், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அந்த 70 ரன்களையும் அடிப்பதற்கும் 18வது ஓவரை வரை சிஎஸ்கே விளையாடியது. வேறு எந்த அணியும் இப்படி விளையாடியிருக்குமா? என்பது ஐயமே. ஒரு டெஸ்ட் போட்டியை பார்ப்பது போன்று ஆகிவிட்டது. இத்தனைக்கு தோனி ஆட்டத்தில் களமிறங்கவே இல்லை. அவர் இறங்கியிருந்தால், 20வது ஓவரில்தான் வெற்றி கிடைத்திருக்கும். யாருமே 100 ஸ்டிரைக் ரேட் கூட எட்டவில்லை. அப்பொழுது என்ன சொன்னார்கள் என்றால், இப்படி விளையாடினால் மற்ற அணிகளுடன் சிஎஸ்கே வெற்றி பெறுவது கடினம் என்று. 

          

டெல்லி அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது. டெல்லியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 147 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியில், வாட்சன் 44 (26), ரெய்னா 30 (16) ரன்கள் எடுக்க வெற்றி எளிதாக மாறியது. அதாவது, 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அடுத்த 10 ஓவர்களில் 51 ரன்கள்தான் தேவை. ஆனால், அந்த 51 ரன்னையும் 58வது பந்தில் அதாவது கடைசி ஓவரின் 4வது பந்தில்தான் சிஎஸ்கே அணி அடித்தது. 

                      

மற்ற அணிகளாக இருந்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு 17வது ஓவரில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், தோனியும், கேதர் ஜாதவும் ஒரு நாள் போட்டியைவிட மோசமாக விளையாடினர். சில நேரங்களில் டெஸ்ட் போட்டியைப் போல் ஆகிவிட்டது. கடைசி ஓவரில் வெறும் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் கேதர் அவுட் ஆக, அடுத்த இரண்டு பந்துகளை பிராவோ டாட் ஆக்கினார். அதனால், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறவைத்தார் பிராவோ. 

                

இந்த நிலையில்தான், நேற்று நடைபெற்ற போட்டியிலும் கடைசி ஓவரை வரை சிஎஸ்கே போட்டியை கொண்டு சென்றது. முதலில் விளையாடிய சென்னை அணி 175 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 46 பந்தில் 75 விளாசினார். 176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17 ரன்னிற்குள் 3 விக்கெட்களை இழந்துவிட்டது. அப்போது, போட்டி சென்னை வசம் இருந்தது.

                 

ஆனால், திரிபாதி, ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் சரிவில் இருந்து மீண்டது. 10 ஓவர்களில் அந்த அணி 75 ரன்களை எட்டிவிட்டது. மீதமுள்ள 10 ஓவர்களில் 100 ரன்கள் தேவைப்பட்டது. திரிபாதி 39(24), ஸ்மித் 28(30), கௌதம் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 120 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்துவிட்டது. அப்போது, போட்டி சென்னை வசம் இருப்பதாக தோன்றியது. 

                  

ஆனால், பென்ஸ் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஜோடி சென்னை அணியை மிரட்டியது. இருவரும் சிக்ஸர்களாக பறக்கவிட்டனர். அதனால், போட்டி மெல்ல மெல்ல சென்னை அணியின் கையைவிட்டு நழுவியது. கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மிரட்டலாக விளையாடி வந்த ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்த நேரத்தில் சென்னை அணி எப்படி வெற்றி பெறும் என பெரிய கேள்வி எழுந்தது. ஏனெனில் ஒரு சிக்ஸர் அடித்தாலும் போட்டியின் நிலை மாறிவிடும். கடைசி ஓவரை பிராவோ வீசினார். 18வது ஓவரில் அவர் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். அவர் ஓவரில் ஸ்டோக்ஸ், ஆர்க்கர் இருவரும் சிக்ஸர் அடித்து இருந்தனர். 

             

பிராவோவிடம், தோனி நீண்ட நேரம் பேசினார். கைகளை அசைத்து ஏதேதோ ஆலோசனைகளை கொடுத்தார். முதல் பந்திலே ஸ்டோக்ஸை ஆட்டமிழக்க செய்தார் பிராவோ. ஸ்டோக்ஸ் அடித்த பந்தினை ரெய்னா அற்புதமாக கேட்ச் பிடித்தார். அடுத்து, 5 பந்துகளில் 12 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஆர்ச்சர் ஸ்டிரைக்கில் இல்லை. புதிதாக வந்த கோபால் பேட்டிங் செய்தார். இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. 3வது பந்தில் ஒரு ரன் லெக்-பை மூலம் கிடைத்தது. 4வது பந்தினை ஆர்ச்சர் சந்தித்தார். 

                

அப்பொழுதும் 3 பந்தில் 11 ரன்கள் என்ற நிலை இருந்தது. இரண்டு சிக்ஸர் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஒரு சிக்ஸர் அடித்தாலும் நிலைமை மாறிவிடும். ஆனால், ஆர்க்கர் ஒரே ஒரு சிங்கிள் மட்டுமே எடுத்தார். அப்பொழுதே சென்னை அணியின் வெற்றி உறுதியானது. 5வது பந்தில் கோபால் அவுட் ஆக, கடைசி பந்தில் ஆர்ச்சர் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களையும் சாய்த்தார் பிராவோ. 

               

விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும், சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. எல்லா போட்டிகளிலும் இறுதிக்கட்டம் வரை போட்டியை சிஎஸ்கே எடுத்துச் சென்றது. ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக இப்படிதான் விளையாடி வருகிறது. இது சிஎஸ்கே அணியின் எழுதப்படாத விதியாகவே உள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close